ராகுல் கூறிய கடுமையான கருத்தால் பிரதமர் பதவியில் இருந்து விலக நினைத்த மன்மோகன்: அலுவாலியா புதிய தகவல்

புதுடெல்லி: காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட அவசர சட்டத்தை ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்த போது பிரதமராக இருந்த மன்மோகன் சிங், தன்னைத் தொடர்பு கொண்டு பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமா?  என்று கேட்டதாக திட்டக் கமிஷனின் முன்னாள் துணைத் தலைவர் மான்டெக் சிங் அலுவாலியா தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது செயல்பாட்டில் இருந்த திட்டக் கமிஷனில் துணைத் தலைவராக இருந்தவர் மான்டெக் சிங் அலுவாலியா. இவர் `பின்புலம்: இந்தியாவின் உயர் வளர்ச்சி ஆண்டுகளின்  பின்னணியில் உள்ள கதை’ என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், குற்ற வழக்குகளில் தண்டனைப் பெற்ற எம்எல்ஏ.க்கள், எம்பி.க்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை நீர்த்துப் போக செய்யும் வகையில், அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இந்த  சட்டம்  முற்றிலும் முட்டாள்தனமானது, கிழித்து தூக்கி வீசப்பட வேண்டியது என்று ராகுல் காந்தி கடுமையாக விமரிசித்தார்.

Advertising
Advertising

இந்த சம்பவத்தின் போது, பிரதமர் மன்மோகன் சிங் அமெரிக்கா சென்றிருந்தார். நானும் அவரது அமெரிக்க தூதரக குழுவில் இடம் பெற்றிருந்தேன். அப்போது, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியான எனது சகோதரர் சஞ்சீவ், பிரதமர் குறித்து  எழுதிய கட்டுரையை இ-மெயிலில் அனுப்பி இருப்பதாக எனக்கு தெரிவித்தார். இந்த கட்டுரை பற்றி பிரதமர் என் மூலம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, அதனை எடுத்துக் கொண்டு அவரது அறைக்கு சென்றேன். அதனை படித்து விட்டு சிறிது நேரம் எதுவும் பேசாமல் இருந்த அவர், இதற்காக நான் பதவி விலக  வேண்டும் என்று நினைக்கிறீர்களா? என்று கேட்டார். அதற்கு நான், இதற்காக பதவி விலக தேவையில்லை என்று நேர்மையான பதில் அளித்தேன். அரசின் அவசர சட்டத்தை கிழித்தெறிவது என்பது பிரதமர் அலுவலகத்தை அவமதிப்பதாகும்.  அதன் அடிப்படையில் அவர் பதவி விலகி இருக்க வேண்டும். ஆனாலும் அதை நான்  ஒப்புக் கொள்ளவில்லை என்று கூறியுள்ளார்.

Related Stories: