செங்கல்பட்டு, ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளில் வார்டு மறுவரையறையில் குளறுபடி: ஆளும் கட்சி மீது திமுக குற்றச்சாட்டு

சென்னை: செங்கல்பட்டு மாவட்ட ஊரக மற்றும் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் வார்டு மறுவரையறை குறித்த கருத்து கேட்பு கூட்டம் கலெக்டர் ஜான் லூயிஸ் தலைமையில் நேற்று முன்தினம் நடந்தது.இதில், மாவட்ட திட்ட இயக்குநர் தர், மகளிர் திட்டம் நகராட்சிகள் மண்டல நிர்வாக இயக்குனர், ஊராட்சிகள் உதவி இயக்குனர் உள்பட செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த நகராட்சி ஆணையர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதில் பல்லாவரம் திமுக எம்.எல்.ஏ.இ கருணாநிதி, “பல்லாவரம் நகராட்சி வார்டு மறுவரையறையில் குழப்பம் உள்ளது. சரிவர மறுவரையறை செய்யவில்லை“ என்று கூறி மனு அளித்தார்.இதை தொடர்ந்து திருப்போரூர் திமுக எம்எல்ஏ இதயவர்மன், திமுக நிர்வாகிகள் தண்டபானி, நரேந்திரன், தமிழ்மணி, கார்த்திக், ராஜி ஆப்பூர் சந்தானம் உள்ளிட்டோர் செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரி, காட்டாங்கொளத்தூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர் ஆகிய பகுதிகளில் வார்டு மறுவரைகள் சரிவர நடத்தவில்லை என கூறி மனு அளித்தனர்.
Advertising
Advertising

அதில், ஒரு வார்டில் 4000 வாக்காளர்கள் உள்ளதாகவும் மற்றொரு வார்டில் வெறும் 1500 வாக்காளர்கள் இருப்பதாகவும் இதனால் குழப்பம் நிலவுகிறது. 2011ம் ஆண்டு மக்கள் தொகையின் அடிப்படையில் வார்டு மறுவரையறை எடுக்கவில்லை. 2001ம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் மறுவரையரை செய்யப்பட்டுள்ளது என புகார் தெரிவித்தனர்.அதற்கு அதிகாரிகள், ‘‘தற்போது வார்டு மறுவரையறை சரியாக எடுக்கப்பட்டுள்ளது. இந்த மறுவரையறை சரியானது’’ என்றனர்.இதனால் ஆத்திரமடைந்த திமுகவினர் அதிகாரிகள் ஒருதலைபட்சமாக செயல்படுகின்றனர். ஆளும் கட்சியினருக்கு சாதகமாக வார்டு மறுவரையறை செய்யப்பட்டுள்ளது. எனவே கூட்டத்தை புறக்கணிப்பதாக கூறி வெளிநடப்பு செய்தனர். பின்னர் மாவட்ட நிர்வாகம் மற்றும் அதிகாரிகளை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடத்திவிட்டு கலைந்து சென்றனர்.

ஸ்ரீபெரும்புதூர் :காஞ்சிபுரம் மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டது. தற்போது காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூர், பெரும்புதூர், குன்றத்தூர் ஆகிய 5 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. அதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம்

மாவட்டத்திற்குற்பட்ட 5 ஊராட்சி ஒன்றியங்களுக்கான கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றிய வார்டு மற்றும் மாவட்ட ஊராட்சி வார்டுகளுக்கான எல்லை மறுவரையறை நடத்தபட்டது.காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், மாவட்ட ஊராட்சி, பேரூராட்சிகள் மற்றும் நகராட்சிகளை உள்ளடக்கிய அமைப்புகளின் வார்டுகள் மறுவரையறை பணிகளுக்காக வார்டு மறுவரையறை வரைவு முன்மொழிவுகள் ஊராட்சிகள் ஒன்றிய அலுவலகங்கள், நகராட்சி அலுவலகம், பேரூராட்சி அலுவலகம், கிராம ஊராட்சி அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள், மாவட்ட ஊராட்சி அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலகம் ஆகிய இடங்களில் வெளியிடப்பட்டது. இதன் மீது பொதுமக்களின் கருத்துக்கள் மற்றும் மறுப்புகளை அளிக்க பிப்ரவரி 8ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டது. தற்போது பெரும்புதூர் ஒன்றியத்தில் உள்ள பல வார்டுகளில் குளறுபடிகள் நடைபெற்றுள்ளன என்றும் அதிமுகவினருக்கு சாதகமாக வார்டு வரையறை செய்யப்ட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து பல்வேறு கட்சி நிர்வாகிகள் கூறியதாவது; பெரும்புதூர் ஒன்றியத்தில் 2 மாவட்ட கவுன்சிலர், 16 ஒன்றிய கவுன்சிலர், 58 ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான உள்ளாட்சி பதவிகள் உள்ளன. தற்போது ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய வார்டு வரையறை செய்யப்பட்டுள்ளது. வார்டு மறுவரையறை கடந்த 1ம் தேதி வெளியிடப்பட்டது. மறுப்பு தெரிவிக்க 8ம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டது. எத்தனை முறை மறுப்பு தெரிவித்தாலும் ஆளுங்கட்சியினருக்கு அதிகாரிகள் துணை போவதை தடுக்க முடியாது.உதாரணமாக, பெரும்புதூர் ஒன்றியத்தில் ஒன்றிய கவுன்சிலர் வார்டு எண்கள் 6,7,8,13,14,16 ஆகிய வார்டுகளில் 5 முதல் 6 ஊராட்சிகள் அடங்கி உள்ளன. இந்த ஊராட்சிகளில் வருவாய் குறைந்த ஊராட்சிகளாகும், இருங்காட்டுகோட்டை, பென்னலூர் ஆகிய இரண்டு ஊராட்சிகளை சேர்த்து ஒரு வார்டாக உருவாக்கப்பட்டுள்ளது. மொளச்சூர் ஊராட்சியை இரண்டு வார்டாக பிரித்து ஒரு பகுதியை 21வது வார்டில் இணைக்கப்பட்டுள்ளது. இதேபோல் பல குளறுபடிகள் நடத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து ஏற்கனவே புகார் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை, தற்போது வெளியிட்ட வார்டு வரையறையிலும் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் போராட்டம் நடத்தப்படும் என்று எதிர்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

Related Stories: