பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் முன்னிலையில் டெல்லியில் மூன்றாவது முறையாக கெஜ்ரிவால் முதல்வராக பதவியேற்பு

புதுடெல்லி: டெல்லியில் மூன்றாவது முறையாக அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். மத்திய அரசுடன் இணைந்து செயல்படப் போவதாக அவர் அறிவித்துள்ளார்.டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜ.வுக்கு வெறும் 8 இடங்களே கிடைத்தன. காங்கிரசுக்கு ஓர் இடம்கூட கிடைக்கவில்லை. ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரான அரவிந்த்  கெஜ்ரிவால், மூன்றாவது முறையாக முதல்வர் பதவியேற்கும் விழாவில் பல்வேறு மாநில முதல்வர்களும், அரசியல் கட்சித் தலைவர்களும் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், டெல்லி மக்கள் முன்னிலையில் பதவியேற்க  உள்ளதாக கெஜ்ரிவால் தெரிவித்தார்.

அதேவேளையில், ஆம் ஆத்மி அரசு பதவியேற்பு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. மேலும், டெல்லியின் ஏழு மக்களவைத் தொகுதி பாஜ எம்பிக்கள், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 8 பாஜ எம்எல்ஏக்கள்  ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், பிரதமர் மோடி, வாராணசியில் நேற்று மற்றொரு நிகழ்ச்சியில் பங்கேற்றதால், கெஜ்ரிவால் பதவியேற்பு விழாவில் பங்கேற்கவில்லை. ராம் லீலா மைதானத்தில் பதவியேற்பு விழாவுக்காக பிரத்யேக மேடை அமைக்கப்பட்டிருந்தது. நிகழ்ச்சியில் டெல்லியின் வளர்ச்சிக்காக பாடுபட்ட ஆசிரியர்கள், டாக்டர்கள், துப்புரவுத் தொழிலாளர்கள் என பல்வேறு துறைகளைச் சேர்ந்த 50  பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதால், அவர்கள் பங்கேற்றனர். 3வது முறையாக டெல்லி முதல்வராக கெஜ்ரிவால் பதவியேற்றார்.

 மதியம் 12.15 மணிக்கு அவருக்கு கவர்னர் அனில் பைஜால் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.  அதைத்தொடர்ந்து கெஜ்ரிவால் அதை திரும்ப வாசித்து பதவியேற்றார். அப்போது ஆம் ஆத்மி தொண்டர்கள் அவரை வாழ்த்தி கோஷம் எழுப்பினர். இதைத்தொடர்ந்து மணீஷ் சிசோடியா, சத்யேந்தர் ஜெயின், கைலாஷ் கஹ்லோட், இம்ரான்  உசேன், கோபால் ராய், ராஜேந்திர கவுதம் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றனர். பதவியேற்பு விழாவில் பெருமளவிலான ஆம் ஆத்மி தொண்டர்கள், ராம் லீலா மைதானத்தில் திரண்டதால், மைதானத்தில் எங்கு பார்த்தாலும் மனித தலைகளாக தெரிந்தது. பாதுகாப்பு ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக டெல்லி காவல்துறை  மற்றும் சிஆர்பிஎப் உள்ளிட்ட துணை ராணுவப் படைகளைச் சேர்ந்த 3,000 பேர் பணியமர்த்தப்பட்டனர்.

‘மத்திய அரசுடன் இணைந்து இணக்கமாக பணியாற்றுவோம்’

பதவியேற்ற பின்னர் முதல்வர் கெஜ்ரிவால் பேசியதாவது:டெல்லியின் மகனாக உங்கள் முன் முதல்வர் பதவியை ஏற்றுள்ளேன். இதனால் யாரும் இனி கவலைப்படத் தேவையில்லை. இந்த வெற்றி என்னுடையதல்ல; மாறாக இது டெல்லிவாசிகளின் வெற்றியாகும். கடந்த 5 ஆண்டுகளில்  டெல்லிவாசிகளுக்கு மகிழ்ச்சியையும் நிம்மதியையும் கொண்டு வருவதே எங்கள் பிரதான முயற்சியாக இருந்தது.

எனக்கு வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்கள் என்ற பாகுபாடு எல்லாம் எனக்கு கிடையாது. கட்சி, மதம், ஜாதி பேதமின்றி 5 ஆண்டுகளும் டெல்லி மக்களுக்காக உழைப்பேன். எல்லாவற்றையும் இலவசமாக கொடுக்கிறேன் என சிலர்  கூறுகின்றனர். விலைமதிப்பில்லாத ஒவ்வொரு விஷயமும் இந்த உலகில் இலவசமாக கிடைக்கும் என்பது இயற்கையான ஒன்று. வேறொரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால், இந்த நிகழ்ச்சியில் பிரதமரால் கலந்து கொள்ள முடியவில்லை.  இந்த மேடை வழியாக டெல்லியின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அரசின் ஆசிர்வாதத்தை பெற்றுக் கொள்கிறேன். மத்திய அரசுடன் இணைந்து இணக்கமாக செயலாற்றி டெல்லி மக்களின் தேவைகளை  நிறைவேற்றுவோம். இவ்வாறு கெஜ்ரிவால் பேசினார்.

Related Stories: