சென்னையில் போலீஸ் தடியடியை எதிர்த்து தமிழகம் முழுவதும் கண்டன போராட்டம்: 200 இடங்களில் முஸ்லிம்கள் மறியல்: சிஏஏவுக்கு மீண்டும் எதிர்ப்பு வலுக்கிறது

சென்னை: சென்னை வண்ணாரப்பேட்டையில் நேற்று முன்தினம் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராடியவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி தாக்கியதை  கண்டித்து தமிழகம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட இடங்களில் 2வது நாளாக நேற்றும் மறியல், ஆர்ப்பாட்டம், முற்றுகைப் போராட்டம் நடந்தது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெற  வலியுறுத்தி நாடு முழுவதும் முஸ்லிம் அமைப்புகள் மற்றும்  எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.  நேற்று முன்தினம் சென்னை வண்ணாரப்பேட்டை லாலாகுண்டா பகுதியில்   500க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கையில் பதாகைகள் ஏந்தியும்,  கோஷங்களை எழுப்பியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் இரவு வரை  நீடித்தது.

இதனால் அந்தப் பகுதியில் கூடுதல் கமிஷனர்  தினகரன், இணை கமிஷனர் கபில்குமர் சரத்கர், துணை கமிஷனர் சுப்புலட்சுமி ஆகியோரது தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர். அவர்கள்  கூட்டத்தினரை கலைந்து செல்ல வேண்டுகோள் விடுத்தனர்.  ஆனால் அவர்கள் கலைந்து செல்லவில்லை. எனவே போராட்டம் நடத்தியவர்கள்  இருந்த பகுதியில் போலீசார் இரும்பு தடுப்புகளை ஏற்படுத்தினர்.  இதனால், காவல்துறையினருக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே  வாக்குவாதம் முற்றி தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போராட்டத்தில்  பெண்களும், வயதானவர்களும் இருந்ததால், இந்த தள்ளுமுள்ளுவில்  பெண்கள் கீழே விழுந்து காயமடைந்தனர். அதில் ஒருவர் உயிரிழந்ததாக கூறப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்ட  ஒரு சிலரை போலீசார் சரமாரியாக தாக்கி, தரதரவென இழுத்துச் சென்று  வாகனத்தில் ஏற்றினர். தடியடி நடத்தியதில் பலருக்கு காயம் ஏற்பட்டது. ஒருசிலருக்கு மண்டை உடைந்தது. இதுதொடர்பாக 50க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்து வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை பகுதிகளில் உள்ள திருமண மண்டபங்களில் வைத்தனர். இருந்தபோதிலும் போராட்டம் தீவிரம் அடைந்தது. வண்ணாரப்பேட்டை தடியடியைக் கண்டித்து மாநிலம் முழுவதும் போராட்டம் தீவிரமானது. இதனால் வண்ணாரப்பேட்டை காவல்நிலையத்துக்கு சென்னை கமிஷனர் விஸ்வநாதன் வந்து விசாரணை நடத்தினார். பின்னர், ஜமாத் தலைவர்களை காவல்நிலையம் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதைெதாடர்ந்து அனைவரும் விடுதலை செய்யப்படுவதாக கமிஷனர் அறிவித்தார். இதனால் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

இருந்தபோதிலும் நேற்றுமுன்தினம் இரவில் இருந்து வண்ணாரப்பேட்டையில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், 500க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து மண்ணடி, பாரிமுனை, திருவல்லிக்கேணி, சேப்பாக்கம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் முஸ்லிம்கள் கலந்து கொள்ள  வந்தனர். இவர்களை தடுக்கும் விதமாக முக்கிய பகுதிகளில் தடுப்பு அமைக்கப்பட்டது. மேலும் தடியடியின்போது ஓடியதில், லாலாகுண்டா பகுதியை சேர்ந்த பஸ்ரூஸ்ஹக் (68) என்பவர் இறந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகின. இவரது குடும்பத்துக்கு ஆறுதல் கூற சென்ற போலீசாரை தடுத்தனர். அவரது உடலை பிரேத பரிசோதனை செய்ய மருத்துவமனைக்கு எடுத்து செல்லவும் உறவினர்கள் அனுமதிக்கவில்லை. இந்த சம்பவத்தால் வடசென்னை பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. தடியடி நடத்திய போலீசாரை கண்டித்து  தவ்ஹீத் ஜமாத் அமைப்பு சார்பில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வண்ணாரப்பேட்டை  காவல்நிலையத்தை நேற்று காலை  முற்றுகையிட புறப்பட்டனர். இதையறிந்ததும் தங்கசாலை மேம்பாலம் அருகே இரும்பு கம்பிகளால் தடுப்பு அமைத்து போராட்டக்காரர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கேயே ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டம் நடந்த பகுதிக்கு முன்னாள் மத்திய அமைச்சரும் மத்திய சென்னை எம்பியுமான தயாநிதி மாறன், வடசென்னை எம்பி கலாநிதி வீராசாமி, காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியன், அமமுக வெற்றிவேல் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் சென்று போராட்டக்காரர்களை சந்தித்துப் பேசினர். அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர். விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாவட்ட பொருளாளர் யூசுப் கலந்து கொண்டார்.இந்தப் போராட்டம் நேற்று நள்ளிரவு வரை நீடித்தது. இதனால் வட சென்னை முழுவதும் பரபரப்பும், பதட்டமும் நிலவுகிறது. தாம்பரம்: போலீசாரின் தடியடியை கண்டித்து நேற்று  முன்தினம் இரவு ஜிஎஸ்டி சாலையில் தாம்பரம் பேருந்து நிலையம் அருகே  300க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில்  ஈடுபட்டனர். கல்பாக்கம்: இதேபோல், சென்னை - புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில்,  கல்பாக்கம் அருகே புதுப்பட்டினத்தில் 200க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் சாலை  மறியலில் ஈடுபட்டனர். திருச்சி: திருச்சி பாலக்கரை  ரவுண்டானாவில்  நேற்று முன்தினம் இரவு  தமுமுக உள்ளிட்ட இஸ்லாமிய  அமைப்பினர் திடீர் சாலை மறியல் மற்றும்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  நேற்று காலையிலும் திருச்சி பாலக்கரையில் முஸ்லிம்கள் குவிந்து ரவுண்டானா  முதல் கால்நடை ஆஸ்பத்திரி வரை சாலையில்  500க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட  ஆயிரக்கணக்கானோர் அமர்ந்து மறியல் செய்தனர்.

நாகை  மாவட்டம் நாகூர் புதிய பஸ்ஸ்டாண்ட் அருகே  நூற்றுக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சையில்  எஸ்.பி.  அலுவலகத்தை முற்றுகையிட போவதாக அறிவித்தனர். பின்னர் தஞ்சை ஆற்றுப்பாலம் அருகே திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 2ஆயிரம்  பேர் பங்கேற்றனர். திடீரென சிலர்  நடுரோட்டில் அமர்ந்து மறியல் செய்தனர்.  போலீசார் அவர்களை   அப்புறப்படுத்த முயன்றபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டது.  பின்னர்   ஒருங்கிணைந்த இஸ்லாமிய கூட்டமைப்பு தலைவர் முகமதுஅப்பாஸ்  தலைமையில் 30 பேரை கைது செய்தனர். கும்பகோணத்தில்  நேற்று காலை தலைமை தபால்  நிலையம் அருகே இஸ்லாமிய அமைப்புகளின் சார்பில்  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவாரூரில் தலைமை தபால் நிலையம் முன் தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமாத்  அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம்: சேலம் டவுன் உதவி கமிஷனர் அலுவலகம் முன்பு முஸ்லிம்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டனர். இதில், பெண்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு, கோஷம்  எழுப்பினர். அதேபோல், நாமக்கல்லில் பூங்கா சாலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தர்மபுரியில்,  நேற்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அரூர்  தாலுகா அலுவலகம் முன்பு, அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில்  ஆர்ப்பாட்டம் நடந்தது.  கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையில் நடந்த  ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான முஸ்லிம்கள் பங்கேற்றனர்.

தூத்துக்குடி,  தென்காசி: மேலப்பாளையம் சந்தைமுக்கு, பஜார் திடலில் இஸ்லாமிய அமைப்பினர்  மற்றும் பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி  மேலப்பாளையம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

தூத்துக்குடியில்  தென்பாகம் காவல் நிலையம் முன்பு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர்  முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். தென்காசியில் கலெக்டர் அலுவலகத்தை  முற்றுகையிட சென்ற தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் செய்து கலைந்து  சென்றனர். நீலகிரி மாவட்டம் குன்னூர் மார்க்கெட் பகுதியில் உள்ள  1000க்கும் மேற்பட்ட கடைகள் நேற்று அடைக்கப்பட்டது. நேற்று மாலை 4  மணியளவில் இஸ்லாமிய கூட்டமைப்புகள் சார்பில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது. கலெக்டர், எஸ்பி அலுவலகத்தில்: நாகர்கோவிலில் உள்ள குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று எஸ்டிபிஐ சார்பில்  ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பெண்கள், குழந்தைகள் உட்பட 2 ஆயிரத்திற்கும்  மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் குமரி மாவட்ட  கிளை சார்பில், நாகர்கோவிலில் உள்ள எஸ்.பி. அலுவலகத்தை முற்றுகையிட்டு  நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. 1200 பெண்கள் உள்பட சுமார் 3 ஆயிரம் பேர்  கலந்து கொண்டனர்.

மதுரை : மதுரை நெல்பேட்டை, புதூர், உத்தங்குடி,  திருமங்கலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் முஸ்லீம்கள் நேற்று முன்தினம் இரவு  மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். இரவு 9 மணியளவில் மதுரை  மகபூப்பாளையம் ஜின்னா திடலில் முஸ்லிம் பெண்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் நேற்றும் தொடர்ந்தது. அங்கேயே  உணவு சமைத்து சாப்பிட்டனர். விருதுநகர் : விருதுநகர் பழைய பஸ்நிலையம்  அருகே நேற்று காலை அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் மறியல்  போராட்டம், மாலை தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும்  சிவகாசி, அருப்புக்கோட்டை ஆகிய இடங்களில் போராட்டம் நடந்தது.

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் டிஐஜி அலுவலகத்தை நேற்று காலை ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள்  முற்றுகையிடச் சென்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.  இதேபோல் கமுதி, பரமக்குடி, கீழக்கரையில் முஸ்லிம் ஜமாத்தார்கள் சார்பில்  கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில்  இளையான்குடி, காரைக்குடி, சிவகங்கை உள்பட பல்வேறு பகுதிகளில் நேற்று  1,100க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திண்டுக்கல்  : திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் அருகே நேற்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்  அமைப்பினர் தேசிய கொடியை கைகளில் ஏந்தியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.  தேனி  : தேனி புதுப்பள்ளிவாசல் அருகே ஏராளமானோர் திரண்டு சாலை மறியலில்  ஈடுபட்டனர். தொடர்ந்து தேனி எஸ்பி அலுவலகத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்  அமைப்பை சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டனர்.  இதேபோல் கம்பம்,  உத்தமபாளையம், பெரியகுளம், சின்னமனூர் ஆகிய பகுதிகளிலும்  மறியல் நடந்தது.  

ஈரோடு பஸ் ஸ்டாண்ட் அருகே தவ்ஹீத் ஜமா அத் உள்பட பல்வேறு முஸ்லிம் அமைப்பினர் நேற்று திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர்:  திருப்பூரில், தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கலெக்டர் அலுவலக வளாகத்திற்கு  எதிராக பெண்கள் உட்பட 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் அறிவொளி சாலையில் நேற்று காலை இஸ்லாமிய இளைஞர்கள் கூட்டமைப்பு சார்பில் பெண்கள் உட்பட ஏராளமானோர் தொடர்  தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை: கோவையில் நேற்றுமுன்தினம்  நள்ளிரவு ஆத்துப்பாலம் பகுதியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள்  மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பொள்ளாச்சி: பொள்ளாச்சி காந்தி சிலை  அருகே கோவை சாலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 300க்கும் முஸ்லிகள் சாலை  மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பஸ் நிலையம் அருகே நேற்றுமுன்தினம் இரவு மறியல் செய்த தமுமுகவை சேர்ந்த 100 பேர் மீது ஆற்காடு டவுன் போலீசார் நேற்று வழக்குப்பதிந்தனர். திருப்பத்தூர் தாலுகா அலுவலகம் எதிரே தவ்ஹீத் ஜமாத், மனிதநேய மக்கள் கட்சி, முஸ்லிம் லீக் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். திருவண்ணாமலை: திருவண்ணாமலை காமராஜர் சிலை அருகே நேற்று மாலை எஸ்டிபிஐ கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வந்தவாசி பழைய பஸ் நிலையம் அருகே நேற்று மாலை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில செயலாளர் ஐ.அன்சாரி தலைமையில் ஏராளமான முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இவ்வாறு தமிழகம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட இடங்களில் போராட்டம் நடந்தது.

Related Stories: