×

ஏர் இந்தியா விற்பனை எப்போது நிறைவடையும்? டிஐபிஏஎம் செயலாளர் தகவல்

புதுடெல்லி: ஏர் இந்தியா விற்பனை அடுத்த நிதியாண்டு முதல் அரையாண்டுக்குள் முடிந்து விடும் என முதலீடு துறை மற்றும் பொது சொத்து மேலாண்மை (டிஐபிஏஎம்) செயலாளர் தெரிவித்தார்.  நலிவடைந்த பொதுத்துறை நிறுவனங்களை விற்று நிதி திரட்டுவதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஏர் இந்தியா நிறுவனத்தை முழுவதுமாக விற்க முடிவு செய்து, கடந்த மாதம் அறிவிப்பு வெளியிட்டது. இத்துடன் லாபகரமாக இயங்கும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவன பங்குகளும் சேர்த்து விற்கப்பட உள்ளது. இதை வாங்க விரும்புபவர்கள் விண்ணப்பிக்க அடுத்த மாதம் 17ம் தேதி கடைசி.  சுமார் 60,000 கோடிக்கு மேல் கடனில் மூழ்கியுள்ள ஏர் இந்தியா நிறுவனத்தில் 76 சதவீத பங்குகளை விற்று, நிர்வாகத்தையும் தனியாருக்கு அளிக்க உள்ளதாக மத்திய அரசு கடந்த 2018ல் அறிவித்தது.

ஆனால், யாரும் வாங்க முன்வரவில்லை. இந்த நிலையில்தான், நிறுவன பங்குகள் அனைத்தையும் விற்க மத்திய அரசு தற்போது முடிவு செய்துள்ளது. இந்நிலையில், மத்திய பட்ஜெட் தொடர்பாக நிதித்துறை நிபுணர்கள் பங்கேற்ற கலந்துரையாடல், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் டெல்லியில் நேற்று நடந்தது. முதலீடு துறை மற்றும் பொது சொத்து மேலாண்மை (டிஐபிஏஎம்) செயலாளர்  துகின் கண்டா பாண்டே கூறியதாவது:  ஏர் இந்தியா பங்கு விற்பனை செயல்பாடுகள் மிக துரித கதியில் நடந்து வருகிறது. எனவே, வரும் 2020-21 நிதியாண்டில் முதல் 6 மாதங்களுக்குள் இந்த விற்பனை நிறைவு செய்யப்படும் என எதிர்பார்க்கிறோம்.

 பொதுத்துறை நிறுவனங்களில் பாரத் பெட்ரோலியம், கான்கார் மற்றும் ஷிப்பிங் கார்ப்பொரேஷன் ஆகிய பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள தனது பங்குகளை விற்பனை செய்ய கடந்த நவம்பரில் மத்திய அரசு முடிவு செய்தது. எல்ஐசி நிறுவன பங்கு விற்பனையை பொறுத்தவரை, இதில் உள்ள பல்வேறு தடைகளை முதலில் நீக்க வேண்டியுள்ளது என்றார். இதுபோல், பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க பட்ஜெட்டுக்கு மேலும் மத்திய அரசு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட தயாராக உள்ளது என, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

Tags : Air India ,DIPAM , Secretary of Air India, TIPAM
× RELATED விமானப்பணி நேர வரம்புகளை மீறிய...