வேலை வாங்கி தருவதாக 95 லட்சம் மோசடி வழக்கு செந்தில் பாலாஜியிடம் 8 மணிநேரம் விசாரணை

* பதிலை வாக்குமூலமாக பதிவு செய்த மத்திய குற்றப்பிரிவு போலீசார்

சென்னை: போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக ரூ.95 லட்சம் மோசடி வழக்கு தொடர்பாக, மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன்பு ஆஜரான முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் 8 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. கடந்த 2011 முதல் 2015 வரை தமிழக போக்குவரத்து துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்தார். அப்போது போக்குவரத்து துறையில் நடத்துனர், ஓட்டுநர், தொழில்நுட்ப ஊழியர்கள் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பணி அமர்த்தப்பட்டனர். அப்போது, 16 பேரிடம் தமிழக போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக ரூ.95 லட்சம் வாங்கிக் கொண்டு வேலை வாங்கி தராமல் மோசடி செய்ததாக சென்னை அம்பத்தூரை சேர்ந்த கணேஷ்குமார் கடந்த 2017ம் ஆண்டு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் செந்தில் பாலாஜி மீது புகார் அளித்தார். இதன்படி, மத்திய குற்றப்பிரிவு போலீசார், செந்தில் பாலாஜி உள்ளிட்ட 3 பேர் மீது நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் செந்தில் பாலாஜியை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதனை அறிந்த செந்தில் பாலாஜி, சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றார்.

பின்னர் மத்திய குற்றப்பிரிவு போலீசார் நீதிமன்றத்தில் அனுமதி பெற்று, செந்தில் பாலாஜிக்கு சொந்தமான சென்னை மந்தைவெளி திருவேங்கடம் தெரு விரிவாக்கம் பகுதியில் உள்ள வீடு, கரூர் அடுத்த ராமேஸ்வரப்பட்டியில் உள்ள பூர்வீக வீடுகள் மற்றும் ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள அவரது சகோதரர் அசோக் வீடு மற்றும் அவரது டெக்ஸ்டைல் நிறுவனம் என 17 இடங்களில் கடந்த 31ம் தேதி அதிரடி சோதனை நடத்தினர். இதில் மடிக்கணினி, பென் டிரைவ், மெமரி கார்டு என முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சென்னை மந்தைவெளியில் உள்ள வீடு பூட்டப்பட்டிருந்ததால் மத்திய குற்றப்பிரிவு கூடுதல் துணை கமிஷனர் சரவணகுமார் தலைமையிலான 4 போலீசார் பூட்டிய வீட்டிற்கு சீல் வைத்தனர்.

கடந்த 6ம் தேதி உதவி கமிஷனர் ராமச்சந்திரமூர்த்தி தலைமையில் 5 போலீசார் செந்தில் பாலாஜியின் மந்தைவெளி திருவேங்கடம் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் சோதனை நடத்தியதில் பல ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் ஆஜராக மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பினர். அதன்படி, அவர் நேற்று காலை 9.45 மணிக்கு சென்னை வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனர் ராமச்சந்திரமூர்த்தி முன்னிலையில் ஆஜரானார். காலை 10 மணிக்கு தொடங்கிய விசாரணை மதியம் 1.15 மணிவரை நடந்தது. பின்னர் உணவு இடைவெளிக்கு பிறகு மீண்டும் 2.15 மணிக்கு விசாரணை தொடங்கி மாலை 6 மணி வரை நடந்தது. அப்போது போக்குவரத்து துறையில் பணி நியமனம் குறித்தும் வீடுகளில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்தும் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளிக்கும் பதிலை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வாக்குமூலமாக பதிவு செய்தனர்.

Related Stories: