போராடும் மக்கள் மீது காவல்துறையை ஏவினால் தமிழகத்தில் தினமும் போராட்டம் நடக்கும்: மதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எச்சரிக்கை

சென்னை: குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராடி வரும் மக்கள் மீது காவல்துறையை ஏவி தாக்குதல் நடத்தினால் தமிழகம் நாள்தோறும் போராட்டக்களத்தைச் சந்திக்க வேண்டியது இருக்கும் என்று மதிமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தில் தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மதிமுக உயர்நிலைக்குழு, மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை எழும்பூரில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது. இக்கூட்டத்துக்கு அக்கட்சியின் அவைத் தலைவர் திருப்பூர் சு.துரைசாமி தலைமை தாங்கினார். இதில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, பொருளாளர் கணேச மூர்த்தில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertising
Advertising

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

* பாரதிய ஜனதா கட்சி அரசு, பதவி ஏற்றதிலிருந்து சமூக நீதி கோட்பாட்டைச் சிதைக்கும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இந்த பேராபத்துகளைத் தடுத்து நிறுத்த, போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்று திக தலைவர் கி.வீரமணி தலைமையில் கூடிய அனைத்துக் கட்சிக் கூட்டம் விடுத்துள்ள அறைகூவல் தீர்மானத்தைச் செயல்படுத்த மதிமுக எல்லா வகையிலும் உறுதுணையாக இருக்கும். சமூக நீதிக்கான போராட்டங்களில் எப்போதும் போல மதிமுகவின் பங்களிப்பு இருக்கும் என்று இக்கூட்டம் உறுதியளிக்கிறது.

* சி.ஏ.ஏ., என்.ஆர்.சி., என்.பி.ஆர். மூன்றும் திரிசூலம் போன்று இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையும், ஜனநாயகத்தையும், பன்முகத்தன்மையையும் குத்திக் கிழிக்கும் வகையில் கொண்டு வரப்பட்டிருக்கிறது. இச்சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும்.

* காவிரிப் பாசனப் பகுதிகளைப் பாதுகாக்க வேண்டும் என்ற அக்கறை தமிழக அரசுக்கு உண்மையாகவே இருந்தால், ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு மத்திய அரசு போட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும், பெட்ரோலிய ரசாயன முதலீட்டு மண்டலம் அமைக்க 2017 ஜூலை 19ல் வெளியிடப்பட்ட குறிப்பாணையையும் ரத்து செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

* காலதாமதம் இன்றி உடனடியாக நகர்ப்புற உள்ளாட்சி மற்றும் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கும் உள்ளாட்சித் தேர்தல் தேதியை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும்.

* மத்திய அரசு எல்.ஐ.சி. பங்குகள் விற்பனை முடிவை கைவிட வேண்டும். ரயில்வே துறையைத் தனியார் மயமாக்குவது மக்கள் சேவை வணிகமயம் ஆவது மட்டுமின்றி, ஒட்டுமொத்த வளர்ச்சி முன்னேற்றத்தையும் பாதிக்கும். இதனைக் கருத்தில் கொண்டு ரயில்வே துறையைத் தனியார் மயமாக்கும் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும்.

* ஆளும் கட்சியினர் மற்றும் அரசு அதிகாரிகள் துணையுடன் நடைபெற்றுள்ள டி.என்பிஎஸ்சி முறைகேடுகள் குறித்து நியாயமான விசாரணை நடத்திட மத்திய புலனாய்வுத் துறையிடம் (சிபிஐ) இந்த வழக்கை ஒப்படைக்க வேண்டும்.

* குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக சாதி, சமய வேறுபாடின்றி போராடி வரும் அனைத்துத் தரப்பு மக்கள் மீதும் தமிழக அரசு காவல்துறையை ஏவி தாக்குதல் நடத்துவது கடும் கண்டனத்துக்கு உரியதாகும். ஜனநாயகத்தில் இத்தகைய பாசிசப் போக்கை அனுமதிக்க முடியாது. இந்த நிலை தொடர்ந்தால், தமிழகம் அமைதிப் பூங்காவாகத் திகழும் தமிழகம் நாள்தோறும் போராட்டக் களத்தைச் சந்திக்க வேண்டியது இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: