ஃபேஸ்புக் வழியே சமூக சேவை...ஆச்சரியப்படுத்தும் மத்யமர் குழு...

நன்றி குங்குமம்

ஃபேஸ்புக்கில் சினிமா, வரலாறு, அரசியல், உடல்நலம், வாசகர் வட்டம் எனப் பல்வேறு தலைப்புகளில் நிறைய குழுக்கள் இயங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்திருப்போம். இதில் இணைபவர்கள் அந்தப் பக்கத்தில் தங்கள் கருத்துகளைப் பதிவிடுவதுடன், மற்ற பதிவுகளுக்கு லைக்கோ கமென்ட்டோ இடுவர். அவ்வளவே அந்தக் குழு உறுப்பினர்களுக்கு இடையேயான உறவாக இருக்கும். ஆனால், இதையெல்லாம் கடந்து ஃபேஸ்புக் குழு மூலம் நிறைய விஷயங்களைச் செய்யமுடியும் என்பதற்கு உதாரணமாகத் திகழ்கிறது ‘மத்யமர்’ என்கிற ஃபேஸ்புக் குழு. ஆம். இக்குழு தன் உறுப்பினர்களுடன் இணைந்து அறக்கட்டளையும், பதிப்பகமும் தொடங்கியதுடன், இப்போது யூ டியூப் சேனல் ஒன்றையும் ஆரம்பித்து விறுவிறுப்பாகப் பயணித்து வருகிறது. சமீபத்தில், தன் ஃபேஸ்புக் அறக்கட்டளை வழியே அரசுப் பள்ளிகளுக்குக் கட்டடங்கள் கட்டித் தந்துள்ளது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்! ‘‘‘மத்யமர்’னா நடுத்தர வர்க்கம்னு அர்த்தம்.

அந்த நடுத்தர வர்க்கத்தின் குரல்தான் இந்த ஃபேஸ்புக் குரூப். மத்யமர் என்ற வார்த்தையை முதன்முதலா உருவாக்கியவர் எழுத்தாளர் சுஜாதா. அவர் ‘மத்யமர்’னு ஒரு சிறுகதைத் தொகுப்பே எழுதியிருக்கார். அந்த வார்த்தையை மட்டும் பயன்படுத்திக்கிட்டேன்...’’ என்கிறார் இந்தக் குழுவை உருவாக்கிய ஷங்கர் ராஜரத்தினம். ‘‘பொதுவா, நடுத்தர மக்கள் தங்கள் பிரச்னைகளைப் பத்தி எங்கும் பேசமாட்டாங்க. எதுக்காகவும் ரோட்டுக்கு வரமாட்டாங்க. அவங்களுக்கு அவங்க வேலையைச் செய்யவே நேரம் சரியா இருக்கும். ஆனா, இப்ப அவங்களுக்கு ஃபேஸ்புக் வரப்பிரசாதமா கிடைச்சிருக்கு.நான், 2015ல் நடுத்தர வர்க்க மக்களின் குரலா ஃபேஸ்புக்கில் எழுதத் தொடங்கினேன். எனக்கு நிறைய ஃபேன்ஸ் உருவானாங்க. அப்ப சில நண்பர்கள் ‘நடுத்தர வர்க்க மக்களின் குரலுக்காக நீங்க ஏன் ஒரு குரூப் ஆரம்பிக்கக் கூடாது’னு கேட்டாங்க. அதனால, 2018ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி இந்த குரூப்பை ஆரம்பிச்சேன். அது நிறைய பேருக்கு  பிடிச்சுப் போய் இணைஞ்சாங்க.

தஞ்சாவூர்ல கண் அறுவை சிகிச்சை நிபுணரா இருக்குற டாக்டர் ரோகிணி கிருஷ்ணா, தொழிலதிபர் மீனாட்சி உலகநாதன், ஐடியில் இருக்குற கீர்த்திவாசன் ராஜாமணி, சுவாமிநாதன் ராமசுப்ரமணியன், வழக்கறிஞரான ரேவதி பாலாஜி ஆகியோர் குரூப்பின் நிர்வாகப் பொறுப்புகளைப் பகிர்ந்துக்கிறாங்க’’ என்கிறவர், குழுவின் செயல்பாடுகள் பற்றி விவரித்தார்: ‘‘நாங்க இதை பப்ளிக் குரூப்பா இல்லாம குளோஸ்டு குரூப்பா ஆரம்பிச்சோம். அதாவது, யாராவது ஒருத்தர் பரிந்துரை செய்து அப்ரூவ் பண்ணினாதான் உறுப்பினராக முடியும். ஏன்னா, நிறைய ஃபேஸ்புக் குரூப்கள் ஒரு நல்ல பதிவு போட்டாலும் அதுக்கான கமெண்ட்ஸ் அசிங்கமாகவே வருது. இதனால, கண்ணியமா எழுதுறவங்க ஒதுங்கிடுறாங்க. குறிப்பா, பெண்கள் ஃபேஸ்புக் பக்கம் போகக் கூடாதுனு அவங்க கணவர்கள் கன்ட்ரோல் பண்ண இது ஒரு காரணம். அதைத் தவிர்க்கவே இப்படி குளோஸ்டு குரூப். எங்க குரூப்ல எல்லா விஷயங்களையும் எழுதலாம். அரசியல் விஷயங்களைக் கூட அனுமதிக்கிறோம். ஆனா, எல்லாத்தையும் மதிப்பீடு செஞ்ச பிறகே குரூப்ல வெளியிடுறோம். இதுக்காக Moderators டீமே இருக்கு. இவங்களும் குரூப் உறுப்பினர்கள்தான்.

குரூப்ல எழுத விதிமுறைகளும் உருவாக்கியிருக்கோம். எந்தத் தலைவரையும் தனிப்பட்ட முறையில தாக்கி தப்பான வார்த்தைகள்ல எழுதக்கூடாது. அவங்க கருத்தை மட்டும்தான் விமர்சிக்கணும். அப்புறம், வெளியிலிருந்து கருத்துகளை எடுத்து ஃபார்வர்டு, காப்பி பேஸ்ட் பண்ணக்கூடாது. உறுப்பினர்களே எழுதணும். அது அவங்க சொந்தக் கருத்தா இருக்கணும். அதுவும் ரொம்ப பெரிசா இருக்கக்கூடாது. ஓரளவு படிக்கிறமாதிரி இருக்கணும். தவிர, யாராவது தப்பா கமெண்ட் போட்டா நாங்களே முதல்ல அதை சரி செய்வோம். விடாம தொடர்ந்து தவறான கமெண்ட்ஸ் போட்டுக்கிட்டே இருந்தா அவங்கள பிளாக் பண்ணிடுவோம். இப்படி நூறு பேருக்கு மேல நாங்க பிளாக் பண்ணியிருக்கோம். இப்ப குரூப்ல 23 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக இருக்காங்க. இதுல 8 ஆயிரம் பேர் வரை ஆக்டிவ்வா இருக்காங்க...’’ என்ற ஷங்கர் ராஜரத்னத்தை தொடர்ந்தார் அட்மின் நிர்வாகிகளில் ஒருவரான டாக்டர் ரோகிணி கிருஷ்ணா:

‘‘இப்படியான விதிகளால ரொம்பப் பாதுகாப்புனு நிறைய பெண்கள் உள்ள வந்தாங்க. அப்புறம், குடும்பமாகவும் சேர்ந்தாங்க. இதனால, எங்க குரூப்பே ரொம்ப சுறுசுறுப்பாச்சு. ஆனா, இப்படி தொடர்ந்து எழுதிட்டே இருந்தா போதுமானு ஒரு கேள்வி தோணுச்சு. ஏன்னா, வெறும் எழுத்தா போயிட்டே இருந்தா ஒரு கட்டத்துல நீர்த்துப் போயிடும்.அதனால, புது உத்திகளைக் கொண்டு வந்தோம். முதல்கட்டமா, உறுப்பினர்களுக்கு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஒரு தலைப்பு கொடுத்தோம். உதாரணத்துக்கு ‘உங்க வாழ்க்கையில் நீங்க சந்திச்ச சோதனைகள் என்ன? அதை எப்படி கடந்தீங்க?’, ‘நீங்க சின்ன வயசுல வச்சிருந்த குறிக்கோள் என்ன? அது இப்பவும் இருக்கா? அல்லது மாறியிருக்கா?’ பெண்களுக்கு, ‘நீங்க அலுவலகம் போகும்போது மறைமுகமாக நடக்குற பாலியல் தொந்தரவுகள் என்ன..?’ இப்படியான விஷயங்களைக் குறிப்பிட்டு எழுதச் சொன்னோம். எல்லோரும் சந்தோஷமா எழுதினாங்க.

இதுல தவறுகள் இருந்தா சம்பந்தப்பட்டவங்களுக்கே திருப்பி அனுப்பி திருத்தச் சொல்லி வாங்கினோம். கிட்டத்தட்ட ஒரு பத்திரிகை நடத்தற மாதிரிதான். இதனால, ஃபேஸ்புக் குரூப்கள்லயே ரொம்ப கண்ணியமான, அதே சமயம் சுறுசுறுப்பான குரூப்னு பெயர் கிடைச்சது. பிறகு, குரூப் உள்ள போட்டிகள் நடத்தினோம். ‘சபாஷ் மத்யமர்’னு ஒரு தலைப்பின் கீழ் கதைப் போட்டி, கவிதைப் போட்டி, ஓவியப்போட்டி, கைவினை கலைப் போட்டி, கோலப் போட்டினு பண்ணினோம். ஒவ்வொண்ணுக்கும் ஏகப்பட்ட ரெஸ்பான்ஸ்...’’ என்கிற ரோகிணியைத் தொடர்ந்தார் ஷங்கர்: ‘‘இந்நேரம், எழுதுற எல்லாரையும் நல்லா எழுத வைக்கணும்னு அடுத்த கட்டத்துக்குப் போனோம். அவங்கள அங்கீகரிக்க முடிவெடுத்தோம். ‘போஸ்ட் ஆஃப் தி வீக்’னு 25 சிறந்த பதிவுகளைத் தேர்ந்தெடுத்து அவங்களுக்கு சான்றிதழ் தந்தோம். அதேமாதிரி அதிக லைக்ஸ், கமென்ட்ஸ் போடுறவங்கள தேர்ந்தெடுத்து ‘ஜெம் ஆஃப் மத்யமர்’னு சான்றிதழ் கொடுத்தோம். இதனால, சிறப்பான கட்டுரைகளும், சிறுகதைகளும், கவிதைகளும் எழுத ஆரம்பிச்சாங்க. முன்னாடி ஃபேஸ்புக்ல எழுதாதவங்க கூட இதுக்குப் பிறகு எழுத ஆரம்பிச்சாங்க.

இன்னும் வேறு விதமா எடுத்திட்டுப் போனா என்னனு தோணுச்சு. அப்பதான் அறக்கட்டளை உருவாக்குற ஐடியா வந்துச்சு. நான் இதை ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி ‘கஜா புயலால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு பணம் அனுப்பப் போறேன்’னு குரூப்ல போஸ்ட் போட்டேன். அவர் பெயர் என்னனு கேட்டாங்க. சொன்னேன். அவருக்கு எல்லோருமா சேர்ந்து இரண்டரை லட்சம் ரூபாய் பணம் அனுப்பிச்சாங்க. எனக்கு ஆச்சரியமா இருந்துச்சு. அப்பதான் நாங்க யோசிச்சு ‘மத்யமர் அறக்கட்டளை’யைத் தொடங்கினோம். பிறகு, குழு உறுப்பினர்கள் அவங்க பிறந்தநாள், திருமணநாள்னு நல்ல நாட்களுக்கு பணம் பங்களிப்பு செய்தாங்க. அதை எப்படி செலவழிக்கணும்னு நினைச்சப்ப, வகுப்பறைகள் இல்லாம இருக்கிற அரசுப் பள்ளிகளுக்குக் கட்டடம் கட்ட உதவலாம்னு தோணுச்சு. உடனே, குன்றத்தூர் பக்கம் சிறுகளத்தூர் கிராமத்துல பசங்க மரத்தடியில் படிக்கிறதா கேள்விப்பட்டு போய் பார்த்தோம். பிரச்னையைச் சொன்னாங்க. உடனே அந்தப் பள்ளிக்கு 700 சதுர அடியில ரெண்டு வகுப்பறைகள் கட்டிக் கொடுத்தோம். அரசு அனுமதியுடனே இந்தப் பணிகளைச் செய்தோம். இதுக்கு மூணு லட்சம் ரூபாய் செலவாச்சு.

இதைப் பார்த்திட்டு நிறைய பள்ளிகள் எங்கள தொடர்பு கொண்டாங்க. இப்ப பொன்னேரி பக்கம் கீழ்மேனி கிராமத்துல தொடக்கப்பள்ளிக்கு வகுப்பறைகள் பத்தல. அங்க 400 சதுர அடியில ஒரு வகுப்பறை கட்டிட்டு இருக்கோம். தவிர, புதுக்கோட்டைல ஒரு பள்ளிக்குக் கட்டடம் கட்டுவதற்கான திட்டமும் இருக்கு. இதுக்கிடையில உறுப்பினர்கள், உடலுழைப்பால எதாவது செய்யணும்னு ஆசைப்பட்டாங்க. அதனால, ஒவ்வொரு பதினைஞ்சு நாட்களுக்கும் ஒரு நல்ல விஷயம் பண்ணணும்னு ‘மத்யமர் சமூக சேவை’ குரூப் ஆரம்பிச்சோம். இதன்வழியா, பள்ளிகள்ல வகுப்பு எடுக்கத் தொடங்கினோம். ராஜா அண்ணாமலைபுரத்துல ஒரு பள்ளில ஆசிரியர்கள் பற்றாக்குறைனு சொன்னாங்க. இப்ப அங்க எங்க உறுப்பினர்கள் ரெகுலரா வகுப்புகளை இலவசமா எடுக்கறாங்க. தவிர, கண் பார்வையற்றவங்களுக்கு தேர்வெழுத ஸ்க்ரைப் சர்வீஸும் செய்றோம். ஸ்க்ரைப் வேணும்னு ஒரு பதிவு போட்டா போதும். உடனே அன்னைக்கு ஃப்ரீயா இருக்கிறவங்க போயிடுவாங்க.

அப்புறம், கோயில்கள்ல உழவாரப் பணிகள் பண்றோம். இப்போதைக்கு இந்த விஷயங்கள் எல்லாம் சென்னைல மட்டும்தான் செய்துட்டு வர்றோம். சீக்கிரமே, தமிழகம் முழுக்க எடுத்திட்டு போகப் போறோம். அடுத்து, குரூப்ல எழுதுற நல்ல எழுத்துகளுக்கு அங்கீகாரம் அளிக்கணும்னு ‘மத்யமர் பதிப்பக’மும் ஆரம்பிச்சோம். அதன்வழியா போன வருஷம் சிறுகதைகள் போட்டி வச்சோம். அந்தப் போட்டிகள்ல தேர்ந்தெடுக்கப்பட்ட இருபது கதைகளைச் சேர்த்து ‘மத்யமர் சிறுகதைகள்’னு ஒரு நூல் கொண்டு வந்தோம். இந்த வருஷம், ‘தாமிரபரணி எனும் சிநேகிதி’னு ஒருத்தர் எழுதிய தொடரை நூலா வெளியிட்டோம். இன்னும் நிறைய நூல்கள் வெளியிட இருக்கோம்.

இதுதவிர, ‘ஃபேஸ்புக் லைவ்’னு உறுப்பினர்களுக்கு உபயோகமான பேட்டிகள் யூ டியூப் சேனல் வழியே தர்றோம். உதாரணத்துக்கு மியூச்சுவல் பண்ட்னா என்ன? மெடிக்கல் இன்சூரன்ஸ் ஏன் எடுத்துக்கணும்? இந்த மாதிரியான விஷயங்கள். துறை சார்ந்த நிபுணர்களை அழைச்சிட்டு வந்து உறுப்பினர்கள்கிட்ட முன்னாடியே வாங்கின கேள்விகளுக்கு பதில் வாங்கி அதை லைவ் வீடியோவா போடுவோம். இதுக்காகவே, மத்யமர் யூ டியூப் சேனல்...’’ என உற்சாகமாகக் குறிப்பிடுகிறார் ஷங்கர். ‘‘இப்ப எங்க குறிக்கோள், அடுத்த ஒரு வருஷத்துக்குள்ள எங்க உறுப்பினர் எண்ணிக்கையை ஐம்பதாயிரமாகவும், ஆகடிவ் உறுப்பினர்களை 20 ஆயிரமாகவும் உயர்த்தறதுதான். அடுத்து, குறைஞ்சது ஒரு கோடி ரூபாய்க்கு அறக்கட்டளை வேலைகள் பண்ணணும். அப்புறம், அரசுடன் இணைஞ்சு கல்வில என்னென்னல்லாம் பண்ண முடியுமோ அதைச் செய்யணும்...’’ நம்பிக்கையுடன் சொல்கின்றனர் ஷங்கரும் மத்யமர் குழுவினரும்.               

தொகுப்பு:  பேராச்சி கண்ணன்

Related Stories: