ஐந்தரை நிமிடங்களில் 200 திருக்குறள் ஒப்புவிப்பு: சிவகாசி சிறுமி உலக சாதனை

சிவகாசி: சிவகாசியில் 6 வயது சிறுமி ஐந்தரை நிமிடங்களில் 200 திருக்குறளை ஒப்பவித்து உலக சாதனை படைத்துள்ளார். விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள மடத்துபட்டி ஊராட்சி பள்ளியில் 2ம் வகுப்பு படிப்பவர் கிருத்திகா ஹரிணி(6). இவரது தந்தை சலவைதொழிலாளியாவார். கிருத்திகா ஹரிணி 1ம் வகுப்பு படிக்கும் போதே திருக்குறளை வேகமாக சொல்லி வந்துள்ளார். 2ம் வகுப்பில் சேர்ந்ததும் அவரது ஆர்வம் மேலும் அதிகரித்துள்ளது. இதனையறிந்த அவரது வகுப்பு ஆசிரியர் ஜெயமேரி, மாணவிக்கு 200 திருக்குறள் வரை வேகமாக ஒப்புவிக்க தொடர்ந்து பயிற்சி அளித்துள்ளார்.

இதையடுத்து 6 நிமிடங்களில் 200 திருக்குறளை வேகமாக மனப்பாடமாக ஒப்புவித்து மாணவி அசத்தியுள்ளார். இந்த முயற்சியை உலக சாதனையாக மாற்ற சிவகாசி லயன்ஸ் கிளப் சார்பில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் ட்ரம்ப்த் உலக சாதனை அமைப்பின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். சிவகாசி லயன்ஸ் ஜூனியர் பள்ளியில் நேற்று முன்தினம் இரவு உலக சாதனை நிகழ்த்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாணவி கிருத்திகா ஹரிணி 200 திருக்குறளை ஐந்தரை நிமிடங்களில் வேகமாக சொல்லி முடித்தார்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் மாணவியின் சாதனையை பாராட்டினர். இதைத் தொடர்ந்து ட்ரம்ப்த் உலக சாதனை அமைப்பை சேர்ந்த நிர்வாகி முக்தா, சிறுமியின் சாதனையை அங்கீகரித்து உலக சாதனைக்கான பத்திரத்தை வழங்கினார். நிகழ்ச்சியில் தொழில் பிரமுகர்கள் காளீஸ்வரி செல்வராசன், அரசன் அசோகன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவியை பாராட்டினர். மடத்துபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர் யசோதாதேவி, ஆசிரியைகள் ஜெயமேரி, பத்மாவதி, விஜயராணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags : Tirukkural ,Sivakasi , In five and a half minutes 200 Tirukkural Recognition: Sivakasi Little Girl's World Record
× RELATED குமரி மற்றும் நெல்லை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழை