×

தேவாரத்தில் தக்காளி விலை வீழ்ச்சி: சாலையோரங்களில் கொட்டப்படும் அவலம்

தேவாரம்: தேவாரத்தில் தக்காளி விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் சாலையோரங்களில் கொட்டப்படுகின்றன. இதனால் விவசாயிகள் விரக்தி அடைந்துள்ளனர். தேவாரம் பகுதிகளில் மானாவாரி நிலங்கள் மற்றும் விவசாய நிலங்களில் அதிகளவில் தக்காளி பயிரிடப்படுவது வழக்கம். லட்சுமிநாயக்கன்பட்டி, டி.அழகர்நாயக்கன்பட்டி, டி.மீனாட்சிபுரம், தம்மிநாயக்கன்பட்டி, கோம்பை, பண்ணைப்புரம் உள்ளிட்ட ஊர்களில் அதிக ஏக்கர் பரப்பில் தக்காளி விவசாயம் நடக்கிறது.இங்கு விளையக்கூடிய தக்காளி உள்ளூர் மார்க்கெட் மூலம் மதுரை, திருச்சி, உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.

கடந்த சில மாதங்களாக தக்காளி விளைச்சல் அதிகரித்துள்ளது. இதனால் சந்தைகள், மார்க்கெட்களுக்கு வரக்கூடிய தக்காளி அதிகளவில் வருவதால் இவைகள் வெளியே செல்வதில்லை. இப்போது முகூர்த்தங்கள் இனி வரக்கூடிய நாட்களில்தான் தொடங்கும் என்பதால் தக்காளி விலை வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.குறிப்பாக 1 கிலோ தக்காளி ரூ.20 வரை விலைபோனது. கடந்த 15 நாட்களுக்கு முன்பு வரை இந்த விலை நீடித்தது. தை மாத ஒரே நாள் முகூர்த்தம் அதிகம் உள்ள நாட்களில் இதன் விலை மேலும் அதிகரித்தது. இதனால் தக்காளி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

அதேநேரத்தில் திண்டுக்கல், உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் தக்காளி அதிகளவில் வருவதால் உள்ளூர் தக்காளிக்கு விலை அதிகளவில் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.கடந்த வாரம் தேவாரம் சந்தையில் 1 கிலோ தக்காளி விலை வீழ்ச்சி அடைந்து ரூ.5க்கு விலைபோனது. உத்தமபாளையம் வாரசந்தையில் 2 கிலோ ரூ.15க்கும் விலைபோனது. கிராக்கியான காலங்களிலும், முகூர்த்த காலங்களிலும் இதே 1 கிலோ ரூ.20 முதல் 25 வரை விலைபோகும்.

எனவே திடீரென விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதால் விற்பனைக்கு வந்த தக்காளியை மீண்டும் கொண்டு செல்ல மனம் இல்லாமல் சாலையோரங்களில் கொட்டி விட்டு செல்லும் நிலை உண்டாகி உள்ளது. இதுகுறித்து விவசாயி ராமர் கூறுகையில், ‘தக்காளிக்கு திடீரென விலை ஏற்றம் காணப்படுகிறது. முகூர்த்தம் அல்லாத காலங்களில் இதன் விலை குறைகிறது. இதனால் வந்த விலைகளில் விற்றது போக சாலைகளில் கொட்டவேண்டி உள்ளது’ என்றார்.

Tags : Devarad ,Devaradh , Falling tomato prices in Devaradh
× RELATED வெளிமாநில வரத்தால் அய்யலூர் சந்தையில் தக்காளி விலை சரிவு