சீனாவில் கோரத்தாண்டவம் ஆடி வரும் கோவிட்டின் அடுத்த குறி அமெரிக்கா

பீஜிங்: சீனாவை ஆட்டிப்படைத்து வரும் கோவிட் வைரஸ், அமெரிக்காவில் வேகமாக பரவும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த வைரசின் தாக்குதலில் இருந்து இயல்புநிலைக்கு திரும்பும் முயற்சியில் சீனா ஈடுட்டுள்ளது.

 சீனாவின் ஹூபெய் மாகாணத்தில் உள்ள வுகான் நகரில் கடந்தாண்டு டிசம்பர் இறுதியில் கொரோனா எனப்படும் கோவிட்-19 வைரஸ் பரவத் தொடங்கியது. நாள்தோறும் தீவிரமடைந்த அது, தற்போது உலகளவில் 30க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி, மிரட்டி வருகிறது. சீனாவில், இந்த வைரஸ் காய்ச்சலுக்கு நேற்று முன்தினம் புதிதாக 121 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம், சீனாவில் பலியானோர் எண்ணிக்கை 1500-ஐ நெருங்கியுள்ளது. இந்த வைரசின் தாக்குதலால் சீனாவின் பொருளாதாரம் சீரழிந்துள்ளது.
Advertising
Advertising

இந்நாட்டி டம் இருந்து பொருட்களை வாங்குவதையும், விற்பதையும் உலக நாடுகள் நிறுத்தி உள்ளன.

இந்நிலையில், இந்த வைரஸ் தாக்குதலில் இருந்து மீண்டு, இயல்பு நிலைக்கு திரும்பும் முயற்சியாக, தனது நாட்டின் சில மாகாணத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்து கட்டுமான பணிகளை சீனா தொடங்கியுள்ளது, தொழிற்சாலைகளும் இயங்க அனுமதி வழங்கப் பட்டுள்ளது.  அதே நேரம், அமெரிக்காவில் கோவிட் வேகமாக பரவும் அபாயம் இருப்பதாக இந்நாட்டு நோய் கட்டுப்பாட்டு மையம் எச்சரித்துள்ளது. ஏற்கனவே இந்நாட்டில், 30 பேருக்கு கோவிட் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், இந்நாட்டு மக்களிடம் பீதி நிலவுகிறது.  இதனிடையே, ஜப்பானில் நடுக்கடலில் 3,700 பயணிகளுடன் நிறுத்தப் பட்டுள்ள ‘டைமண்ட் பிரின்சஸ்’ கப்பலில் நோய் பாதிப்பு இல்லை என உறுதி செய்யப்பட்டவர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். அதே நேரம், இந்த கப்பலில் மேலும் ஒரு இந்தியருக்கு கோவிட் தாக்கியது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே,இதில் 2    இந்தியர்கள் பாதிக்கப்பட்டு ள்ளனர்.

மருத்துவ பரிசோதனையில் கோவிட் தாக்குதல் இல்லை என உறுதியானவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் படகு மூலமாக அரசு சிகிச்சை அளிக்கும் சிறப்பு  மையத்திற்கு மாற்றப்பட்டு வருகின்றனர். இவர்களில் 10 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. கப்பலில் இருந்தவர்களில் ஜப்பானின் சிபா நகரைச்  சேர்ந்த ஒருவர் உட்பட இதுவரை 33 பேருக்கு கோவிட் வைரஸ் தாக்குதல் இருப்பது தெரியவந்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 80 வயது மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார். இதன் மூலம், ஜப்பானில் கோவிட் வைரசுக்கு முதல் பலி ஏற்பட்டுள்ளது.

காய்ந்தது காதல் ரோஜா

உலகம் முழுவதும் நேற்று காதலர் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஆனால், கோவிட் பாதித்த சீனாவில் இந்த கொண்டாட்டம் களையிழந்தது. வைரஸ் பாதிப்பு பீதியால், மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் முடங்கி உள்ளனர்.   இதனால், நேற்றைய காதலர் தினத்தில் வழக்கமாக விற்கப்படும் ரோஜா மலர்களின்  விற்பனை 90 சதவீதம் சரிந்தது.

6 சுகாதார ஊழியர்கள் பலி

சீனாவின் ஹூபெய் மாகாணத்தில் பரவி வரும் கோவிட் வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆயிரக்கணக்கான மருத்துவர்களும், செவிலியர்களும் தாமாக முன்வந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இது, ஒரு தற்கொலை திட்டம் எனவும், விருப்பமுள்ள மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க முன்வரலாம் என்றும் சீன அரசு  அழைப்பு விடுத்திருந்தது. இந்நிலையில், கோவிட் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளித்த சுகாதார ஊழியர்கள் 6 பேர், இந்நோய் தாக்கி இறந்துள்ளனர். மேலும், இப்பணியில் ஈடபட்டுள்ள 1,700 சுகாதார ஊழியர்களுக்கும் கோவிட் தொற்று இருப்பதாக கூறப்படுகிறது.

Related Stories: