×

எவ்வளவு அழுத்தம் கொடுத்தாலும் சிஏஏவை வாபஸ் பெற மாட்டேன்: பிரதமர் மோடி திட்டவட்டம்

வாரணாசி: ‘அனைத்து தரப்பில் இருந்தும் எவ்வளவு அழுத்தம் கொடுத்தாலும் குடியுரிமை திருத்த சட்டத்தை (சிஏஏ) திரும்ப பெற மாட்டோம்,’ என பிரதமர் மோடி கூறியுள்ளார். குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் பல இடங்களில் போராட்டங்கள் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், உத்தரப் பிரதேசத்தில் உள்ள தனது வாரணாசி மக்களவை தொகுதியில் ரூ.1,254 கோடி மதிப்பிலான 50 நலத் திட்டங்களை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். அங்கு நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய அவர், ‘‘ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து சட்டம் 370வது பிரிவு ரத்து, குடியுரிமை திருத்த சட்டம் (சிஏஏ) ஆகிய முடிவுகளை எடுக்க நாடு பல ஆண்டுகளாக காத்திருந்தது.

நாட்டு நலனுக்காகத்தான் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டன. அனைத்து பக்கங்களில் இருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டாலும், இந்த முடிவுகள் எடுக்கப்பட்டதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். தொடர்ந்து உறுதியாக இருப்போம். அவற்றை திரும்ப பெறமாட்டோம்,’’ என்றார். வாரணாசியில் அமைக்கப்பட்டுள்ள பண்டிட் தீன்தயாள் உபாத்யாய் நினைவு மையத்தையும் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்பணித்தார். இங்கு 63 அடி உயர தீன்தயாள் உபாத்யாய் சிலையையும் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய  அவர், ‘‘பண்டிட் தீனதயாள் உபாத்யாயாவின் ஆன்மா, நமக்கு ஊக்கத்தை  அளிக்கிறது. தாழ்த்தப்பட்டவர்கள், ஏழைகள் மற்றும் இதர பிரிவினரின் முன்னேற்றத்துக்காக நாம் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம்.

வாழ்க்கையின் கடைசியில் இருப்பவருக்கும், அனைத்து வசதிகளையும் வழங்குவதுதான், உபாத்யாய் கூறிய அந்தியோதே திட்டம். வாரணாசியில் கடந்த சில ஆண்டுகளாக ரூ.25 ஆயிரம் கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்கள் முடிந்துள்ளன. இவற்றில் சில வேகமாக நடந்து கொண்டிருக்கின்றன. ரயில்வே, தேசிய நெடுஞ்சாலை, நீர்வழிப் போக்குவரத்து ஆகியவற்றுக்கு இந்த அரசு முன்னுரிமை அளிக்கிறது,’’ என்றார். இந்த மையத்தில் ‘காசி ஏக் ரூப் அனக்’ என்ற பெயரில் கலை மற்றும் கைவினைப் பொருட்கள் கண்காட்சியையையும் மோடி தொடங்கி வைத்தார். வாரணாசியில் 430 படுக்கைள் கொண்ட சிறப்பு பல்நோக்கு மருத்துவமனையையும் அவர் தொடங்கி வைத்தார்.

இரவில் இயங்கும் முதல் தனியார் ரயில்
ஐஆர்சிடிசி.யின் ‘மகாகாள் எக்ஸ்பிரஸ்’ ரயிலை காணொளி காட்சி மூலம் வாரணாசியில் இருந்து பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இது இரவு நேரத்தில் இயங்கும் முதல் தனியார் ரயில் என்பது குறிப்பிடத்தக்கது. உத்தரப் பிரதேசத்தின் வாரணாசி, மத்தியப் பிரதேசத்தி–்ன உஜ்ஜெயின் மற்றும் ஓம்கரேஷ்வர் ஆகிய மூன்று ஜோதிர் லிங்க புனித தலங்களை இந்த ரயில் இணைக்கிறது.

விரைவில் ராமர் கோயில் கட்டும் பணி
பிரதமர் மோடி பேசுகையில், ‘‘அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோயில் கட்ட ‘ ராம்ஜன்மபூமி தீர்த் கசேத்ரா’ என்ற அறக்கட்டளை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த அறக்கட்டளை விரைவாக செயல்படும். ராமர் கோயில் கட்டும் பணிகள் விரைவாக தொடங்கப்படும்,’’ என்றார்.

Tags : Modi ,CAA , CAA, PM Modi
× RELATED ஆண்டு முழுவதும் தனிப்பட்ட உடல் நலனில்...