கொரோனாவுக்கு பலி 1660 ஆக அதிகரிப்பு: வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு நடன பயிற்சி

பீஜிங்: சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் பலியானவர்களின் எண்ணிக்கை, 1660 ஆக அதிகரித்துள்ளது.  சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகர் வுகானில் இருந்து கடந்த டிசம்பர் மாத இறுதியில் பரவிய கொரோனா வைரஸ் தற்போது நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதனால் நாளுக்கு நாள் உயிரிழப்புகளும் அதிகரித்து கொண்டே வருகின்றன. இந்நிலையில், நேற்று ஒரே நாளில் வுகான் நகரில்  மட்டும், 142 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 2000 பேர் நேற்று ஒரே நாளில், கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக, சீன சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அங்கே தவித்த தங்கள் நாட்டவர் 175 பேரை, நேபாள அரசு, தனிவிமானம் மூலம் மீட்டு வந்துள்ளது. அவர்கள் அனைவரும், தலைநகர் காத்மண்டுவில், தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்படுவார்கள் என்று நேபாள அரசு தெரிவித்துள்ளது. தற்போது, கொரோனா வைரஸ் தாக்கியதில் பலியானவர்களின் எண்ணிக்கை 1,660  ஆக உயர்ந்துள்ளதாக மாகாண சுகாதார ஆணையம் அறிவித்துள்ளது.

இதற்கிடையில், கொரோனா வைரசை கட்டுப்படுத்த மருத்துவர்கள் தீவிர முயற்சி மேற்கொண்டுவருகின்றனர். வைரஸ் அதிகம் பரவியுள்ள ஹூபெய் மாகாணம் வுகான் நகரில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துவந்த 6  மருத்துவர்கள்  உயிரிழந்துள்ளனர். மேலும், 1700 மருத்துவர்களுக்கு வைரஸ் பாதித்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளவர்களை ஊக்குவிக்கும் வகையில், மருத்துவமனையில் நடனப் பயிற்சி அளிக்கப்படுகிறது. நோய் பாதிப்பு மற்றும் அறிகுறி உள்ளவர்களை மனதளவில் திடமாக வைத்திருக்க இந்த பயிற்சி வழங்கப்படுகிறது. நோயாளிகளுக்கு மத்தியில் செவிலியர் நடனமாட, அவரை பின்பற்றி ஆண்கள், பெண்கள், சிறியவர்கள், பெரியவர்கள் என அனைவரும் மகிழ்ச்சியுடன் நடனம் பயின்று வருகின்றனர். இந்த நடனம் தங்களுக்குள் புது நம்பிக்கையை தருவதாக வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் உற்சாகமாக தெரிவிக்கின்றனர்.

Related Stories: