×

மகிளா காங்கிரஸ் தலைவியாக ஜோதி மணி எம்பி நியமனம்? : காங்.மேலிடம் திடீர் ஆலோசனை

சென்னை: தமிழக மகிளா காங்கிரஸ் தலைவியாக ஜோதி மணி எம்பியை நியமிக்க டெல்லி மேலிடம் ஆலோசித்து வருவதாக தமிழக காங்கிரஸ் கட்சி வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.மகிளா காங்கிரஸ் தலைவராக இருக்கும் ஜான்சி ராணியின் பதவி காலம் முடிவடைந்துள்ளது. இதனால் புதிய தலைவரை தேர்வு செய்வதற்காக நடவடிக்கைகளை காங்கிரஸ் மேலிடம் எடுத்து வருகிறது. இதற்காக மகிளா காங்கிரசின் தமிழக மேலிட பொறுப்பாளர் சவுமியா சென்னையில் முக்கிய நிர்வாகிகள் மத்தியில் நேர்முக தேர்வு நடத்தினார். அதில் 10 பேரை தேர்வு செய்து அவர்களை டெல்லி வரவழைத்துள்ளார். அவர்களுக்கு டெல்லியில் மகிளா காங்கிரசின் மூத்த நிர்வாகிகள் நேர்முக தேர்வு நடத்தியுள்ளனர். இதில் இருந்து ஒருவரை தமிழக மகிளா காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்ய முடிவு செய்துள்ளனர்.

சட்டமன்ற தேர்தலில் சீட் வாங்குவதை நோக்கமாக கொண்டே தலைவர் பதவியை பிடிக்க மேலிடத்தில் பலர் முட்டி மோதி வருவதாக மேலிட தலைவர்களுக்கு புகார்கள் சென்றது. இதனால் நேர்முக தேர்விற்கு வந்தவர்களை தவிர்த்து கடந்த காலங்களில் மகிளா காங்கிரசை வேகமாக கொண்டு சென்ற விஜயதரணியை போன்று யாரையாவது நியமிக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளனர். அதன்படி, தற்போது கரூர் எம்பியாக உள்ள ஜோதிமணியை, தமிழக மகிளா காங்கிரஸ் தலைவியாக நியமிக்கலாம் என்ற ஆலோசனையை காங்கிரஸ் மேலிட தலைவர்கள் முன் வைத்துள்ளனர். இதற்கு அகில இந்திய மகிளா காங்கிரஸ் தலைவியும் இசைவு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. ஓரிரு வாரங்களில் தமிழக மகிளா காங்கிரசுக்கு புதிய தலைவர் நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : president ,Jyoti Mani ,Mahila Congress , Jyoti Mani appointed,president of Mahila Congress ,Sudden advice to Kong.Mail
× RELATED அமெரிக்காவில் பயங்கர வன்முறை பதுங்கு...