தமிழக- ஆந்திர எல்லை கிராமங்களில் யானைகள் அட்டகாசம் அதிகரிப்பு

வேலூர்: தமிழக-ஆந்திர எல்லை கிராமங்களில் யானைகள் அட்டகாசம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் கதிகலங்கி கிடக்கின்றனர். இதை தடுக்க முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர். தமிழக-ஆந்திர எல்லையான வேலூர் மாவட்டத்தில் உள்ள காடுகளில் இருந்து யானைகள் வெளியேறி அடிக்கடி கிராமங்களில் புகுந்து விடுகிறது. கடந்த சில ஆண்டுகளாக 10க்கும் மேற்பட்ட யானைகள் கூட்டம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து வாணியம்பாடி, பேரணாம்பட்டு, குடியாத்தம் உள்ளிட்ட பகுதிகளில் புகுந்து அங்குள்ள விளைநிலங்களை சேதப்படுத்திவிட்டு, பின்னர் சில நாட்களில் மீண்டும் கிருஷ்ணகிரிக்கு சென்றுவிடும். ஆனால் தற்போது 40க்கும் மேற்பட்ட யானைகள் கூட்டம் ஒரே நேரத்தில் தமிழக- ஆந்திர எல்லை கிராமங்களில் முகாமிட்டுள்ளது. கடந்த ஒரு மாதமாக குடியாத்தம், பேரணாம்பட்டு, காட்பாடி அருகே உள்ள சுற்றுப்புற பகுதிகளில் உள்ள விவசாயநிலங்களில் புகுந்து பயிர்களை அழித்து வருகிறது.

Advertising
Advertising

யானைகள் வரும் பாதைகள் ஆக்கிரமிப்பு, வனப்பகுதி ஆக்கிரமிப்பு, வறட்சி என்று பல்வேறு காரணங்களால் யானைகள் கிராமங்களுக்குள் சர்வசாதாரணமாக நுழைந்து விளைநிலங்களை நாசமாக்கி, மனிதர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.  இந்நிலையில் கிராமப்புறங்களை கடந்து காட்பாடி வரையில் முதன்முறையாக யானைகள் கூட்டம் படையெடுத்துள்ளது. இந்த யானைகளின் அத்துமீறலால், குடியாத்தம், மோர்தானா, கல்லப்பாடி, காட்பாடி அடுத்த பள்ளத்தூர், ராமாபுரம், ராஜாதோப்பு, தொண்டான்துளசி, அக்கிரெட்டிப்புதூர், சிங்காரெட்டியூர், வண்டறந்தாங்கல், சல்லாவூர் என்று கடந்த ஒரு மாதத்தில் பல்வேறு கிராமங்களில் பல நூறு ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள நெல், கரும்பு, வாழைப்பயிர்கள நாசமாக்கின.

யானைகள் அனைத்தும் நகரப்புறங்களை ஒட்டியுள்ள கிராமங்களில் நள்ளிரவில் புகுந்ததால் பொதுமக்கள் கதிகலங்கி கிடக்கின்றனர். யானைகள் எப்போது வேண்டுமானாலும் ஊருக்குள் புகுந்துவிடும் என்பதால் பொதுமக்கள் இரவு நேரங்களில் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். வனத்துறை ஊழியர்களும், பொதுமக்களும் இணைந்து, யானைகள் கிராமங்களில் வராமல் தடுத்து காடுகளுக்கே விரட்டியடிக்கின்றனர்.  ஆனால் காட்டில் தங்காமல் யானைகள் மீண்டும் வெவ்வேறு கிராமங்களுக்குள் புகுந்து வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாமல் வனத்துறையினரும் திணறி வருகின்றனர்.வேலூர் மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக ஒரே நேரத்தில் 40க்கும் மேற்பட்ட யானைகள் கிராமங்களில் புகுந்ததால் அதை திசை திருப்பி காட்டுப்பகுதிகளுக்கு கொண்டு செல்ல முறையான பயிற்சி பெற்ற வேட்டை தடுப்பு காவலர்கள் இல்லாததால் யானைகள் நாலாபுறமாக திசை மாறிச்சென்றுள்ளது.

யானைகள் கூட்டத்தை விரட்டியடிக்க கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இருந்து 10க்கும் மேற்பட்ட வேட்டை தடுப்பு காவலர்கள் வேலூர் மாவட்டத்தில் முகாமிட்டுள்ளனர். இருப்பினும் யானைகளை அதன் திசையில் திருப்பி அனுப்ப முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர். எனவே தமிழக-ஆந்திர எல்லை கிராமங்களில் உள்ள மக்களை யானைகளின் பீதியில் இருந்து காப்பாற்ற அரசு முறையான பயிற்சி பெற்ற வேட்டை தடுப்பு காவலர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் காடுகளில் விலங்குகளுக்கான தண்ணீர் தொட்டிகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூகஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.  இதுகுறித்து வனத்துறை ஊழியர்கள் கூறியதாவது: இரு பிரிவுகளாக யானைகள் கூட்டம் பிரிந்துள்ளது. ஒரு கூட்டம் பேரணாம்பட்டு அடுத்த சைனகுண்டா பகுதியிலும், மற்றொரு யானைக்கூட்டம் காட்பாடி சுற்றியுள்ள கிராமங்களில் முகாமிட்டுள்ளது.

வனத்துறை ஊழியர்கள் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் விரட்டினாலும், அந்த யானைகள் காட்டுப்பகுதிக்கு செல்ல முடியாமல் தவித்து வருகிறது. ஆனால், இதுவரையில் பொதுமக்களை எந்தவித தொந்தரவும் செய்யவில்லை. பயிர்களை மட்டும் நாசம் செய்து வருகிறது. ஒரே நேரத்தில் இவ்வளவு யானைக்கூட்டத்தை விரட்ட பெரும் சவாலாக உள்ளது. இருப்பினும் வனத்துறை சார்பில் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். இவ்வாறு கூறினர்.

வேட்டை தடுப்பு காவலர்கள் நியமிக்க அரசுக்கு பரிந்துரை

வேலூர் மாவட்ட வனஅலுவலர் பார்கவதேஜா கூறியதாவது: வேலூர் மாவட்டத்தில் இதுவரையில் இவ்வளவு யானைகள் கூட்டம் வந்ததில்லை. இந்த  யானைகள் இருபிரிவுகளாக பிரிந்ததால் அதன் வழியிலேயே திருப்பி அனுப்ப பல்வேறு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும் திசைமாறி சென்றுள்ளது. யானைகளை சரியான பாதையில் காட்டுப்பகுதிக்கு அனுப்பும் பணியில் வேட்டை தடுப்பு காவலர்கள் ஒசூரில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளனர். வேலூர் மாவட்டத்துக்கு நிரந்தரமாக வேட்டை தடுப்பு காவலர்கள் நியமனம் செய்ய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. யானைகளை விரட்ட தமிழக- ஆந்திர எல்லையில் வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இவ்வாறு கூறினர்.  

இழப்பீடு விரைவாக வழங்க வேண்டும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறியதாவது:

யானைக்கூட்டம் வாழை, நெல், கரும்பு போன்ற பயிர்களை நாசம் செய்துள்ளது. இதுகுறித்து விஏஓக்கள் மற்றும் வனத்துறையினர் பார்வையிட்டனர். ஆனால் இழப்பீடு எப்போது வரும் என்று சொல்ல முடியாது என்று தெரிவித்துள்ளனர். ஏற்கனவே மழை இல்லாததால் இருக்கின்ற தண்ணீரை வைத்து பயிர் செய்து வருகின்றோம். ஆனால் யானை கூட்டம் வந்து நாசம் செய்துவிட்டதால் எங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. ஏக்கருக்கு ₹10 ஆயிரம் முதல் ₹20 ஆயிரம் வரை இழப்பீடு வழங்க வேண்டும். ஏற்கனவே கடந்த ஆண்டுகளில் குடியாத்தம் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் யானைகளால் சேதமான பயிர்களுக்கு இன்னும் இழப்பீடு வழங்கவில்லை. பலமுறை வனத்துறையினரிடம் கேட்டாலும், நிதி இல்லை என்று தட்டிக்கழிக்கின்றனர். எனவே மாவட்ட நிர்வாகமும், வனத்துறையினரும் இழப்பீடு விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

யானைகள் சரணாலயம் வருமா? யானைகள் சரணாலயம் குறித்து பொதுமக்கள் கூறியதாவது:

தமிழக- ஆந்திரா எல்லையான குடியாத்தம், பேரணாம்பட்டு பகுதிகளில் எப்போதும் யானைகள் கூட்டம் இருந்து வருகிறது. இதற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் யானைகள் சரணாலயம் அமைக்க வேண்டும். காட்பாடி அருகே திடீரென யானைகள் கூட்டம் படையெடுத்துள்ளதால், அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர். இதுவரை இல்லாத வகையில் நகரங்களை ஒட்டியுள்ள பகுதிக்கு யானைகள் வந்துள்ளது. வரும் காலங்களில் நகரங்களிலும் யானைகள் படையெடுக்கும் நிலை ஏற்படும். எனவே வனத்துறை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். வனவிலங்குகளுக்கு தேவையான உணவுகளை வழங்க வனத்துறை ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: