விழிப்புணர்வு இன்மையால் தடுமாறும் அவலம்: பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டம் அடித்தட்டு மக்களை சென்றடைவதில் சிக்கல்

வேலூர்: பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் பயன்களை பெறுவதில் அடித்தட்டு மக்களுக்கு தொடர்ந்து நடைமுறை சிக்கல்கள் நீடிப்பதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். 2015ம் ஆண்டு மாநகரங்கள், நகரங்கள், பேரூராட்சி பகுதிகளில் வாழும் அடித்தட்டு, நடுத்தர வர்க்கத்தினரின் வீட்டின் கனவை நனவாக்கும் வகையில் பிரதமரின் ஆவாஸ் யோஜனா திட்டம் என்ற பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் வரும் 2022ம் ஆண்டுக்குள் நாட்டிலுள்ள அனைவருக்கும் சொந்த வீடு என்ற இலக்கு எட்டப்படும் என்று மத்திய அரசு உறுதிமொழி அளித்திருந்தது. குறிப்பாக 2019ம் ஆண்டுக்குள் நாட்டின் ஊரக பகுதிகளில் 10 மில்லியன் வீடுகளும், 2022ம் ஆண்டிற்குள் நகர்புற பகுதிகளில் 10 மில்லியன் வீடுகளும் கட்டித் தரப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் உள்ள 120 கோடி மக்களில் 17.7 லட்சம் பேர் வீடின்றி தவிப்பதாக தெரிய வந்துள்ளது.

Advertising
Advertising

இந்த விவரம் வெளியாகி 9 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் எத்தனை பேருக்கு பிரதமரின் வீடு வழங்கும் திட்டம் போய் சேர்ந்தது என்பது கேள்விக்குறி. அதேநேரத்தில் வீடற்றவர்கள் எண்ணிக்கையை மத்திய, மாநில அரசுகள் குறைத்து காட்டுவதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இந்தியாவின் முக்கிய வர்த்தக நகரமான மும்பையில் 57,416 பேரும், சென்னையில் 30 ஆயிரம் பேரும் வீடின்றி இருப்பதாக அரசின் புள்ளி விவரம் கூறினாலும் உண்மை நிலவரம் அதை விட 5 மடங்கு அதிகம் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். எனவே, எத்தனை வீடுகள் கட்டப்பட்டால், நாட்டிலுள்ள அனைவருக்கும் வீடு கிடைக்கும் என்பதை உறுதிப்படுத்துவது கடினமாக உள்ளது.பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தின் மூலம் வீடற்றவர்கள் மட்டுமின்றி, மிகவும் குறைந்த, தரமற்ற இருப்பிடத்தில் வசித்து வருபவர்களுக்கும் வீடுகள் கட்டிக் கொள்ள ₹1 லட்சத்து 30 ஆயிரம் முதல் 2 லட்சத்து 10 ஆயிரம் வரை மானியம் வழங்கப்படுகிறது.

சொந்த வீட்டுமனை வைத்துள்ளவர்கள், அரசு வழங்கும் இலவச மனைப்பட்டா வைத்திருப்பவர்கள் அனைவருக்கும் 350 சதுர அடிக்கும் மேல் வீடு கட்டிக் கொள்ள 2.60 லட்சம் வரை மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கப்படுகிறது.

கடந்த ஆண்டு இறுதி வரை 7 மில்லியன் வீடுகளை கட்டுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, 1.4 மில்லியன் வீடுகளுக்கே மக்கள் குடிபெயர்ந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. 2016ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை, நாட்டின் கிராமப்புற பகுதிகளில் 10 மில்லியன் வீடுகளை கட்டுவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இதுவரை பிரதமரின் ஆவாஸ் யோஜனா திட்டத்தில் 71.83 லட்சம் வீடுகளே பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. வீடின்றி தவிப்பவர்கள், வசதிகள் இன்றி இடிந்து விழும் நிலையில் உள்ள வீடுகளில் வசிப்பவர்களுக்கு குடிசை மாற்று வாரியம் மூலம் பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டித்தரப்படுகின்றன. இவர்களுக்கு 1 லட்சத்து 30 ஆயிரம் முதல் 2 லட்சத்து 10 ஆயிரம் வரை மானியம் வழங்கப்படுகிறது.

நகர்ப்புறங்களில் சொந்த வீட்டுமனைகள் வைத்துள்ள நடுத்தர வர்க்கத்தினருக்கு வங்கிகள் மூலம் 2 லட்சத்து 60 ஆயிரம் மானியத்துடன் கூடிய வீட்டுக்கடன் வழங்கப்படுகிறது. ஆனால், இத்திட்டம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படாததால் அரசின் இலக்கை எட்டி முடிப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது. எனவே, பிரதமரின் வீடு வழங்கும் திட்டம் குறித்த விழிப்புணர்வை அனைவருக்கும் ஏற்படுத்தும் வகையில் மத்திய, மாநில அரசுகள் தங்கள் நடவடிக்கையை முன்னெடுத்து செல்ல வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

திட்டத்தின் பயனை பெறுவது எப்படி?  

பிரதான் மந்த்ரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் முக்கியமான உட்பிரிவுகளில் ஒன்று, குறைந்த வருவாய் குழு/பொருளாதாரரீதியில் பலவீனமான பிரிவு மற்றும் நடுத்தர வருவாய் குழு ஆகியவற்றுக்கான கடன் இணைத்த மானியத் திட்டம் (சிஎல்எஸ்எஸ்) இத்திட்டத்தின்கீழ், கடன் வழங்கும் அமைப்புகளின் வழியாக மத்திய அரசு தகுதியுள்ளவர்களுக்கு நிதியுதவி வழங்குகிறது. இந்த நிதியுதவி 2011ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி சட்டஉரிமை பெற்ற அனைத்து நகரங்கள், அவற்றின் அருகிலுள்ள திட்டப்பகுதிகளுக்கு வழங்கப்படுகிறது. இப்பட்டியலை மத்திய அரசு அவ்வப்போது மேம்படுத்திவரும். சிஎல்எஸ்எஸ் மானியத்துக்கான தகுதி அடிப்படையை பூர்த்திசெய்யும் கடன் விண்ணப்பங்கள் தேசிய வீட்டுவசதி வங்கியின் (என்எச்பி) அங்கீகாரத்துக்காக அனுப்பப்படுகின்றன. ஒரு விண்ணப்பதாரர் அதிகபட்சமாக 2.67 லட்சம் வரை வட்டி மானியம் பெறலாம். மத்திய அரசு வழங்கும் வட்டி மானியமானது தகுதியுள்ள பலன்பெறுவோரின் கடன் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.

 

இதன் பொருள், பலன் பெறுவோர் 20 லட்சத்தை ஆண்டுக்கு 8.7 சதவீத வட்டியில் 20 ஆண்டு கடனாக பெறும்போது, அக்கடன் தொகையில் 2.67 லட்சம் மானியமாக பெறுவார். இதனால் அவர் பெறும் வீட்டுக்கடனின் வட்டி விகிதம் 6.79 சதவீதமாக குறைகிறது. நாடு முழுவதும் பலன் பெறுவோர் இம்மானியத்தை பெறுவதற்கு ஐஐஎப்எல் வீட்டுக்கடன்கள் உதவி வருகிறது. கடன் இணைத்த மானியத் திட்டம்(சிஎல்எஸ்எஸ்): ஒரு வீட்டின் ஆண்டு வருவாய் 6 லட்சத்துக்குள் இருந்தால், அந்த குடும்பங்கள் இத்திட்டத்தின் கீழ் மானியத்துக்கு தகுதிபெறும். அந்த குடும்பத்துக்கு இந்தியாவின் எந்த பகுதியிலும் வீடு இருக்கக்கூடாது. மானியமானது பலன் பெறுபவருடைய கடன் கணக்கில் முன்கூட்டியே வரவு வைக்கப்படுவதால், வீட்டுக்கடன், மாதாந்திர தவணை காலம் ஆகியவை குறைகின்றன.

சிஎல்எஸ்எஸ்  திட்டத்தின் அம்சங்கள் அதிகபட்ச மானியம் 2.67 லட்சம்

20 ஆண்டுகள் அல்லது கடன் காலகட்டம், இந்த இரண்டில் எது குறைவோ அதற்கு 6.5 சதவீதத்தில் வட்டி மானியம் ₹6 லட்சம் வரையிலான கடன் தொகைகளுக்கு மட்டுமே மானியம் கிடைக்கும். 6 லட்சத்துக்கு மேல் கூடுதல் கடன் தேவைப்பட்டால், மானியம் இல்லாத விகிதத்தில் அதனை பெற வேண்டியிருக்கும். இத்திட்டத்துக்கு விண்ணப்பிக்க கண்டிப்பாக ஆதார் அட்டை வைத்திருக்க வேண்டும்.

Related Stories: