டிரம்ப்பை வரவேற்கும் நிகழ்ச்சியின் ‘கெம் சோ டிரம்ப்’ என்ற பெயர்‘நமஸ்தே அதிபர் டிரம்ப்’ ஆனது: மத்திய அரசு திடீர் உத்தரவு

புதுடெல்லி: அமெரிக்க அதிபர் டிரம்ப்பை வரவேற்பதற்காக ‘கெம் சோ’ என்ற பெயரில் நடத்தப்பட இருந்த நிகழ்ச்சியின் பெயரை ‘நமஸ்தே  அதிபர் டிரம்ப்’ என்று மத்திய அரசு மாற்றியுள்ளது.அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், தனது மனைவி மெலனியாவுடன் வரும் 24ம் தேதி இந்தியாவுக்கு 2 நாள் சுற்றுப் பயணம் வருகிறார். அமெரிக்க அதிபரான பிறகு, அவர் இந்தியா வருவதே இதுவே முதல் முறை.  எனவே, அவருடைய  வருகையை மிகவும் பிரமாண்டமான முறையில் கொண்டாட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தனது வருகையின்போது, குஜராத்தில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் டிரம்ப்புக்கு, ‘கெம் சோ டிரம்ப்?’ (எப்படி இருக்கிறீர்கள் டிரம்ப்?)  என்ற பெயரில் குஜராத் அரசு விழா எடுக்கிறது. இது, குஜராத்தி மொழி. பிரதமர் மோடி சில மாதங்களுக்கு முன் அமெரிக்கா சென்றபோது, ‘ஹவ்டி மோடி’ (எப்படி இருக்கிறீர்கள் மோடி?) என்ற பெயரில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதேபோல்,  டிரம்ப்பின் நிகழ்ச்சிக்கு இந்த பெயர் சூட்டப்பட்டது. இந்த பெயரில்தான் டிரம்ப்பை வரவேற்க, குஜராத் அரசு விளம்பரங்கள் செய்து வருகிறது.

இந்நிலையில், ‘கெம் சோ டிரம்ப்?’ என்ற பெயரை மத்திய அரசு மாற்றி இருக்கிறது. டிரம்ப்பின் வருகையை ‘நமஸ்தே அதிபர் டிரம்ப்’ என்ற பெயரில் கொண்டாடும்படி குஜராத் அரசுக்கு அது உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, ‘கெம் சோ’ பெயரை  மாற்றி விட்டு, இந்த புதிய பெயரில் குஜராத் அரசு நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்து வருகிறது. ‘நமஸ்தே’ என்பது நாடு முழுவதற்கும் பொதுவாக உள்ளது. ‘கெம் சோ’ என்பது குஜராத் மாநிலத்துக்கான நிகழ்ச்சியாக மட்டுமே இருக்கும் என்பதால்,  இந்த பெயர் மாற்றத்தை மத்திய அரசு செய்துள்ளது. இதன் மூலம், டிரம்ப் வருகையை தேசிய நிகழ்ச்சியாக நடத்த அது முடிவு செய்துள்ளது.

Related Stories: