தஞ்சை மாவட்டத்தில் நேரடி நெல்கொள்முதலில் முறைகேடு: அதிரடியாக கறக்கும் அதிகாரிகள் விவசாயிகள் குற்றச்சாட்டு

தமிழக அரசின் உணவு தானிய கொள்முதலில் இப்பாசன பகுதி மிக பெரிய பங்களிப்பை அளித்து வருகிறது. இதனால் ஒரு காலத்தில் தமிழகத்தின் நெற்களஞ்சியம் என பெயர் பெற்று விளங்கியது தஞ்சை. அப்போது முப்போகம் விளைந்த நிலையில் தண்ணீர் பற்றாக்குறையால் கடந்த 8 ஆண்டுகளாக தொடர்ந்து ஒரு போக சாகுபடியே நடந்து வருகிறது. ஆண்டுதோறும் மேட்டூர் அணை பாசனத்திற்கு திறப்பது நிச்சயமற்ற நிலையாக உள்ளது. தண்ணீர் வந்தால் அதிர்ஷ்டம் என்ற நிலையில் விவசாயிகள் வழிமேல் விழித்து வைத்து தண்ணீருக்காக காத்திருப்பது வழக்கமாகி விட்டது. காலதாமதமாக தண்ணீர் வந்தாலும் சாகுபடியை பல்வேறு இன்னல்களுக்கிடையே மேற்கொண்டு விளைந்த நெல்லை விற்பனை செய்ய விவசாயிகள் படாதபாடுபடுகிறார்கள். நடப்பாண்டு மேட்டூர் அணை காவிரி டெல்டா பாசனத்திற்காக கடந்த ஆகஸ்ட் 13ம் தேதி திறக்கப்பட்டது. இதையடுத்து தஞ்சை மாவட்டத்தில் 1.36 லட்சம் எக்டேர் பரப்பளவில் சம்பா மற்றும் தாளடி சாகுபடி செய்யப்பட்டது. தற்போது அறுவடை பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

மாவட்டம் முழுவதும் ஒரே நேரத்தில் பயிர்கள் அறுவடைக்கு வந்துள்ளதால் அறுவடை இயந்திரங்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அறுவடை இயந்திரங்களுக்கு வாடகையை இஷ்டத்திற்கு உயர்த்தி விவசாயிகளிடம் வசூல் செய்யப்படுகிறது. இதை எதிர்த்து கேட்டால் இயந்திரங்கள் அறுவடைக்கு வராது என இயந்திர முதலாளிகள் விவசாயிகளை நெருக்கடியில் தள்ளுகின்றனர். இதையெல்லாம் சகித்துக் கொண்டு விவசாயிகள் அவர்கள் கேட்கும் வாடகை தொகையை கொடுத்து அறுவடை செய்தால் அவற்றை விற்பனை செய்ய மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். பொன்னி ரக நெல் தனியார் வியாபாரிகளால் விரும்பி வாங்கப்படுகிறது. ஆனால் கோ-50 போன்ற ரகங்களை தனியார் வியாபாரிகள் வாங்குவதில்லை. இதனால் விவசாயிகள் இந்த ரக நெல்லை தமிழக அரசின் நுகர்பொருள் வாணிபக் கழக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு எடுத்து வந்து விற்பனை செய்து வருகின்றனர். ஆனால் இதில் விவசாயிகள் பல்வேறு சிரமங்களையும், ஏமாற்றங்களையும், இழப்புகளையும் சந்திக்க வேண்டிய அவலம் நடந்து வருகிறது.

விவசாயிகள் நெல் மூட்டைகளை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு வந்த உடன் கொள்முதல் எழுத்தர் நெல்லை சோதித்து பார்ப்பார். நெல் தரமுடன் உள்ளதா? ஈரப்பதம் உள்ளதா? பதர் எந்த அளவிற்கு உள்ளது? நிறம் மாறியுள்ளதா? என பல்வேறு தர ஆய்வுகள் செய்வார். இவை அனைத்தும் சரியாக உள்ளது என்றாலும் கட்டாயம் அங்குள்ள தூற்றும் இயந்திரத்தில் தூற்ற வேண்டும். தூற்றிய பின் ஈரபதம் கணக்கிடப்படும். தற்போது பனி குறைந்து வெயில் அடிக்க துவங்கிவிட்டதால் நெல் ஈரப்பதம் குறைவாக காணப்படுகிறது.  எனவே நெல் சிப்பங்களில் பிடிக்கப்பட்டு மின்னணு எடை கருவியில் எடை போடப்படும். உடனடியாக சிப்பங்கள் தைக்கப்பட்டு லாரிகளில் ஏற்றி சேமிப்பு கிடங்குகளுக்கு அனுப்பப்படும். இதுதான் நடைமுறை.

ஆனால் தற்போது சிப்பங்களை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு வந்த உடன் முதலிலேயே கொள்முதல் எழுத்தரிடம் சிப்பத்துக்கு ரூ.40 என கொடுத்தால் தான் டோக்கன் வழங்கப்படுகிறது. அந்த டோக்கனை பெற்ற உடன் தான் நெல் தூற்றப்பட்டு எடை போடப்படும். ஒரு சிப்பம் 40 கிலோ வீதம் கணக்கிடப்படுகிறது. சாக்குடன் சேர்த்து 40.600 கி.கி. தான் விதிமுறைப்படி எடை போடப்பட வேண்டும். ஆனால் குறைந்தபட்சம் 43 கிலோ எடையுடன்தான் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.வெளிப்படையாக ஒரு சிப்பத்துக்கு குறைந்தபட்சம் சுமார் 2 கிலோ நெல் கட்டாயமாக களவாடப்படுவதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர். இதன்படி ஒரு சிப்பத்துக்கு ரொக்கமாக ரூ.40 மற்றும் 2 கிலோ நெல் மதிப்பு சுமார் ரூ.30 என சிப்பத்துக்கு ரூ.70 வரை விவசாயிகளிடம் வலுகட்டாயமாக பறிக்கப்படுகிறது. இவற்றுக்கு எல்லாம் சம்மதித்தால் தான் நெல் கொள்முதல் செய்யப்படும். உதாரணத்திற்கு விவசாயி ஒருவர் கொள்முதலுக்கு பணம் தர விரும்பவில்லை என்றால் அவரது நெல் கொள்முதல் செய்ய அங்குள்ள ஊழியர்கள் முன்வருவதில்லை. நெல் எவ்வளவு தரமாக இருந்தாலும் நெல் சரியில்லை, காய வைத்துக் கொண்டு வர வேண்டும், தூற்ற வேண்டும், நெல் பழம் உள்ளது, பதர் அதிகம் உள்ளது, நெல் கலர் மாறியுள்ளது என ஏதாவது ஒரு காரணம் கூறி தட்டி கழிக்கிறார்கள்.

இதனால் பல நாட்களுக்கு நெல் கொள்முதல் நிலையத்தில் இரவு, பகலாக காத்திருக்கும் விவசாயிகள் ஒருகட்டத்தில் வெறுத்துபோய் விடுகின்றனர். அப்போது அவர்களிடம் உதவுகிறேன் பேர்வழி என ஒரு வியாபாரி விவசாயி போர்வையில் வருவார். அவர் நெல்லை தூற்றாமல், காய வைக்காமல் அப்படியே சிப்பங்களை எடை வைத்து மூட்டைக்கு 3 கிலோ கூடுதலாகவும், ரூ.20 குறைவாகவும் விலை பேசி வாங்கிக் கொள்வார். நாள் கணக்கில் காத்திருந்த விவசாயியும் எப்படியாவது விற்றால் போதும் என்ற நெருக்கடிக்கு தள்ளப்படுவார். இந்த நெல்லை அந்த வியாபாரி அங்குள்ள எழுத்தர், ஊழியர்களிடம் சிப்பத்திற்கு ரூ.60 கொடுத்து எத்தகைய தரத்தில் இருந்தாலும் விற்பனை செய்துவிடுவார். விவசாயிகளிடம் தரமற்று இருந்ததாக கூறப்படும் அதே நெல் வியாபாரி விற்பனை செய்யும்போது கொள்முதல் பணியாளர்களிடம் தரத்துடன் மாறிவிடுவது கண்டு விவசாயிகள் வியந்து போயுள்ளனர்.

இதனால் அரசின் நேரடி நெல் கொள்முதல் திட்டங்கள் மூலம் இதுவரை தஞ்சை மாவட்ட விவசாயிகள் யாரும் உண்மையான பலனை அனுபவிக்க முடியவில்லை. மாறாக பெரும் இன்னல்களை தான் சுமக்க வேண்டியு அவலம் ஏற்பட்டுள்ளது. இவை உடனடியாக களையப்பட்டால் மட்டுமே வருங்காலத்தில் நெல் கொள்முதல் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த முடியும். இதுகுறித்து காவிரி விவசாயிகள் சங்க மாவட்ட துணை செயலாளர் திருப்பூந்துருத்தி சுகுமாரன் கூறுகையில், ஒரு காரீப் பருவத்திற்கு சுமார் ரூ.500 கோடி வரை நெல் கொள்முதலில் மட்டும் சுரண்டப்படுகிறது. சிப்பத்துக்கு ரூ.40 கட்டாய வசூல் நடைபெறுகிறது. இதுபோன்ற முறைகேடுகளை தடுக்கவே இசிஎஸ் எனப்படும் மின்னணு பணபரிவர்த்தனை திட்டம் கொண்டுவரப்பட்டது.  ஆனால் எந்த நோக்கத்திற்காக இத்திட்டம் கொண்டு வரப்பட்டதோ அந்த நோக்கம் மூலம் இதுவரை விவசாயிகள் யாரும் பயன்பெறவில்லை. விவசாயிகளிடம் பறிக்கப்படும் இந்த ரூ.40 பணத்தில் ரூ.13 லோடுமேன்களுக்கு சென்றுவிடுகிறது. மீதமுள்ள ரூ.27ல் கொள்முதல் எழுத்தர், உதவியாளர், வாட்ச்மேன் மற்றும் உயர்மட்ட அதிகாரிகள், அரசியல் அதிகாரம் பெற்றவர்கள் வரை செல்கிறது.

இது தடுக்கப்பட வேண்டும். கடந்த காலங்களில் நெல் கொள்முதலில் பல ஆயிரம் கோடி சுருட்டப்பட்டுள்ளது. இந்த மெகா சுருட்டல் மீது சிபிஐ விசாரணை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் என்றார். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக தொழிலாளர்கள் சங்கம் மற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் சங்க (ஏஐடியூசி) பொதுச் செயலாளர் சந்திரகுமார் கூறும்போது, விவசாயிகளிடம் கொள்முதல் பணியாளர்கள் குறிப்பிட்ட தொகை பெற்று கொள்முதல் அலுவலர் முதற்கொண்டு உயர் அதிகாரிகள் மற்றும் ஆய்வு செய்கிற அதிகாரிகளுக்கும் ஒரு குறிப்பிட்ட தொகை பங்கிட்டு கொடுக்க வேண்டும் என்ற சட்ட விரோத நடைமுறை அமலில் உள்ளது. இது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இதை மீறி வசூல் செய்ய கட்டாயப்படுத்தும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக தஞ்சாவூர் முதுநிலை மண்டல மேலாளர் கதிரேசன் கூறுகையில், நெல் கொள்முதல் முறையாக நடைபெற அனைத்து விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. உணவுத்துறை அமைச்சர் அறிவுரையின்பேரில் அவ்வபோது நேரடி ஆய்வு மேற்கொண்டு குறைபாடுகள் இருந்தால் உடனடியாக களைய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தஞ்சை மாவட்டத்தில் கடந்த 12,13ம் தேதிகளில் உயர்மட்ட குழுவினர் நெல் கொள்முதல் நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டு பல்வேறு குறைபாடுகளை கண்டுபிடித்து 7 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மேலும் குறைபாடுகளுக்கு ஏற்றவாறு அபராதமும் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விவசாயிகள் ஏதேனும் குறைபாடுகள் இருப்பின் புகார் செய்யலாம் என்றார்.

1 லட்சம் மெ.டன் கொள்முதல்

ஏ கிரேடு நெல் குவிண்டால் குறைந்தபட்ச ஆதார விலை ரூ.1835 மற்றும் ஊக்கத்தொகை ரூ.70 என மொத்தம் ரூ.1905ம், பொது ரக நெல் குவிண்டால் குறைந்தபட்ச விலை ரூ.1815 மற்றும் ஊக்கத்தொகை ரூ.50 என மொத்தம் ரூ.1865 வழங்கப்படுகிறது. தஞ்சை மாவட்டத்தில் கடந்த அக்டோபர் 1ம் தேதி (காரீப் பருவம் 2019&20) முதல் இதுவரை 359 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் சுமார் 1 லட்சம் மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

கொள்முதலை கைவிடுகிறதா தமிழக அரசு

தமிழக அரசின் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் தற்போது மத்திய அரசின் இந்திய உணவு கழகத்திற்கு நெல்லை கொள்முதல் செய்து அளிக்கும் முகவராக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நெல் கொள்முதல் திட்டத்தை முறையாக செயல்படுத்த முடியாததால் இத்திட்டத்தை அரசு கைவிடலாம் என பரவலாக பேசப்பட்டு வருகிறது. அவ்வாறு கைவிட்டால் கொள்முதல் திட்டம் தனியார்மயமாகும் நிலை உள்ளது. அந்நிலையில் இத்திட்டத்தில் பணியாற்றும் கொள்முதல் எழுத்தர் உள்ளிட்ட அனைவரும் பணி இழக்கும் அபாயம் உள்ளது.

Related Stories: