×

சிஏஏவுக்கு எதிரான போராட்டங்களை கண்காணிக்க 6 ஐபிஎஸ் அதிகாரிகள் குழு நியமனம்: தமிழகம் முழுவதும் மீண்டும் தீவிரம் அடைவதால் நடவடிக்கை

சென்னை: குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக சட்டப்பேரையில் தீர்மானம் நிறைவேற்றும் வரை காத்திருப்பு போராட்டம் தொடரும் என இஸ்லாமிய அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. இது தொடர்பாக முதல்வர் எடப்பாடியுடன் தமிழக டிஜிபி திரிபாதி நேற்று காலை ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் இப்போராட்டத்தை கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் தமிழகம் முழுவதும் 6 ஐபிஎஸ் சிறப்பு அதிகாரிகளை நியமனம் செய்து டிஜிபி உத்தரவிட்டுள்ளார். குடியுரிமை திருத்த சட்டம் (சிஏஏ), தேசிய மக்கள் பதிவேடு (என்பிஆர்), தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு (என்ஆர்சிக்கு) ஆகியவற்றிற்கு எதிராகவும், தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும் சென்னை வண்ணாரப்பேட்டையில் பல்வேறு முஸ்லிம் இயக்கங்களை சேர்ந்தவர்கள் கடந்த 14ம் தேதி போராட்டம் நடத்தினர். அப்போது, போராட்டக்காரர்களை கலைந்து செல்லுமாறு போலீசார் கேட்டும், அவர்கள் கலைந்து செல்லவில்லை.

இதைதொடர்ந்து போராட்டக்காரர்களை கைது செய்ய முயன்றபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்க தடியடி நடத்தினர். இந்த சம்பவத்தில் பெண் ஒருவர் காயமடைந்ததாகவும், முதியவர் ஒருவர் உயிரிழந்ததாகவும் கூறப்பட்டது. இந்த சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுவதும் போராட்டம் தீவிரமானது. போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், முஸ்லிம் இயக்க நிர்வாகிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பல மணி நேரம் நீடித்த இந்த பேச்சுவார்த்தையின் முடிவில், கைது செய்யப்பட்ட 120 பேரையும் விடுவிப்பதற்கு கமிஷனர் சம்மதித்தார். இதை தொடர்ந்து கைது செய்யப்பட்ட 120 பேரும் உடனடியாக விடுவிக்கப்பட்டனர்.

இருந்த போதிலும், வண்ணாரப்பேட்டையில் தடியடி நடத்தப்பட்ட இடத்திலும் மற்றும் தமிழகம் முழுவதும் முஸ்லிம்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் தீவிரம் அடைந்து வரும் நிலையில், தொடர்ந்து 3வது நாளாக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நேற்றும் நடைபெற்றது.
இந்த நிலையில், இந்த போராட்டம் தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் டிஜிபி திரிபாதி கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வரது இல்லத்தில் நேற்று காலை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது, தலைமை செயலாளர் சண்முகம், உள்துறை செயலாளர் பிரபாகர், போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், உளவுத்துறை ஐஜி சத்யமூர்த்தி ஆகியோர் உடன் இருந்தனர். சுமார் 30 நிமிடங்களுக்கு மேல் இந்த ஆலோசனை கூட்டம் நடந்தது.

அப்போது, குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தமிழகம் முழுவதும் நடந்து வரும் போராட்டம் குறித்தும், தற்போதைய சட்டம் ஒழுங்கு நிலை குறித்தும் முதல்வர் எடப்பாடி கேட்டறிந்தார். தொடர்ந்து, தற்போது நடந்து வரும் போராட்டத்தில் அசம்பாவித சம்பவங்கள் நிகழாத வகையில் தக்க பாதுகாப்பு வழங்கவும் டிஜிபிக்கு முதல்வர் எடப்பாடி உத்தரவிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நடந்து வரும் போராட்டங்களை கண்காணிக்க 6 சிறப்பு அதிகாரிகளை நியமித்து தமிழக டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார். இது குறித்து டிஜிபி திரிபாதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: குடியுரிமை திருத்த சட்டம், என்பிஆர்., என்.ஆர்.சி.,க்கு எதிராக நடக்கும் போராட்டங்களை கண்காணிக்கவும், சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும் 6 ஐபிஎஸ் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மதுரை மாநகர் மற்றும் மதுரை சரகத்துக்கு அபய்குமார் சிங், நெல்லை மாநகர் மற்றும் நெல்லை சரகத்துக்கு மகேஷ்குமார் அகர்வால், முருகன், தேனி மாவட்டங்களான கம்பம், போடிக்கு பாஸ்கரன், தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்துக்கு மகேந்திரன், திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம், பழனிக்கு ஜி.ஸ்டாலின் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.இந்த அதிகாரிகளை ஒருங்கிணைத்து சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி செயல்படுவார். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் வண்ணாரப்பேட்டையில் மூன்றாவது நாளாக நடந்து வரும் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர ஜமாத் தலைவர்களை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தமிழக சட்ட பேரவையில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என அறிவித்து தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு ஆதரவாகவும், போலீசார் நடத்திய தடியடியை கண்டித்தும் நாகை, மதுரை, சேலம், தர்மபுரி, தாம்பரம், நாகர்கோவில், திருப்பூர், திண்டுக்கல், பொள்ளாச்சி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை, தேனி, வேலூர், மேட்டுப்பாளையம் நெல்லை, திருச்சி, தஞ்சை, கோவை என தமிழகம் முழுவதும் நேற்று மூன்றாவது நாளாக தொடர் போராட்டங்கள் நடந்தது. குறிப்பாக திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை புதுத்தெரு திடலில் அனைத்து ஜமாத் மற்றும் அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் காத்திருப்பு போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது. சென்னை வண்ணாரப்பேட்டையில் நடந்து வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து இஸ்லாமிய பெண்கள் தங்களது குழந்தைகளுடன் வந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் வண்ணாரப்பேட்டையில் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளது. தொடர் போராட்டத்தால் வண்ணாரப்பேட்டை பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

* சென்னை வண்ணாரப் பேட்டையில் பல்வேறு முஸ்லிம் இயக்கங்களை சேர்ந்தவர்கள் கடந்த 14ம் தேதி போராட்டம் நடத்தினர்.
* போராட்டத்தில்  ஈடுபட்டவர்களை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர்.
* இந்த சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுவதும் போராட்டம் தீவிரமானது.

அச்சம் தேவையில்லை: பேச்சுக்கு பின் அமைச்சர் உறுதி
வண்ணாரப்பேட்டையில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிர்வாகிகள் சென்னை ராயபுரத்தில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரை, அவருடைய அலுவலகத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். 45 நிமிடங்கள் வரை நீடித்த பேச்சுவார்த்தைக்கு பிறகு போராட்ட நிர்வாகிகள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, ‘‘கேரளா மற்றும் புதுச்சேரியை போல் தமிழ்நாட்டிலும் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று முதலமைச்சர் சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றும் வரை போராட்டம் தொடரும். தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பில் உள்ள ஆறு கேள்விகளை நீக்குவது குறித்து முதலமைச்சரிடம் பேசுகிறேன் என்று அமைச்சர் கூறியுள்ளார். இந்த சந்திப்பில் கலந்து கொண்ட பெண்கள், சாகும் வரை எங்கள் போராட்டம் தொடரும்,  போராட்ட களத்தை விட்டு நகர மாட்டோம் என தெரிவித்தனர்’’.

அதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார்,‘‘மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது அச்சத்தை ஏற்படுத்தக்கூடிய ஆறு சரத்துக்கள் நீக்கப்பட வேண்டும் என வண்ணாரப்பேட்டை ஜமாத்தை சேர்ந்தவர்கள் என்னிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை முதல் அமைச்சரின் கவனத்துக்கு எடுத்து செல்வதாக தெரிவித்தார். மேலும் இஸ்லாமியர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் நிலை தமிழகத்தில் நிச்சயம் ஏற்படாது. இது குறித்து மேலும் 23 அமைப்புகள் எங்களிடம் கூறியுள்ளார்கள். அனைத்திற்கும் நல்ல முடிவு எட்டப்படும் என உறுதியளித்தார்’’. 3வது நாளாக பல்வேறு இடங்களில் காத்திருப்பு போராட்டம் தொடர்வதால் தமிழகம் முழுவதும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

Tags : IPS officers ,CAA 6 ,protests , CAA, IPS Officers, Committee Appointment
× RELATED எதிர்ப்பு அலையால் மக்களை...