×

வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் விற்பனைக்கு குவிந்த தர்பூசணி பழங்கள்

புதுக்கோட்டை: கோடைகாலம் வருவதை உணர்த்தும் வகையில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் புதுக்கோட்டை பகுதியில் விற்பனைக்காக தர்பூசணி பழங்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே கோடை காலம், குளிர் காலம் என கணிக்க முடியாத அளவுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாகவே காணப்படுகிறது. இருந்த போதிலும் நடப்பாண்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஆண்டுகளை போல் பருவ மழை ஏமாற்றாமல் வழக்கத்தைவிட சற்று அதிகமாகவே பெய்தது. தற்போது மாவட்டத்தில் மழை பெய்து ஒரு மாதத்தை கடந்த நிலையில் இரவு நேரங்களில் வளிமண்டலம் மிதமான குளிர்ச்சியுடன் காணப்பட்டாலும் பகல் நேரங்களில் நாளுக்கு வெப்பம் அதிகரித்து கொண்டே செல்கிறது.

இதனால் கோடை காலத்தை சமாளிக்க பயன்படும் இளநீர், தர்பூசணி உள்ளிட்டவைகளின் வரவு துவங்கியுள்ளது. தற்போது இதன் விற்பனை மந்தமாக இருந்தாலும் எதிர்வரும் நாட்களில் வெப்பம் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் இளநீர், தர்பூசணிக்கு மவுசு அதிகரிக்க வாய்ப்புள்ளது என விற்பனையாளர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து புதுக்கோட்டை அருகே உள்ள மேட்டுப்பட்டி சாலையோரம் தர்பூசணி கடை வைத்திருக்கும் வியாபாரியிடம் கேட்டபோது, தற்போது தமிழகத்தில் தர்பூசணி சீசன் துவங்காததால் கேரளாவில் இருந்து தர்பூசணி வாங்கி விற்பனை செய்து வருகிறேன். நெடுந்தொலைவில் இருந்து வருவதால் ஒரு கிலோ ரூ.12க்கு விற்கப்படுகிறது.

இந்நிலையில் வரும் நாட்களில் புதுக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் தர்பூசணி அறுவடை துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது மேலும் பூசணி விலை குறைய வாய்ப்புள்ளது. கடந்த சில நாட்களாக புதுக்கோட்டை பகுதிகளில்
வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதால் வியாபாரம் எதிர்பார்த்த அளவு இல்லை. மேலும் பங்குனி மாதம் வெயில் அதிகரிப்பதோடு மாவட்டம் முழுவதும் மாரியம்மன் கோயில்களில் விழா நடைபெறுவதால் மக்கள் கூட்டம் அதிகரித்து வெயில் சூட்டுடன் வியாபாரமும் சூடுபிடிக்கும் என்றார்.

Tags : watermelon sales demand as the heat is high
× RELATED சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்களில் மிதமான மழை..!!