அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் நடத்திய போராட்டம் எதிரொலி கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகிகளை கூண்டோடு மாற்ற எடப்பாடி திட்டம்: தளவாய்சுந்தரம் `டம்மி’ ஆக்கப்படுகிறார்

சென்னை: அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் போராட்டம் நடத்தியதன் எதிரொலியாக, கன்னியாகுமரி மாவட்ட அதிமுக நிர்வாகிகளை கூண்டோடு மாற்ற முதல்வர் எடப்பாடி திட்டமிட்டுள்ளதுடன், தளவாய்சுந்தரத்தை `டம்மி’யாக்கவும் முடிவு செய்துள்ளார். அதிமுகவின் வளர்ச்சி பணி மற்றும் தேர்தல் பணிகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் சென்னையில் கடந்த 10ம் தேதி முதல் அதிமுக மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்று வருகிறது. 11ம் தேதி 2வது நாள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருவண்ணாமலை, சிவகங்கை, நீலகிரி உள்ளிட்ட 14 மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள், மாவட்ட நிர்வாகிகளை பற்றி நேரில் குறை சொல்ல கூடாது, எழுத்துப்பூர்வமாகத்தான் புகார் கொடுக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி உத்தரவிட்டிருந்தார்.

Advertising
Advertising

அவரது எதிர்ப்பையும் மீறி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகம் முன் கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகிகள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகிகள் 50 பேர் திடீரென அங்கு கூடி, டெல்லி பிரதிநிதி தளவாய்சுந்தரத்தை அதிமுக கட்சியில் இருந்தும், டெல்லி பிரதிநிதி பதவியில் இருந்தும் நீக்க வேண்டும் என்று கோஷம் எழுப்பினர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி கட்சி அலுவலகத்திற்குள் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தபோது இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களிடம், தங்களது கோரிக்கையை புகாராக எழுதி தரும்படி கேட்டுக் கொள்ளப்பட்டது. இதையடுத்து அவர்கள் டெல்லி பிரதிநிதி தளவாய்சுந்தரம், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டவர்கள் மீது சரமாரியாக புகார் எழுதி கட்சி தலைமையிடம் கொடுத்தனர்.

அதிமுக கட்சி தலைமைக்கு கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகிகள் எழுதியுள்ள புகார் மனுவில் கூறி இருப்பதாவது: கன்னியாகுமரி மாவட்டத்தில் 1996ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக 6 தொகுதிகளையும் திமுக-காங்கிரஸ் கூட்டணி கட்சிகளிடம் இழந்தது. இதையடுத்து கட்சி பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா மாவட்ட செயலாளராக இருந்த தளவாய்சுந்தரம் மற்றும் பல்வேறு நிர்வாகிகளை அதிரடியாக மாற்றினார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு டி.டி.வி.தினகரனின் தீவிர ஆதரவாளராக இருந்த தளவாய்சுந்தரம் டெல்லி பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார். பின்னர் தினகரனிடம் இருந்து வெளியேறி முதல்வர் எடப்பாடியின் தீவிர ஆதரவாளர் போல் தன்னை காட்டிக் கொண்டு, கன்னியாகுமரி மாவட்ட அதிகாரங்கள் அனைத்தையும் தன்வசம் வைத்துள்ளார்.

இதன்மூலம், மாவட்ட செயலாளர் முதல் ஒன்றிய செயலாளர் வரை ஏற்கனவே இருந்த திறமையான நிர்வாகிகளை நீக்கிவிட்டு அவரது ஆதரவாளர்களையே அனைத்து  பதவிகளிலும் அமர வைத்தார். இதனால் கட்சி நிர்வாகிகள் இடையே ஒற்றுமை இல்லை. கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் தொண்டர்கள் யாரையும் மதிப்பதில்லை, அவர்களுக்கு  எந்த உதவியும் செய்வதில்லை. கட்சிக்காரர்களிடம் கூட பணம் வாங்கிக் கொண்டுதான் அனைத்தையும் செய்கிறார். இவர், தளவாய்சுந்தரம் மூலம் அரசு பணி, இடம் மாற்றம், பொதுப்பணித்துறை காண்ட்ராக்ட், டாஸ்மாக் ஒதுக்கீடு போன்றவற்றை அதிக பணம் வாங்கிக் கொண்டு பிற  கட்சி காரர்களுக்கு வழங்கி வருகிறார்.

இதனால் கட்சி பொறுப்பாளர்களும், தொண்டர்களும் அதிருப்தியில் இருக்கின்றார்கள். சென்னையில் நடந்த கூட்டத்தில் குமரி  மாவட்ட அதிமுக மருத்துவ அணி செயலாளராகவும், கட்சி தொண்டர்களிடம் செல்வாக்குடன் இருப்பவருமான சி.என்.ராஜதுரை உள்ளிட்ட சில முக்கிய நிர்வாகிகளை கூட்டத்தில் பங்கேற்க விடாமல் தளவாய்சுந்தரம் தடுத்து விட்டார். அதேபோன்று, குமரி மாவட்டத்திலும் ராஜதுரையின் ஆதரவாளர்கள் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் முதல்வர் முன்னிலையில் தளவாய்சுந்தரத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டோம். தளவாய்சுந்தரம் மற்றும் அவரது ஆதரவால் பதவிக்கு வந்தவர்களை நீக்க வேண்டும்.

தொண்டர்கள் ஆதரவு யாருக்கு உள்ளதோ அவர்களுக்கு பதவி வழங்க வேண்டும். இல்லையென்றால் வரும் சட்டமன்ற தேர்தலிலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிமுக படுதோல்வி அடையும். இவ்வாறு அதில் கூறி உள்ளனர். இந்த புகார் மனுக்களை பரிசீலித்த அதிமுக மனுக்கள் குழுவில் இடம் பெற்றுள்ள மூத்த அமைச்சர்கள் முதல்வர் எடப்பாடியிடம் அறிக்கையாக சமர்ப்பித்துள்ளனர். அதன் அடிப்படையில் தளவாய்சுந்தரத்தை அதிமுக கட்சியில் டம்மி ஆக்கப்படுவதுடன்,  கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகிகளை கூண்டோடு மாற்றவும் கட்சி தலைமை முடிவு  செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மாவட்ட செயலாளர் முதல் ஒன்றிய செயலாளர் வரை ஏற்கனவே இருந்த திறமையான நிர்வாகிகளை நீக்கிவிட்டு அவரது ஆதரவாளர்களையே அனைத்து  பதவிகளிலும் அமர வைத்தார்.

Related Stories: