டெல்லியில் உண்மையான தேசியம் மதவாத அரசியல் நடத்தும் நிதிஷை தூக்கியெறியுங்கள்: வாக்காளர்களுக்கு தேஜஸ்வி வேண்டுகோள்

புதுடெல்லி: பீகார் மாநிலத்துக்கு இந்தாண்டு அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அங்குள்ள அரசியல் கட்சிகள் தேர்தலைச் சந்திக்கத் தயாராகிக் கொண்டிருக்கின்றன.  இந்நிலையில், இம்முறை வேலையின்மையை முக்கியப் பிரச்னையாக கையிலெடுக்க எதிர்க்கட்சியான ராஷ்டிரிய ஜனதா தளம் முடிவெடுத்துள்ளது.  இதனால் பாட்னாவில் வரும் 23ம் தேதி மாபெரும் வேலையின்மை நடைபயணப் பேரணியை நடத்த அக்கட்சித் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், பாட்னாவில் நேற்று நடந்த கட்சிக் கூட்டத்தில் பங்கேற்ற ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் மூத்த  தலைவர் தேஜஸ்வி யாதவ் பேசியதாவது: பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரித்தாளும் சூழ்ச்சியை முறியடிக்க, எதிர்க்கட்சிகளின் வலிமைமிக்க, ஒருங்கிணைந்த மகா கூட்டணி உருவாகிறது.

இந்த சட்டப்பேரவைத் தேர்தலின் மூலம் தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரித்தாளும்  திட்டமும், ஐக்கிய ஜனதா தளத்தின் 15 ஆண்டு கால தவறான ஆட்சியும் முடிவுக்கு கொண்டு வரப்பட உள்ளது.தேசிய குடியுரிமை திருத்த சட்டம் (சிஏஏ), தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு (என்பிஆர்), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) ஆகியவற்றை முதல்வர் நிதிஷ் ஒருபோதும் விமர்சித்தது கிடையாது. ஏனென்றால், பாஜ.வின் கொள்கைகளை  விமர்சிக்க அவருக்கு துணிவு இல்லை. பீகார் மக்கள், டெல்லி வாக்காளர்களைப் போன்று, உண்மையான தேசியத்துக்கு வாக்களிக்க வேண்டும். மதவாதத்துக்கு ஆதரவு அளிக்கும் நிதிஷ் குமார் அரசை தூக்கியெறிய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: