சிஏஏ போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு: மீரட்டில் 28 போலீசார் மீது போராட்டக்காரர்கள் வழக்கு

லக்னோ: சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 5 பேர் பலியான நிலையில், பாதிக்கப்பட்டோர் தரப்பில் 28 மீரட் போலீசாருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் நகரில், கடந்த டிச.20ம் தேதி  குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடந்தது. அப்போது  ஏற்பட்ட வன்முறையை தொடர்ந்து, போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஐந்து பேர்  பலியாகினர்.  அதைத்தொடர்ந்து மீரட், கான்பூர், பிஜ்னோர்,  லக்னோ, பிரோசாபாத் மற்றும் பிற இடங்களில் நடந்த போராட்டம் மற்றும்  வன்முறையால் நடந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 23 பேர்  கொல்லப்பட்டனர்.  

இந்நிலையில், மீரட் மாவட்ட நீதிமன்றத்தில் துப்பாக்கிச்சூட்டில் பலியான 5 பேர் குடும்பத்தினர் தரப்பில், 28 போலீசார் மற்றும் அடையாளம் தெரியாத சில போலீஸ்காரர்கள் தங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவரை சுட்டுக் கொன்றதாக கூறி  நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதில், போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய போலீஸ்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’’ என்று கூறப்பட்டுள்ளது.

Related Stories: