×

போலீஸ் சேனல்

* ‘அந்த’ விஷயத்தை எல்லாம் கண்டுக்காதீங்க... சும்மா....ஹி...ஹி...!
ஈரோடு மாவட்டம் கோபி சுற்று வட்டார பகுதிகளில் சினிமா படப்பிடிப்பு அதிகம் நடப்பதால், இங்குள்ள தங்கும் விடுதிகள் எப்போதும் ‘‘ஹவுஸ்புல்’’ ஆக இருக்கிறது. வெளிமாவட்டங்களில் இருந்து அதிகளவில் ஆட்கள் வந்து செல்வதால், இப்பகுதியில் பலான தொழில் களை கட்டி வருகிறது. இங்குள்ள லாட்ஜ்களில் போலீஸ் ஆசியோடு ‘‘அது’’ நடக்கிறது. இதன்மூலம், அதிகளவு வாடகை கிடைப்பதால், தங்கும் விடுதியினர் கிடைத்தவரை லாபம் என சுருட்டுகின்றனர். லாட்ஜ்கள் மட்டுமின்றி தனியார் ஹெஸ்ட் ஹவுஸ்களிலும் இதே நிலைதான். இதை, சாதகமாக பயன்படுத்திக்கொண்டு, இங்குள்ள போலீஸ் அதிகாரிகள், தங்களது பாக்கெட்டுகளை நிறைத்து விடுகின்றனர். சில நேரங்களில் ரெய்டு என்ற பெயரில் உள்ளே சென்று, ஒரு கலக்கு கலக்கி விடுகின்றனர். முடிந்து வெளியே வரும்போது, ‘‘கண்டுக்காதீங்க... சும்மா....ஹி...ஹி...!’’ என பதிலளித்து விட்டு பறந்து விடுகின்றனர். காக்கிகளுக்கு ஆளும்கட்சியினர் துணை இருப்பதால் லெவல் வேற மாதிரி போகுது... இந்த முறைகேடு மற்றும் மாமூல் வசூலை கண்காணித்து, உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டிய தனிப்பிரிவு போலீசாரும், மேட்டரை அப்படியே அமுக்கி விடுகின்றனர். எல்லாம் கரன்சி செய்கிற வேலை என்கிறார்கள் நியாயமான போலீஸ் அதிகாரிகள்.

* அள்ளிக்கிட்டு வந்த பாட்டில்கள் அம்புட்டும் ரிட்டர்ன் போன மர்மம்
முட்டைக்கு பேமசான ஊரின் பஸ் ஸ்டாண்டில் அனுமதியில்லாத டாஸ்மாக் கடைகளுக்கு பஞ்சமே இல்லை. உள்ளூர் இன்ஸ்பெக்டருக்கு மாதம் தோறும் மாமூல் செல்வதால், விற்பனை எந்த நேரமும் களை கட்டுதாம். ஒரு நாள் இரவு ரோந்துக்கு போன, கிரைம் எஸ்ஐ, இப்படி ஒரு கடையில் இருந்த பாட்டில்களை எல்லாம் ஸ்டேஷனுக்கு அள்ளிக் கொண்டு வந்தாராம். மறுநாள் அவர், ஸ்டேஷனுக்கு வந்த போது ஒரு பாட்டில் கூட இல்லையாம். சம்பந்தப்பட்ட கடைக்கு எஸ்ஐ சென்று பார்த்த போது, பாட்டில்கள் எல்லாம் பிரஷ் ஆக இருந்ததாம். டென்ஷனான எஸ்ஐ, கடைக்காரரிடம் சூடானதோடு, மறுபடியும் பாட்டில்களை தூக்க ஆரம்பிச்சாராம். ‘எல்லாருக்கும் குடுத்துட்டுதான், வியாபாரம் செய்கிறோம். உங்க மேல் அதிகாரிக்கு போன் போட்டு பேசிட்டு, அப்புறம் சரக்கில் கைவையுங்க சார்’ என்று கடைக்காரரும் விம்மி வெடித்தாராம். அப்புறம் என்ன? திருட்டுத்தனமா சரக்கு விக்கிறவன் எல்லாம் அதட்டுற அளவுக்கு நம்ம பொழப்பு இருக்குன்னு தலையில் அடிச்சிட்டு நடையை கட்டினாராம். டவுன் மட்டுமில்ல, டிஸ்ட்ரிக்ட் பூரா இப்படித்தான் இருக்கு. கிரைம் எஸ்ஐக்கு இது புதுசு. எங்களுக்கெல்லாம் இது போன்ற அனுபவங்கள் ரொம்ப பழசு என்பது நேர்மையான காக்கிகளின் குமுறல்.

* சிலிர்க்கும் சில்லிங்... தடையின்றி புரளும் கரன்சி...!
திருப்பூர் மாவட்டம் உடுமலை, மடத்துக்குளம் பகுதியில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை, சில்லிங் மது விற்பனை படு ஜோராக நடந்து வருகிறது. லாட்டரி விற்பனையைவிட, சில்லிங் மது விற்பனை ரொம்ப சூப்பராகவே நடக்கிறது. டாஸ்மாக் கடையில் இருந்து மது பாட்டில் வகைகளை வாங்கி வந்து, உடுமலை கிராமப்புறங்களில் ஆற்று மணலில் பதுக்கிவைத்து, சிலிர்க்கும் மதுவாக ஜில்...லென வாடிக்கையாளர்களுக்கு கள்ளச்சந்தையில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்கின்றனர். இந்த வகை மது, இரு சக்கர வாகனங்களில் தாராளமாக நடமாடுகிறது. இவ்வகை கள்ளச்சந்தை வியாபாரிகளுக்கு காக்கிகளின் ஆதரவு தொடர்கிறது. கூடவே, ஆளும் கட்சி அரவணைப்பும் உள்ளது. டாஸ்மாக் கடைகளுக்கு வேலை நேரம் உள்ளது. ஆனால், சில்லிங் மது, எல்லா நேரமும் தடையின்றி கிடைக்கிறது. இதன் காரணமாக, உடுமலை வட்டார காக்கிகள் மத்தியில் கரன்சி தடையின்றி புரள்கிறது.

* வசூலுக்கு ஆகாதவங்களை மாத்தும் டிராபிக் இன்சு
விழுப்புரம் டிராபிக்கிற்கு புதுசா வந்த இன்சு நல்லாவே கல்லா கட்டுராறாம். நேரடியாக இறங்காம தனது டிரைவர் மூலம் வண்டியை மடக்கி வசூல் வேட்டைதானாம். இதில், உடன்படாத போலீசாரை உடனே டிராபிக்கிலிருந்து வெளியேற்றிவிடுகிறாராம். ஏதாவது குற்றச்சாட்டுகளை உயர்அதிகாரிகளிடம் கூறி உள்ளூர் ஸ்டேஷனுக்கு அவர்களை இடமாற்றம் செய்து வராராம். இன்ஸ்பெக்டரின் ஓவர் வசூலுக்கு பயந்து நாம்ப மாட்டிக்கப்போறோம் என்று, இன்சு டிரைவர் ஒருவர் சமீபத்தில் பேக்பெயின் அதிகமாக இருக்கு, என்னாலவண்டி ஓட்டமுடியல, டிராபிக் டூட்டிபாக்கிரன்னு கூறியிருக்கறாராம். உடனே டென்ஷனான இன்சு, உயர்அதிகாரிகளிடம் கூறி லோக்கல் ஸ்டேஷனுக்கு இடம் மாற்றிட்டாராம். இதனால் டிராபிக்ல இருக்கும் மற்ற போலீசாரும் இன்சு மீது கடுப்புல இருக்காங்களாம். சாலை பாதுகாப்பு வார விழாவை இதுக்கு முன்னாடி இருந்த டிராபிக் இன்சுங்க தொடர்ந்து நிகழ்ச்சிகளை நடத்தி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினாங்க. இவர்வந்து சாலை பாதுகாப்பு வார விழாவில் ஒரு நிகழ்ச்சியைக்கூட நடத்தல, வசூல்லே கவனமாக இருந்தாராம் என்றும் பரவலான பேச்சு காவல்துறை வட்டாரத்துல இருக்காம்.

Tags : Police Channel , Police, Channel
× RELATED போலீஸ் சேனல்: வசூல் ஒழுங்கா வெட்டு... ...