சிஏஏ போராட்டத்தில் துப்பாக்கி சூடு: மீரட்டில் 28 போலீசாருக்கு எதிராக வழக்கு: பாதிக்கப்பட்டோர் தரப்பில் நீதிமன்றத்தில் தாக்கல்

லக்னோ: சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் துப்பாக்கி சூடு நடத்தியதில் 5 பேர் பலியான நிலையில், பாதிக்கப்பட்டோர் தரப்பில் 28 மீரட் போலீசாருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் மீரட் நகரில், கடந்த டிச. 20ம் தேதி  குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடந்தது. அப்போது  ஏற்பட்ட வன்முறை மற்றும் போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தியதில் ஐந்து பேர்  பலியாகினர். பிரோசாபாத் உள்ளிட்ட இடங்களில் நடந்த வன்முறையால் அன்றைய தினம்  மட்டும் ஏழு பேர் கொல்லப்பட்டனர். தொடர்ந்து ஜனவரியில் நெஹ்தூரில் நடந்த  வன்முறையில், ஒருவர் கொல்லப்பட்டார். இவ்விவகாரத்தில் 6 போலீஸ் அதிகாரிகள்  மீது பாதிக்கப்பட்டவர் குடும்பத்தினர் தரப்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.  மற்ெறாரு சம்பவமாக புல்லட் காயங்களுடன் சிகிச்சை பெற்ற ஒருவர், அடுத்த சில  நாட்களில் உயிரிழந்தார்.

Advertising
Advertising

மொத்தமாக மீரட், கான்பூர், பிஜ்னோர்,  லக்னோ, பிரோசாபாத் மற்றும் பிற இடங்களில் நடந்த போராட்டம் மற்றும்  வன்முறையால் நடந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 23 பேர்  கொல்லப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் துப்பாக்கியின் புல்லட்  காயங்களுடன் பலியாகினர். இந்நிலையில், மீரட் மாவட்ட நீதிமன்றத்தில் துப்பாக்கி சூட்டில் பலியான 5 பேர் குடும்பத்தினர் தரப்பில், 28 போலீசார் மற்றும் அடையாளம் தெரியாத சில போலீஸ்காரர்கள் சுட்டுக் கொன்றதாக கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அதில், ‘துப்பாக்கி சூடு தொடர்பாக மூன்று புகார்களை அதிகாரிகளிடம் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால், போலீசாருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கையை (எப்.ஐ.ஆர்) பதிவு செய்ய பிரிவு 156 (3) இன் கீழ் நீதிமன்றத்திற்கு சென்றோம். மேலும் இரண்டு புதிய புகார்களை வீடியோ ஆதாரங்களுடன் தாக்கல் செய்துள்ளோம். போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய போலீஸ்காரர்களை மாவட்ட நிர்வாகம் காப்பாற்றுவது மட்டுமல்லாமல் வழக்கை தவறாக வழிநடத்தி வருகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: