×

சிவகங்கை மாவட்டம் சங்கராபுரம் ஊராட்சி மன்ற தலைவராக யாரும் பதவியேற்க தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு!

புதுடெல்லி: சிவகங்கை மாவட்டம், சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், சங்கராபுரம் ஊராட்சிமன்றத் தலைவர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் பிரியதர்ஷினியும், தேவி என்பவரும் போட்டியிட்டனர். இந்நிலையில், தேவி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். பின்னர், பிரியதர்ஷினியும் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார். இதை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் எம்.தேவி வழக்குத் தொடுத்தார். அதில், ‘ ஊரக உள்ளாட்சி தோ்தலில், சங்கராபுரம் ஊராட்சித் தலைவா் பதவிக்கு போட்டியிட்டேன். எனக்கு ஆட்டோ சின்னம் ஒதுக்கப்பட்டது. இதே பதவிக்கு போட்டியிட்ட பிரியதா்ஷினி என்பவருக்கு பூட்டு சாவி சின்னம் ஒதுக்கப்பட்டிருந்தது.

வாக்குப்பதிவு முடிந்து, வாக்கு எண்ணிக்கையின் போது ஆட்டோ சின்னத்தில் போட்டியிட்ட நான் வெற்றி பெற்றதாக தேர்தல் அலுவலா் அறிவித்தார். எனக்கு வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது. அதன்பின்னர், சிறிது நேரத்தில், பூட்டு சாவி சின்னத்தில் போட்டியிட்ட பிரியதா்ஷினியும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். பிரியதா்ஷினி ஊராட்சித் தலைவராகப் பதவியேற்க தடைவிதித்து உத்தரவிட வேண்டும்’ எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, சங்கராபுரம் ஊராட்சித் தலைவராக பிரியதா்ஷினி பதவியேற்க இடைக்காலத் தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.துரைசாமி, டி.ரவீந்திரன் ஆகியோர் அடங்கிய அமா்வு கடந்த பிப்ரவரி 6ம் தேதி அளித்த தீா்ப்பில், சங்கராபுரம் ஊராட்சிமன்ற தலைவராக பிரியதா்ஷினி வெற்றி பெற்றது செல்லாது என்றும், முதலில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட தேவியின் வெற்றியே செல்லும் எனவும் நீதிமன்றம் தெரிவித்தது. இத்தீர்ப்பை எதிர்த்து சிவங்கை மாவட்ட ஆட்சியா் மற்றும் பிரியதர்ஷனி ஆகியோர் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கானது, இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, காங்கிரஸ் வேட்பாளர் தேவி தரப்பு வழக்கறிஞராக ப.சிதம்பரம் ஆஜராகி வாதாடினார். இந்த நிலையில், சிவகங்கை மாவட்டம் சங்கராபுரம் ஊராட்சிமன்ற தலைவராக யாரும் பதவியேற்க உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. முதலில் வெற்றிச்சான்றிதழ் பெற்ற தேவி ஊராட்சி தலைவராக பதவியேற்க உயர்நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது. இந்நிலையில், உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

Tags : Supreme Court ,suvagangai ,sankarapuram ,Sivagangai district ,priyadharshini ,devi , suvagangai,sankarapuram,devi,priyadharshini,Supreme court
× RELATED வேளாண் சட்ட விவகாரத்தில் இன்று சில...