டியர் பாஸ்கட்பால்

நன்றி குங்குமம் முத்தாரம்

கடந்த வாரம் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கின சம்பவம் கோப் பிரையன்ட்டின் மரணம். உலகப் புகழ்பெற்ற கூடைப்பந்து விளை யாட்டு வீரரான கோப் பிரையன்ட் பயணம் செய்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான தில் அவருடன் சேர்ந்து ஒன்பது பேர் மரணமடைந்தனர்.அந்த ஒன்பது பேரில் அவரது மகளான ஜியான்னாவும் ஒருவர். 13 வயதான ஜியான்னாவும் வளர்ந்து வரும் கூடைப்பந்து விளையாட்டு வீராங்கனை என்பது குறிப்பிடத்தக்கது. இன்றும் கூட கோடிக் கணக்கான மக்கள் தந்தைக்கும் மகளுக்கும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 6 அடி 6 அங்குல உயரம், ஆஜானுபாகுவான தோற்றம், மலைப்பாம்பைப் போல சீற்றம், களத்தில் குதித்தால் எதிரணியினர் நடுங்கும் அளவுக்கு விளையாட்டுத் திறன், கையில் பந்து கிடைத்தாலே அது கூடைக்குத்தான் போகும். ஆம்; இவையெல்லாம் கோப் பிரையன்ட்டின் அடையாளங்கள்.

உலகளவில் நடைபெறும் கூடைப்பந்து விளையாட்டுப் போட்டிகளில் பிரசித்தி பெற்றது என்.பி.ஏ எனும் போட்டி. வட அமெரிக்காவில் நடைபெறும் இந்தப் போட்டிகளில் கலந்துகொள்ளும் அணியில் இடம்பெறுவது என்பதே பெரும் சாதனையாகக் கருதப்படுகிறது. பள்ளியில் படிக்கும்போதே என்.பி.ஏ அணியில் இடம் பிடித்தவர் கோப் பிரையன்ட். உலகளவில் தலைசிறந்த கூடைப்பந்து விளையாட்டு வீரர்களின் பட்டியலில் நான்காம் இடத்தில் இருக்கும் பிரையன்ட் இரண்டு முறை ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கத்தைத்தட்டியிருக்கிறார். தவிர, ஐந்து முறை என்.பி.ஏ சாம்பியன்ஷிப்பையும் தன்வசமாக்கியுள்ளார்.

நான்கு வருடங்களுக்கு முன்பு புரொபஷனல் பாஸ்கட் பாலில் இருந்து ஓய்வு பெற்றார். ஓய்வின் நிமித்தமாகவும் கூடைப்பந்தின் மேல் உள்ள காதலைப் பிரதி பலிக்கும் விதமாகவும் ஒரு கடிதத்தை எழுதினார் கோப். அதன் பெயர் ‘டியர் பாஸ்கட் பால்’. அந்தக் கடிதம் ‘டியர் பாஸ்கட் பால்’ என்ற பெயரிலேயே ஐந்து நிமிடம் ஓடக்கூடிய அனிமேஷன் குறும்படமாக எடுக்கப்பட்டு ஆஸ்கர் விருதையும் தட்டியது. ஆஸ்கர் விருதை வென்ற முதல் தடகள வீரரும் கோப் தான்.

தொகுப்பு: த.சக்திவேல்

Related Stories: