2 மாவட்ட விவசாயிகளின் நீண்டகால எதிர்பார்ப்பு: ஆண்டுக்கணக்கில் முடங்கிக் கிடக்கும் தென்பெண்ணை-சென்னக்கால் தடுப்பணை திட்டம்

அரூர்: தர்மபுரி-கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கையான தென்பெண்ணையாறு-சென்னக்கால் தடுப்பணை திட்டம் ஆண்டுக்கணக்கில் ஆய்வோடு நிற்கிறது. இதனால் கருகும் பயிர்களை காப்பதற்கு திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. தென் மாநிலங்களில் ஓடும் ஆறுகளில் மிகவும் முக்கியமானது தென்பெண்ணையாறு. இது கர்நாடக மாநிலம் சிக்கபல்லபூர் மாவட்டத்திலுள்ள நந்திமலையில் உற்பத்தியாகிறது. அங்கிருந்து 112 கிலோ மீட்டர் பயணித்து சிங்க சாதனப்பள்ளி வழியாக தமிழக எல்லைக்குள் நுழைகிறது. பின்னர் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் 320 கிலோ மீட்டர் பயணித்து கடலூரில் கடலில் கலக்கிறது.

இப்படி கர்நாடகாவில் இருந்து வரும் தென்பெண்ணை ஆற்றுநீரை, தமிழகத்தில் தேக்கி வைப்பதற்காக 1995ம் ஆண்டு, தமிழக எல்லையான ஓசூர் அருகே கெலவரப்பள்ளி அணை கட்டப்பட்டது. இந்த அணையில் 481மில்லியன் கன அடி தண்ணீரை தேக்கி வைக்க முடியும்.
Advertising
Advertising

இந்த அணையில் இருந்து 21.99 கிலோ மீ்ட்டர் நீளமுள்ள வலது கால்வாயும், 25.5கிலோ மீட்டர் நீளமுள்ள இடது கால்வாயும் வெட்டப்பட்டு 2005 முதல் பாசனத்திற்கு நீர் திறந்து விடப்படுகிறது. இதனால் இப்பகுதியில் உள்ள 22 கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பாசனம் பெறுகிறது. கெலவரப்பள்ளி அணை நிறையும் போது, அங்கிருந்து திறக்கப்படும் தண்ணீர் 60 கிலோ மீ்ட்டர் ஓடி, கிருஷ்ணகிரி கேஆர்பி அணையை வந்தடைகிறது. இந்த தண்ணீரால் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 25 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. இது ஒரு புறமிருக்க மழைக்காலங்களில் கேஆர்பி அணை நிரம்பி வழிந்து லட்சக்கணக்கான லிட்டர் நீர் வீணாக கடலில் கலக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் கரையோர மக்கள், வெள்ள அபாய எச்சரிக்கைக்கு உட்பட்ட வாழ்விடங்களில் இருந்து வெளியேறுவது வழக்கம்.  அதே நேரத்தில் இதன்நீர் வழித்தடம் அமைந்துள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஊத்தங்கரை, தர்மபுரி மாவட்டத்தின் அரூர் ஒன்றியங்களில் ஏராளமான விவசாயிகள், பாசனத்திற்கு போதிய தண்ணீர் இல்லாமல் பரிதவித்து நிற்கின்றனர்.

இரண்டு மாவட்டங்களிலும் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்ட பயிர்கள் கருகியது. இதனால் பரிதவித்த விவசாயிகள், ஒரு கட்டத்தில் சாகுபடி செய்வதையே நிறுத்தி விட்டனர். இதற்கு தீர்வு காணும் வகையில் தென்பெண்ணை-சென்னக்கால் தடுப்பணை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று விவசாயிகளும், நீர்வள ஆர்வலர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இது ஆண்டாண்டு காலமாய் வெறும் ஆய்வோடு நிற்கிறது. அதோடு ஒவ்வொரு தேர்தலிலும் வாக்குறுதியாக மட்டுமே வலம் வந்து கொண்டிருக்கிறது. இது குறித்து சென்னக்கால் அணைக்கட்டு பாசன விவசாயிகள் கூறியதாவது: ஒவ்வொரு ஆண்டும் கிருஷ்ணகிரி அணை நிரம்பும் போது, லட்சக்கணக்கான லிட்டர் வீணாக கடலில் கலக்கிறது. இப்படி வீணாகும் நீரை சேமிக்கும் வகையில் தர்மபுரி மாவட்டத்தில் சென்னக்கால் அணைகட்டும் திட்டத்தை கொண்டு வரவேண்டும் என்று பலஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம். ஆற்று வழித்தடத்தில் மலையும், பூமி சற்று மேடாக இருப்பதும் சென்னக்கால் பகுதியின் சிறப்பம்சம்.

இந்த இடத்தில் அணைகட்டினால் நீரை தேக்குவது எளிதாக இருக்கும் என்பது விவசாயிகள் மட்டுமன்றி, நீர்வள ஆர்வலர்களின் நம்பிக்கை. இது குறித்து ஆய்வு செய்த பொதுப்பணித்துறையினர், இந்தப்பகுதியில் 2 மாவட்டங்களுக்கும் உட்பட்ட வனப்பரப்பு அதிகளவில் உள்ளது என்றும், எனவே  அணை கட்டுவது சாத்தியமில்லை என்றும் கைவிரித்து விட்டனர். இதனால் இப்போது குறைந்தபட்சம் தடுப்பணையாவது கட்ட வேண்டும் என்றோம். கண்டிப்பாக சென்னக்கால் தடுப்பணை கட்டப்படும் என்று கடந்தாண்டு நடந்த தேர்தல் பிரசாரத்தின் போது கூட, முதல்வர் உறுதி அளித்தார். இதே போல் ஒவ்வொரு தேர்தலிலும் அனைத்து அரசியல் கட்சி–்களும் இதை தேர்தல் வாக்குறுதியாகவும் தருகின்றனர்.

ஆனால் ஆண்டாண்டு காலமாக இது வெறும் அறிவிப்பாகவே உள்ளது. இதனால் வறட்சியின் பிடியில் சிக்கும் விவசாயிகள் பெங்களூரு, கோவை போன்ற நகரங்களுக்கு கூலி வேலைக்குச் செல்கின்றனர். உரிய  நேரத்தில் நீரில்லாமல் பல விளைநிலங்கள் கட்டாந்தரையாக காட்சியளிக்கிறது. எனவே கிருஷ்ணகிரி மாவட்டத்தின் வேடப்பட்டி, சந்திரப்பட்டி, கோணப்பட்டி, புங்கன்புதூர், தர்மபுரி மாவட்டத்தின் மருதுப்பட்டி, கீழ்மொரப்பூர், ஈச்சம்பாடி, மோப்பிரிப்பட்டி என்று 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் பயன்பெறும் இந்த தடுப்பணை திட்டத்தை விரைந்து செயல்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’. இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

25ஆயிரம் ஏக்கரில்  பாசனத்திற்கு வாய்ப்பு நீர்வள ஆர்வலர் ஆதங்கம்

நீர்வள ஆர்வலரும், ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை அதிகாரியுமான கணேசன் கூறுகையில், ‘‘ஒரு அருமையான நீர்சேமிப்பு திட்டத்திற்கு வனப்பகுதி என்று கூறி, அதிகாரிகள் முட்டுக்கட்டை போடுவது வேதனைக்குரியது. நீருக்காக பெரும் போராட்டங்களை நாம், எதிர்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளோம். இந்த நிலையில், சம்மந்தப்பட்ட இடம் யாருடைய அதிகார எல்லை என்பதை விட, நீரை சேமிப்பதே அறிவார்ந்த செயலாகும். அணைகட்டுவது சாத்தியப்படாவிட்டால் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டலாம். அதில் நீரை சேமித்து பம்பிங் முறையில் திருப்பிவிட்டால் 2 மாவட்டங்களிலும் 25ஆயிரம் ஏக்கர் பாசனத்திற்கு வழிபிறக்கும்,’’ என்றார்.

30 அடிக்கு கட்டினால் 300 ஏக்கர் நீர் பரப்பாகும் *விவசாய சங்க தலைவர் தகவல்

சென்னக்கால் அணைக்கட்டு பாசன சங்கத் தலைவர் ரவிச்சந்திரன் கூறுகையில், ‘‘அரூர் தாலுகா எம்பிளாம்பட்டி ஊராட்சி குட்டப்பட்டி வருவாய் கிராமம், ஊத்தங்கரை தாலுகா வேடப்பட்டி ஊராட்சி புங்கன்புதூர் வருவாய் கிராம பகுதிகளை இணைத்து 30அடி உயரத்திற்கு தடுப்பணை கட்டினால் 300 ஏக்கர் பரப்பளவு நீர் பிடிப்பு பகுதிகளாக மாறும். இதன் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 10 கிராமங்கள், தர்மபுரி மாவட்டத்தில் 15 கிராமங்கள் என்று மொத்தம் 25 கிராமங்கள் பயன்பெறும். இதனால் மீண்டும் இந்த பகுதியில் கரும்பு, மரவள்ளி, மஞ்சள் சாகுபடி புத்துயிர் பெறும்,’’ என்றார்.

கன்னிப்பேச்சிலேயே வலியுறுத்திய திட்டம் முன்னாள் எம்எல்ஏ வேதனை

அரூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ முருகன் கூறுகையில், ‘‘நான் எம்எல்ஏவாக இருந்த போது, எனது கன்னிப்பேச்சில் இது குறித்த கோரிக்கையை முன்வைத்தேன். அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா, முருகனின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்றார். அதற்குப்பிறகு சில அதிகாரிகள், என்னிடம் வந்து இந்த திட்டத்தை செயல்படுத்த ₹350 கோடி செலவாகும். இது ஏற்கனவே ஆய்வு செய்யப்பட்டு தோல்வியில் முடிந்த திட்டம் என்றனர். அவர்கள் 3 ஏரிகளுக்கு நீரை கொண்டு செல்ல முடியாது என்பதால் தோல்வி திட்டம் என்கின்றனர். ஆனால் 96 ஏரிகளுக்கு நீர்வரும் என்று கூறி விளக்கம் அளித்தேன். அதற்கு பிறகு ஆய்வு செய்வதாக கூறினர். நிச்சயம் அதி்காரிகள் நினைத்தால் இந்த திட்டம் சாத்தியமாகும். இதனால் அரூரில் தொடரும் குடிநீர் பிரச்னைக்கும் உரிய தீர்வு கிடைக்கும்,’’ என்றார்.

Related Stories: