×

கோலா கரடி

நன்றி குங்குமம் முத்தாரம்


கங்காருவைப் போல் ஆஸ்திரேலியாவின் மற்றொரு அடையாளம் கோலா இன கரடிகள்.அழிந்து வரும் கோலா (koala) இன கரடிகளைப் பாதுகாக்க ஆஸ்திரேலியா அரசு  தீவிரம் காட்டி வருகிறது. பஞ்சு போன்ற காது, கருப்பு நிற மூக்கு, எலி போன்ற முகம் என பார்ப்பதற்கு மிகவும் அழகான பொம்மை கரடி போல் இருக்கும் கோலா கரடி, ஆஸ்திரேலியாவில் மட்டுமே காணப்படும் ஒரு சாதுவான விலங்கு. பருவநிலை மாற்றம், நகரமயமாதல் உள்ளிட்ட காரணங்களால் கோலா கரடிகள் அழிந்து வரும் இனங்கள் பட்டியலில் சேர்ந்தன. தற்போது, 43 ஆயிரம் கோலா கரடிகள் மட்டுமே அங்கு காணப்படுகின்றன. இந்தக் கரடிகளைப் பாதுகாக்கும் நோக்கில் பிரச்சாரத்தை கையிலெடுத்துள்ள ஆஸ்திரேலியா அரசு, சுமார் 200 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது.கிழக்கு ஆஸ்திரேலியாவில் மட்டுமே காணப்படும் சிறிய விலங்கு கோலா.


பொம்மை போன்ற உருவ அமைப்பைக் கொண்டிருப்பதால் பொம்மைக் கரடி என்றும், மரத்திலேயே வசிப்பதால் மரக்கரடி என்றும் அழைக்கப்படுகிறது.மேலும் native bear, monkey bear என்றும் சொல்லப்படுகிறது. குயின்ஸ்லாந்து, நியூ சவுத் வேல்ஸ், விக்டோரியா மற்றும் தெற்கு ஆஸ்திரேலியா பகுதிகளில் அதிக அளவில் காணப்படுகின்றன. வாலில்லாத தடித்த உடல் இதன் தனித்த அடையாளம். கோலா கரடியின் அறிவியல் பெயரான பாஸ்கோலரக்டோஸ் (Phascolaractos) கிரேக்க மொழியிலிருந்து பெறப்பட்டதாகும். Phascolarctidae குடும்பத்தைச் சேர்ந்தது.தாருக் மொழியில் குலா (Gula) என்பதே கோலா என்றானது. கோலா கரடிகள் தண்ணீர் குடிப்பதில்லை. தனக்குத் தேவையான தண்ணீரை அது சாப்பிடும் யூகலிப்டஸ் மரங் களின் இலைகளிலிருந்தே பெற்றுக் கொள்கின்றது.

பெண் கோலாக்களுக்கு யூகலிப்டஸ் இலையிலிருந்து கிடைக்கும் தண்ணீரே போதுமானது. பெரிய ஆண் கோலாக்கள் மரப் பொந்துகளில் இருக்கும் நீரையும், தரையில் இறங்கி வந்து கிடைக்கும் நீரையும் குடித்து தாகத்தைத் தீர்த்துக் கொள்கின்றன. தினமும் 400 கிராம் யூகலிப்டஸ் இலைகளை 5 அல்லது 6 தடவையாகச் சாப்பிடுகின்றன. ஸ்பூன் வடிவ கருப்பு நிற மூக்கினையும் பஞ்சு போன்ற காதுகளையும் 4-லிருந்து 15 கிலோ எடையையும் கொண்டதாக இருக்கும். 13லிருந்து 18 ஆண்டுகள் வரை உயிர்வாழக் கூடியன. பெண் கோலாக்களின் மூக்கு சிறிது வளைந்து காணப் படும். கோலாக்களின் மூளை மற்ற பாலூட்டிகளை ஒப்பிடும்போது 60 சதவிகிதம் சிறியது. உணவை மென்று சாப்பிடும் முன்பு வாயில் ஒதுக்கி வைக்கும் இயல்புடையன. ஆஸ்திரேலியாவில் காணப்படும் 600 வகையான யூகலிப்டஸ் மரங்களுள் 30 வகையான மரங்களின் இலைகளைத் தேர்ந்தெடுத்துச் சாப்பிடுகின்றன.

கோடைகாலத்தில் உறுதியான தாழ்ந்த மரக்கிளையில் தொங்கிக் கொண்டு ஓய்வு எடுக்கும். குளிர்காலத்தில் பந்து போல சுருண்டு படுத்துக்கொள்ளும். வேறு மரத்திற்குச் செல்ல வேண்டும் என்றால் மட்டுமே மரத்தைவிட்டுக் கீழே இறங்கும். பிறந்தபின் ஓர் ஆண்டுவரை தாயின் பாதுகாப்பில்தான் இருக்கும்.பெரிய மலைப்பாம்புகள் (Pythons), Dingos, பறவைகள், பெரிய ஆந்தைகள், வாலுள்ள கழுகுகள் இளம் கோலாக்களை இரையாக உட்கொள்கின்றன.
ஆஸ்திரேலியாவில் மிருகக் காட்சிச் சாலைகளில் காணப்படும் கோலாக்கள் பால், தேநீர், ரொட்டி முதலியவற்றைச் சாப்பிடுகின்றன. வீடுகளில் செல்லப் பிராணியாகவும் வளர்க்கப்படுகின்றன.


Tags : Another sign of Australia is the koala bears, like kangaroos.
× RELATED மாவோ சூட்