திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடனமாடிய மணமகன் மாரடைப்பில் உயிரிழப்பு: தெலங்கானாவில் பரிதாபம்

திருமலை: திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடனமாடிய மணமகன் மாரடைப்பில் உயிரிழந்தார். இச்சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. தெலங்கானாவில் பிராமணகல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் கணேஷ். இவர் துபாயில் பணிபுரிந்து வந்தார். கணேஷ்க்கும், சாலூரா கிராமத்தை சேர்ந்த சொப்னாவிற்கும் திருமணம் செய்ய பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த வாரம் துபாயிலிருந்து கணேஷ் நிஜமாபாத்திற்கு வந்தார். கணேஷ் வந்தவுடனேயே திருமணம் செய்வதற்காக திட்டமிட்டபடி நேற்று முன்தினம் போதனில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது.  திருமணத்திற்கு பிறகு மணமக்கள் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.

இதில் சினிமா பாடல்களுக்கு அனைவரும் ஆடிப்பாடி வந்தனர். இதனைப்பார்த்த மணமக்கள் கணேஷ், சொப்னாவும் நடனமாடினர். நடனமாடிக் கொண்டிருந்த போது திடீரென கணேஷ் மயங்கி கீழே விழுந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த  உறவினர்கள் உடனே அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் கணேஷ் ஏற்கனவே மாரடைப்பால் இறந்து விட்டதாக கூறினர். திருமணமாகி 12 மணி நேரம் கூட  ஆகாத நிலையில் மணமகன் மகிழ்ச்சியாக நடனமாடிக் கொண்டிருந்த போது, திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் இரு வீட்டார் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது. இச்சம்பவம் திருமணத்தை காண வந்த உறவினர்கள்,  பொதுமக்களையும் கண்கலங்க வைத்தது. இதுகுறித்து போதன் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: