ஜெகதீசன் அதிரடி ஆட்டம்: தமிழ்நாடு 424 ரன் குவிப்பு

ராஜ்கோட்: ரஞ்சி தொடரில் விக்கெட் கீப்பர் ஜெகதீசன் அதிரடி ரன் குவிப்பால் தமிழ்நாடு அணி, சவுராஷ்டிரா அணிக்கு எதிராக முதல் இன்னிங்சில் 424ரன் குவித்துள்ளது.  நடப்பு ரஞ்சி கோப்பை தொடர் லீக் போட்டியில் தமிழ்நாடு-சவுராஷ்டிரா அணிகள் மோதும் ஆட்டம் நேற்று முன்தினம் ராஜ்கோட்டில் தொடங்கியது. டாஸ் வென்று முதல் முதலில் களமிறங்கிய தமிழ்நாடு அணி முதல்நாள் ஆட்ட நேர முடிவில்  7 விக்கெட் இழப்புக்கு 250 ரன் எடுத்திருந்தது. பொறுப்பாக விளையாடிய  விக்கெட் கீப்பர் என்.ஜெகதீசன் 61*, பந்துவீச்சாளர் எம்.முகமது 1* ரன்னுடன் களத்தில் இருந்தனர். முதல் இன்னிங்சில் கைவசம் 3 விக்கெட்களுடன் நேற்று 2வது நாள் ஆட்டத்தை தமிழ்நாடு தொடர்ந்தது.  ஜெகதீசன் சதம் விளாசிய சிறிது நேரத்தில் நன்றாக விளையாடிய முகமது 41 ரன்னில் ஆட்டமிழந்தார். இருவரும் 8வது விக்கெட்டுக்கு 115 ரன் சேர்த்தனர்.

அடுத்து வந்த மணிமாறன் சித்தார்த் டக் அவுட்டானார். அப்போது அணியின் ஸ்கோர் 9 விக்கெட் இழப்புக்கு 358 ரன். கடைசி விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி விக்னேஷ் நல்ல ஒத்துழைப்பு தர ஜெகதீசன் வேகமாக 150 ரன்னை கடந்தார்.

இரட்டை சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்ஜெகதீசன் 183ரன்(256பந்து, 22பவுண்டரி, 5சிக்சர்) எடுத்திருந்தபோது உனத்கட் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அதனால் தமிழ்நாடு 128.4ஓவரில் எல்லா விக்கெட்களையும் இழந்து 424 ரன் குவித்தது.

கடைசி விக்கெட்டுக்கு தமிழ்நாடு சேர்த்த 66 ரன்னில் விக்னேஷ் 5* ரன் சேர்த்திருந்தார். உதிரி 2 ரன். ஜெகதீசன் மட்டும் 59ரன் குவித்தார்.  சவுராஷ்டிரா தரப்பில் சார்பில் ஜெய்தேவ் உனத்கட் 6 விக்கெட் அள்ள, சிராக்  ஜானி 2,  தர்மேந்திர சிங் ஜடேஜா,  பிரேரக் மன்கட் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

அதனையடுத்து 424ரன் பின்தங்கிய நிலையில் சவுராஷ்டிரா முதல் இன்னிங்சை தொடங்கியது. சவுராஷ்டிரா 2ம் நாளான நேற்று ஆட்ட நேர முடிவில் 41ஓவருக்கு 3 விக்கெட் இழந்து 107ரன் எடுத்தது. ஹர்விக் தேசாய் 12, கிஷன் பர்மர் 24,  விஷ்வராஜ் ஜடேஜா 16 ரன்னில் ஆட்டமிழந்தனர்.  அவி பரோத் 38*,  அர்பித் வாசவதா 11* ரன்னுடன் களத்தில் உள்ளனர். கே.விக்னேஷ் சாய்கிஷோர், மணிமாறன் சித்தார்த் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். சவுராஷ்டிரா அணி 7 விக்கெட் கைவசமிருக்க  317ரன் பின்தங்கிய நிலையில் 3வது நாளான இன்று முதல் இன்னிங்சை தொடர உள்ளது.

Related Stories: