பத்மஸ்ரீ டீ மாஸ்டர்!

ஐம்பது வருடங்களுக்கு மேலாக ஒடிசாவில் உள்ள பக்ஸி பஜாரில் டீ வியாபாரம் செய்து வருகிறார் பிரகாஷ் ராவ்.  இவர் வெறும் டீ வியாபாரி மட்டுமல்ல; தன்னுடைய சொற்ப வருமானத்தில் ஆயிரக்கணக்கான ஏழைக் குழந்தைகளுக்குக் கல்வி வழங்கும் வள்ளல். 44 வருடங்களாக ரத்த தானமும் செய்து வருகிறார்.படிப்பதிலும் எழுதுவதிலும் தீராத ஆர்வமுடைய ஒரு குழந்தையாக வளர்ந்தார் பிரகாஷ் ராவ். தந்தை டீ வியாபாரம் செய்ய உதவிக்கு அழைக்க, படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு டீக்கடைக்குச் சென்றுவிட்டார். ஒரு கட்டத்தில் அப்பாவின் உடல் நிலை சரியில்லாமல் போக, பிரகாஷ் ராவே கடையை நிர்வகிக்க வேண்டிய சூழல்.கல்விக் கனவை மூட்டை கட்டி வைத்துவிட்டு டீ ஆத்தத் தொடங்கினார்.

அதிகாலையில் 4 மணிக்கு கடையைத் திறந்தால் இரவு 10 மணி வரைக்கும் கடையைவிட்டு நகரமாட்டார்.அவரின் கடைக்கு அருகே ஏழைச் சிறுவர்கள் பள்ளிக்குப் போகாமல் ஊர்சுற்றிக் கொண்டும், தேவையில்லாத செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதையும் பார்த்த அவரது இதயம் வருந்தியது. அவருக்குள் உறங்கிக் கொண்டிருந்த கல்விக் கனவு மறுபடியும் விழித்துக்கொண்டது. உடனே டீ வியாபாரத்தில் கிடைத்த தொகையை வைத்து ஒரு பள்ளியை ஆரம்பித்தார். இன்று அங்கே மூன்றாம் வகுப்பு வரை பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. அங்கே பயின்றவர்கள் மேற்கொண்டு படிக்க வேண்டிய எல்லா உதவிகளையும் ராவே செய்கிறார். ஆரம்பத்தில் சொந்தப்பணத்தில் பள்ளிக் கூடத்தை நடத்தி வந்த ராவிற்கு இப்போது நாலாப்பக்கமிருந்தும் உதவிகள் கிடைக்கிறது. எதையும் எதிர்பார்க்காமல் நல்லதைச் செய்துகொண்டிருந்தால் அதற்கான அங்கீகாரம் வீடு தேடி வரும் என்பதற்கு உதாரணம் பிரகாஷ் ராவ். ஆம்; கடந்த வருடம் இந்தியாவின் நான்காவது கௌரவ விருதான பத்மஸ்ரீ விருது பிரகாஷ் ராவைத் தேடி வந்து கௌரவித்தது!

Related Stories: