காரைக்குடியில் வீடு புகுந்து திருட முயன்ற பிரபல முகமூடி கொள்ளையன் சிசிடிவி அலாரத்தால் சிக்கினான்

காரைக்குடி: காரைக்குடியில் தலைமையாசிரியர் வீட்டில் திருட முயன்ற பிரபல முகமூடி கொள்ளையன் சிசிடிவி அலாரம் மூலம் சிக்கினான். சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, மருதுபாண்டியர் நகர், ஆனந்தா நகரில் வசித்து வருபவர் அரசு பள்ளி தலைமையாசிரியர் அமல்ராஜ் கென்னடி (50). இவர் பணி புரியும் பள்ளியில் நேற்று முன்தினம் மாலை ஆண்டு விழா நடந்தது. இதற்காக அவர் குடும்பத்துடன் சென்றிருந்தார். இதுதெரிந்த முகமூடி கொள்ளையன், இரவில் அமல்ராஜ் கென்னடியின் வீட்டு பூட்டை உடைத்து திருட முயன்றான். அமல்ராஜ் கென்னடி வீட்டில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதை அவரது செல்போனுடன் இணைத்துள்ளார்.

கொள்ளையன் பூட்டை உடைத்தபோது அவரது செல்போன் அலறியது. இதைப்பார்த்த அவர் அக்கம்பக்கத்தினருக்கு தகவல் கொடுத்தார். போலீசுக்கும் தெரிவிக்கப்பட்டது. அங்கு திரண்டு வந்த மக்கள் கொள்ளையனை வீட்டுக்குள் வைத்து பூட்டினர். ரோந்சு போலீசார் வந்ததும் கொள்ளையனை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். அதன் பிறகு காரைக்குடி வடக்கு போலீசில் ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணையில், பிடிபட்டவன் கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலைச் சேர்ந்த ராபின் (30) என்பது தெரிந்தது. தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கொள்ளையடித்து ஜெயிலுக்குச் சென்றவன் என்றும், இவன் மீது 36 வழக்குகள் உள்ளதும், கடந்த வாரம் ஜெயிலிலிருந்து ஜாமீனில் வந்ததும் தெரிந்தது. ராபினை காரைக்குடி வடக்கு போலீசார் கைது செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.

துண்டுபிரசுரம் மூலம் நோட்டம்

தலைமையாசிரியர் பள்ளி ஆண்டு விழாவில் கலந்து கொள்வதாக பள்ளி சார்பாக துண்டுபிரசுரம் மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. அது கொள்ளையன் ராபின் கையில் சிக்கியுள்ளது. அதை பார்த்து தலைமையாசிரியர் பள்ளியில் இருப்பார் என்பதை அறிந்து, வீட்டுக்குள் புகுந்து திருட முயன்றுள்ளான்.

Related Stories: