வாசவதா அபார சதம்: முதல் இன்னிங்சில் முன்னிலை பெற போராடுகிறது சவுராஷ்டிரா

ராஜ்கோட்: தமிழக அணியுடனான ரஞ்சி கோப்பை எலைட் பி பிரிவு லீக் ஆட்டத்தில், சவுராஷ்டிரா அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 346 ரன் எடுத்துள்ளது. சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த தமிழகம் முதல் இன்னிங்சில் 424 ரன் குவித்து ஆல் அவுட்டானது. முகுந்த் 86, ஜெகதீசன் 183, சாய் கிஷோர் 27, முகமது 42 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் கணிசமாக ரன் எடுக்கத் தவறினர். சவுராஷ்டிரா பந்துவீச்சில் ஜெய்தேவ் உனத்கட் 6 விக்கெட் கைப்பற்றினார்.  அடுத்து களமிறங்கிய சவுராஷ்டிரா 2ம் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 103 ரன் எடுத்திருந்தது. அவி பரோட் 38, அர்பித் வாசவதா 11 ரன்னுடன் நேற்று 3ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். இந்த ஜோடி 4வது விக்கெட்டுக்கு 108 ரன் சேர்த்தது. பரோட் 82 ரன் (206 பந்து, 10 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி வெளியேறினார்.

சமர்த் வியாஸ் 10, பிரேரக் மன்கட் 13 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தனர். ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும், உறுதியுடன் விளையாடிய வாசவதா சதம் அடித்து அசத்தினார். மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் சவுராஷ்டிரா அணி 6 விக்கெட் இழப்புக்கு 346 ரன் குவித்துள்ளது. வாசவதா 126 ரன் (267 பந்து, 13 பவுண்டரி, 1 சிக்சர்), சிராக் ஜானி 47 ரன்னுடன் களத்தில் உள்ளனர். கை வசம் 4 விக்கெட் இருக்க, சவுராஷ்டிரா இன்னும் 78 ரன் பின்தங்கியுள்ள நிலையில் இன்று கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது. முதல் இன்னிங்சில் முன்னிலை பெற இரு அணிகளுமே கடுமையாகப் போராடுவதால், இன்றைய ஆட்டம் மிகவும் சுவாரசியமாக அமையும்.

Related Stories: