எடப்பாடி, வேலுமணி, தங்கமணி துறைகளுக்கு மட்டும் அதிக நிதி ஒதுக்கிய மர்மம் என்ன? : மு.க.ஸ்டாலின் கேள்வி

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி ஆகியோரது துறைகளுக்கு மட்டும் அதிக நிதி ஒதுக்கியதன் மர்மம் என்ன என்று மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழக  சட்டப் பேரவையில் கலந்து கொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவைக்கு வெளியில் நிருபர்களிடம் கூறியதாவது: நிதிநிலை அறிக்கை புத்தகத்தில் 3வது பக்கத்தில் இருக்கக்கூடிய ஒன்றை  நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தான் படித்திருக்கிறார். அதாவது, ‘ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் இந்த அரசின் ஆட்சி நீடிக்காது, ஆட்சி மாறிவிடும் என்றெல்லாம் சிலர் கூறி வந்தனர்’ என்று   பெருமையோடு சொல்லியிருக்கிறார். அதாவது ஒப்புதல் வாக்குமூலம் அவரே தந்திருக்கிறார். ஏனென்றால், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அவருடைய சமாதியில் போய் உட்கார்ந்து தியானம் பண்ணியது. இந்த ஆட்சியை அப்புறப்படுத்த வேண்டும் என்று சொன்னது. இந்த ஆட்சிக்கு எதிராக ஓட்டு போட்டது. அதனால் நீதிமன்றத்தில் பிரச்சனை இருப்பது என்பது எல்லோருக்கும் தெரியும். அதை அவரே குறிப்பிட்டிருக்கிறார். சொன்னவர் அவர் தான் இன்று மாறியிருக்கிறாரே தவிர மற்றவர்கள் யாரும் மாறவில்லை.

பத்தாவது பட்ஜெட்டை ஓபிஎஸ் படித்திருக்கிறார். யாருக்கும் பத்தாத பட்ஜெட்டாக எதற்கும் பத்தாத பட்ஜெட்டாக இது அமைந்திருக்கிறது.

 கடனில் மட்டுமல்ல மோசடியிலும், லஞ்சம் வாங்குவதில் ஊழல் செய்வதிலும் இந்த அரசு முழுமையாக மூழ்கியிருக்கிறது. இந்த நிதிநிலை அறிக்கையை பொறுத்தவரை எந்த தொலைநோக்கு திட்டங்களும் இல்லை.  வளர்ச்சி திட்டங்கள் எதுவும் இல்லை. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் நிதிநிலை அறிக்கையை பொறுத்தவரை முதல்வர் இலாகா, அமைச்சர்கள் வேலுமணி,  தங்கமணி இலாகாக்களுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் என்ன மர்மம் என்ன?

பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலத்தை பொறுத்தவரை மாநில அரசு நினைத்து ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் அவை வேண்டும் என்பதில் உடன்படுகிறோம். எங்கள் தேர்தல் அறிக்கையிலும் நாங்கள் குறிப்பிட்டிருக்கிறோம். அதற்காக போராட்டங்களும் நடத்தியிருக்கிறோம். எனவே அதில் நாங்கள் குறுக்கே நிற்க விரும்பவில்லை. ஆனால் இதை எப்படி நிறைவேற்ற போகிறார்கள் என்பது தெரியவில்லை. அண்மையில் கூட இதை முதல்வர் அறிவித்துவிட்டு, இரண்டு நாட்களுக்கு முன்பு அமைச்சர் ஜெயக்குமாரை டெல்லிக்கு அனுப்பி வைத்து ஒரு கடிதத்தையும் கொடுத்து வந்ததாக செய்தியில் பார்த்தோம். அந்த கடிதத்தில் என்ன இருக்கிறது என்று அவர்கள் தெரியப்படுத்தவில்லை. அவர்கள் சொல்லாவிட்டால் விரைவில் அந்த கடிதத்தை நானே வெளியிட்டு விடுவேன். 11 எம்.எல்.ஏக்கள் விவகாரத்தில் சபாநாயகர் உரிய முடிவு எடுத்து அறிவிப்பார் என எதிர்பார்க்கிறோம். அவர் தான் அறிவிக்க வேண்டும். அது நல்ல அறிவிப்பாக கூட இருக்கலாம் இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: