×

போலீஸ் சேனல்

* சிறைக்குள் பணத்தின் ருசி கண்ட பூனைகள்
வேலூரில் ஆண்கள் மத்திய சிறை, பெண்கள் தனிச்சிறை உள்ளன. இந்த சிறைகளில் செல்போன், கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. கைதிகளிடம் பணத்தை பெற்றுக்கொண்டு அவர்களுக்கு தேவையான சகல வசதிகளும் செய்து கொடுக்கப்படுகிறதாம். கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறைத்துறை நிர்வாகம் சிறைத்துறை அலுவலர்கள், பணியாளர்களுக்கு அனுப்பி வைத்த சுற்றறிக்கையில், கைதிகளிடம் பணத்தை வாங்கிக்கொண்டு அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படுகிறது. சிறை காவலர்கள் சிலர் கைதிகளின் மனைவிகளுடன் கள்ளத்தொடர்பு வைத்துள்ளனர் உள்ளிட்ட புகார்கள் வந்துள்ளதாக தெரிவித்திருந்தது. ஆனால், அந்த சுற்றறிக்கையை கண்டு கொள்ளாமல் தங்கள் கடமையை வழக்கம்போல் சிறைத்துறை அலுவலர்கள் செய்து வருகிறார்களாம்.

அதேபோல், வேலூர் பெண்கள் தனிச்சிறையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விசாரணை அறையில் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் சிறை காவலர்கள் உதவியது தெரியவந்தது. இதுகுறித்து சிறை நிர்வாகம் ரகசிய விசாரணை நடத்தி வருகிறது. ருசி கண்ட பூனை போல சிறைகளில் வருவாய் பார்த்து வருபவர்கள் சுற்றறிக்கையாவது, மண்ணாங்கட்டியாவது என்ற ரீதியில் தங்கள் பாதையை மாற்றிக் கொள்ளாமல் உள்ளார்களாம். இதை எப்படி சமாளிப்பது, சிறைகள் மீதுள்ள பழியை எப்படி துடைப்பது என்ற யோசனையில் இறங்கியுள்ள வேலூர் சிறை நிர்வாகம் ஓரிருவர் மீது நடவடிக்கை எடுத்தால்தான் திருந்துவார்கள் என்ற எண்ணத்தில் உள்ளதாம்.

* மைக்கில் வெளுத்து வாங்கும் கமிஷனர்
மலைக்கோட்டை மாநகரில் 14 சட்டம், ஒழுங்கு காவல் நிலையம், 6 குற்றப்பிரிவு காவல் நிலையம், 2 போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் நிலையம், சிசிபி உள்ளிட்ட காவல் நிலையங்கள் உள்ளது. மாநகரில் 2 துணை கமிஷனர்கள், 1 கூடுதல் துணை கமிஷனர், 17 உதவி கமிஷனர்கள், 40 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் எஸ்ஐக்கள் பணியில் உள்ளனர். இதில் மாநகரில் தினமும் ஏதேனும் ஒரு வகையில் போராட்டம், ஆர்ப்பாட்டம், விஐபி வருகை, சிறையில் உள்ள குற்றவாளிகளை வேறு மாவட்ட நீதிமன்றங்களுக்கு விசாரணைக்காக கொண்டு செல்வது என்பது போன்றவற்றுக்காக இன்ஸ்பெக்டர்களுக்கு பணி ஒதுக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து கன்ட்ரோல் ரூம் மூலம் அனைவருக்கும் தகவல் தெரிவிக்கப்படும். அதனையும் மீறி மாநகரில் ஒரு சில இன்ஸ்பெக்டர்கள், பந்தோபஸ்து பணி ஒதுக்கப்பட்டாலும், அதனை புறந்தள்ளி விடுமுறையில் சென்று விடுகின்றனர். தொடர்ந்து பந்தோபஸ்து பணிக்கு இன்ஸ்பெக்டர்கள் வராத நிலையில் பற்றாகுறை ஏற்படுகிறது. இதனால் மாநகர காவல்துறை தடுமாறும் நிலை ஏற்படுகிறது. இதுகுறித்து அறிந்து கடுப்பான மாநகர கமிஷனர், மைக்கில் அனைவரையும் ஒரு பிடிபிடித்தார். விடுமுறை தேவை தான். அதற்காக உங்கள் இஷ்டத்திற்கு லீவு போடுவதா, டிசிபிளின் வேண்டாமா, முறையான தகவல் அளிக்க வேண்டாமா, அனைவரும் விடுமுறையில் சென்றாலும், இன்ஸ்பெக்டர்கள் பணியில் இல்லை என்றாலும் காவல் நிலையங்கள் செயல்படும் என வெளுத்து வாங்கினார். கமிஷனரின் பேச்சு மாநகர காவல்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

* கேட் திறப்பதில் இருந்து விமோசனம் கிடைக்குமா?
குமரி மாவட்ட கலெக்டர் பங்களா நாகர்கோவில் கோணத்தில் அமைந்திருக்கிறது. இங்கு சுழற்சிமுறையில் ஆயுதப்படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். குறிப்பாக பெண் போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். இவ்வாறு பாதுகாப்பு பணியில் இருக்கும் போலீசார் கேட் திறக்கும் வேலையையும் செய்ய வேண்டி இருக்கிறது. கலெக்டர் மட்டுமின்றி அவரது பங்களா வேலைக்காரர்கள், டிரைவர்கள் வரும்போது கேட் திறந்து விட வேண்டி இருக்கிறது. குப்பை அள்ள குப்பை வண்டி வரும்போதும் கதவு திறக்க வேண்டி இருக்கிறது.

இவ்வாறு சமீபத்தில் குப்பை வண்டிக்காக கதவு திறந்து விடும்போது டெம்போ சுவரில் மோதி பெண் போலீஸ் ஒருவரின் கால் முறிந்தது. தற்போது அவர் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் . மாவட்ட நீதிபதி போன்ற உயர் அதிகாரிகள் வீடுகளில் கேட் திறப்பதற்கு தனியாக ஊழியர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். கலெக்டர் பங்களாவில் மட்டும் பாதுகாப்பு பணியில் ஈடுபடக் கூடிய போலீசாரே கேட்டை திறந்து விட வேண்டி இருக்கிறது. கலெக்டருக்கு திறந்துவிட்டால் பரவாயில்லை. ஆனால் அலுவலக ஊழியர்கள், வேலைக்காரர்கள் வரும் போதும் திறந்து விட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம் என்று பெண் போலீசார் வேதனையுடன் கூறுகிறார்கள். எனவே கேட் திறப்பதில் இருந்து தங்களுக்கு விடிவு காலம் கிடைக்குமா என்று அவர்கள் ஏக்கத்துடன் காத்திருக்கிறார்கள்.

* ‘கேஸ் எடுக்கணுமா? கரன்சியை வெட்டு...’
தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே மலைக்கிராமங்கள் அதிகளவு உள்ளன. இங்கு கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி சம்பவங்கள் நடந்தால் சின்னமனூர் போலீஸ் ஸ்டேஷனுக்குத்தான் வர வேண்டி உள்ளது. இந்த ஸ்டேஷனில் குறைந்தபட்சம் ரூ.2 ஆயிரமாவது தந்தால்தான் காரியம் நடக்கிறது. வழக்கின் தன்மையைப் பொறுத்து, பண பலத்தால் பிரச்னையை இந்த ஸ்டேஷனில் எளிதாக தீர்த்து கொள்ள முடிகிறதாம். தராவிட்டால் அவரைப்பார், இவரைப்பார் என அலைக்கழிப்பது வாடிக்கையாம். இல்லாவிட்டால் மனுக்களை வைத்துக்கொண்டு அங்கேயும், இங்கேயும் திரிய வேண்டியது தான். இதனால் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. புதிய எஸ்பி சாய் சரண் தேஜாஸ் தலையிட்டு இந்த பிரச்னையை தீர்க்க வேண்டுமென மலைக்கிராமங்களை சேர்ந்த மக்கள் வலியுறுத்துகின்றனர்.


Tags : Police Channel , Police, Channel
× RELATED போலீஸ் சேனல் பகுதிக்கு தலைமை நிருபர்...