தமிழகம் முழுவதும் விடிய விடிய ஆர்ப்பாட்டம்: முஸ்லிம்கள் போராட்டம் 3வது நாளாக நீடிப்பு: முத்துப்பேட்டையில் துணை ராணுவம் குவிப்பு

மதுரை: குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கடந்த 14ம் தேதி சென்னை வண்ணாரப்பேட்டையில் போராட்டம் நடத்திய முஸ்லிம் பெண்கள் மற்றும் இளைஞர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதில் 100க்கும் மேற்பட்டோர்  காயமடைந்தனர். போலீசாரின் நடவடிக்கையை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இஸ்லாமிய அமைப்பினர் ஆர்ப்பாட்டம், மறியல் உள்ளிட்ட தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.மதுரையில் கோரிப்பாளையம், நெல்பேட்டை, உத்தங்குடி, மகபூப்பாளையம், புதூர் உள்ளிட்ட பகுதிகளில், கடந்த 14ம் தேதி இரவு முஸ்லிம்கள் நடத்திய மறியல் உள்ளிட்ட போராட்டங்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை  மகபூப்பாளையத்தில், போராட்டத்தில் ஈடுபட்ட ஜமா அத் நிர்வாகிகள் தலைமையிலான, முஸ்லிம் அமைப்பினர், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக, தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றும் வரை போராட்டத்தை கைவிட  மாட்டோம் என அறிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 இதனையடுத்து, மூன்றாம் நாளாக நேற்றும் மகபூப்பாளையம் ஜின்னா திடலில் இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் ஏராளமான முஸ்லிம் பெண்கள் மற்றும் இளைஞர்கள்  அமைதி  வழியில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  ஏடிஜிபி ஆலோசனை: இந்நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடக்கும் போராட்டங்களை கண்காணிக்க நியமிக்கப்பட்ட ஏடிஜிபி அபய்குமார் சிங் நேற்று மதுரை வந்தார். கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை  நடத்தினார்.

முத்துப்பேட்டையில்: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் அனைத்து ஜமாஅத் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் ஒருங்கிணைந்து குடியுரிமை திருத்தச்சட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில், தமிழக சட்டமன்றத்தில் குடியுரிமை திருத்த  சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற கோரியும், தமிழகத்தில் சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் கணக்கெடுப்பை நடத்தக்கூடாது என்றும் வலியுறுத்தியும் நேற்றுமுன்தினம் மாலை முதல் தொடர் காத்திருப்பு போராட்டத்தை துவங்கியுள்ளனர்.  இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் குழந்தைகளுடன் பங்கேற்றுள்ளனர். இரவிலும் தொடர்ந்த போராட்டம் நேற்றும் 2வது நாளாக நீடித்தது.

இந்நிலையில் கோவையில் உள்ள ஆர்ஏஎப் என்ற மத்திய துணை ராணுவ படையினர், டிஎஸ்பி கார்த்திக், இன்ஸ்பெக்டர் லிவிவிட்டோ,எஸ்.ஐ சத்தியா ஆகியோர் தலைமையில் முத்துப்பேட்டைக்கு வந்துள்ளனர். அவர்கள் முத்துப்பேட்டையில்  முக்கிய இடங்களில் ஆய்வு நடத்தினர். துணை ராணுவ குவிப்பால் பதற்றம் நிலவுகிறது.எஸ்பி அலுவலகம் முற்றுகை முயற்சி: நாகையில் நேற்று எஸ்பி அலுவலகத்தை முற்றுகையிட வந்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பை சேர்ந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர் பப்ளிக் ஆபீஸ் சாலையில் ஒன்று கூடி  ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் வேலூர் அண்ணா கலையரங்கம் அருகில் நேற்று அனைத்து இஸ்லாமிய ஜமாஅத்துகள் சார்பில் மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் எதிராக கண்டன கோஷங்களை எழுப்பியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  அதேபோல் பேரணாம்பட்டில் நேற்று காலை அனைத்து இஸ்லாமிய ஜமாஅத்துகள் ஆர்ப்பாட்டம் நடந்தது. ராணிப்பேட்டை முத்துக்கடையில் திரளானோர் பங்கேற்றனர்.

திருப்பூரில்: திருப்பூர் மாநகர் பகுதிக்குட்பட்பட அறிவொளி ரோடு பகுதியைச் சார்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் தொடர் போராட்டத்தை கடந்த 15ம் தேதி துவக்கினர். இந்த போராட்டம் 2ம் நாளாக நேற்றும் நடந்தது. தடியடி நடத்திய  காவல்துறை அதிகாரி மற்றும் போலீசாரை சஸ்பெண்ட் செய்யும் வரை போராட்டம் தொடரும் என அவர்கள் கூறினர். இதேபோன்று பெருமாநல்லுார் ரோடு, புது பஸ் ஸ்டாண்ட் அருகே பந்தல் அமைத்து இஸ்லாமிய அமைப்பை சார்ந்த  ஆண்களும், பெண்களும் தொடர் தர்ணா போராட்டத்தை நேற்று காலை முதல் துவங்கினர்.

பவானி: ஈரோடு மாவட்டம் பவானியில் அந்தியூர் மேட்டூர் பிரிவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பல்வேறு அமைப்பினரும், கட்சியினரும் கலந்து கொண்டனர். மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே காரமடை சாலையில் அனைத்து கட்சியினர் மற்றும் முஸ்லிம் அமைப்புகள் சார்பில் தேசிய கொடிகளை ஏந்தியவாறு பேரணி நடந்தது.

மேலப்பாளையத்தில் பேரணி: குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெற வேண்டும், தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடியுரிமை பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட  கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் நேற்று பிரமாண்ட பேரணி நடந்தது. இதில் ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர்கள் திரளாக தேசிய கொடி ஏந்தி பங்கேற்றனர்.

Related Stories: