×

டெல்லி ஜமியா மிலியா பல்கலை நூலகத்தில் புகுந்து மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்திய வீடியோ காட்சிகள் வெளியீடு

புதுடெல்லி: சிஏஏ.க்கு எதிரான போராட்டத்தின்போது, ஜமியா மிலியா பல்கலைக்கழகத்தின் நூலகத்தில் புகுந்து புத்தகங்கள் படித்துக் கொண்டிருந்த மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்திய வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி  உள்ளது. இதற்கு பல்வேறு கட்சி தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். கடந்தாண்டு டிச.15ம் தேதி, டெல்லியில் ஜமியா மிலியா பல்கலைக்கழத்தின் அருகே குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டம் வன்முறையாக மாறியது. ஆர்ப்பாட்டக்காரர்கள் காவல்துறையினர் மீது கற்களை வீசி, அரசு  பேருந்துகள் மற்றும் தனியார் வாகனங்களுக்கு தீ வைத்தனர். இதனால் போலீசார் ஜமியா பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்து, கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசி, மாணவர்கள் மீது தடியடி நடத்தினர்.
வளாகத்திற்குள் போராட்டத்தின்போது தீ மற்றும் வன்முறையில் ஈடுபட்ட ஆட்களை தேடும்போது, போலீசார் அங்குள்ள நூலகத்திற்குள்ளும் திடீரென நுழைந்தனர்.

நூலகத்தில் புத்தகங்களை படித்துக் கொண்டிருந்த பல மாணவர்களை, போலீசார் லத்தியால் தாக்குதல் நடத்தினர். இவர்களில் 10க்கும் மேற்பட்ட போலீசார் முகமூடி அணிந்திருந்தனர். அதனால், அவர்கள் முக அடையாளங்கள் தெரியவில்லை.  மாணவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியதற்கு, நாடு முழுவதும் கடும் பலர் கண்டனம் தெரிவித்த நிலையில், தற்போது போலீசார் மாணவர்களை தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது. இந்த வீடியோவை, பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பழைய மாணவர்களைக் கொண்ட ஒரு குழுவான ஜமியா ஒருங்கிணைப்புக் குழு (ஜேசிசி) வெளியிட்டுள்ளது. டிச.15ல் நூலகத்தில் நடந்த சம்பவம் ெதாடர்பான சிசிடிவி காட்சிகள்,  டிவிட்டரில் டிரெண்டிங் ஆகிவருகிறது.

போலீசாரின் மிருகத்தனமான தாக்குதலை பலரும் கண்டித்து கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். இந்த வீடியோ நேற்று சமூக ஊடகங்களில் வெளியான பின்னர், நெட்டிசன்கள் டிவிட்டரில், ‘‘மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய டெல்லி போலீசாரே உங்களுக்கு வெட்கமாக இல்லையா?’’ எனக்கேட்டு கண்டனம் தெரிவித்துள்ளனர். பல்வேறு  கட்சி தலைவர்களும் போலீசாருக்கு எதிராக கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

போலீஸ் மீது என்ன நடவடிக்கை? பிரியங்கா காந்தி கேள்வி

டிவிட்டரில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: நூலகத்தில் மாணவர்களை, டெல்லி போலீசார் கண்மூடித்தனமாக தாக்குவதை பாருங்கள். ஒரு மாணவர் புத்தகத்தை வைத்து மறிக்கிறார். அவரை போலீஸ்காரர் லத்தியால் தொடர்ந்து தாக்குகிறார். ஆனால் உள்துறை அமைச்சரும், டெல்லி  போலீசாரும், நூலகத்தில் மாணவர்கள் தாக்கப்படவில்லை என பொய் கூறினர். ஜமியா பல்கலை வீடியோவை பார்த்த பிறகும், போலீசார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றால், மத்திய அரசின் நோக்கம் நாட்டு மக்கள் முன்பு வெளிப்படும் என்று கூறியுள்ளார்.

Tags : Delhi ,student ,Jamia Melia University ,Delhi Police ,Malia University ,Jamia , Video of Jamia Malia University's Delhi Police Striking Video
× RELATED அவசர வழக்குகள் மட்டுமே காணொலி காட்சி...