×

மூங்கில் ரயில்

நன்றி குங்குமம் முத்தாரம்

ரயில் என்றாலே வரிசையாக பெட்டிகள், 100 மீட்டர் தூரத்தில் வரும்போதே தடதட சத்தம், ஏ.சி.வசதி, படுக்கும் வசதி என ஏகப்பட்ட பிம்பங்கள் நம் முன் வந்து நிற்கும். ஆனால், இது எதுவுமே இல்லாமல் ஒரு ரயிலைப் பார்த்திருக்கிறீர்களா? கம்போடியாவுக்குப் போனால் பார்க்க முடியும். உலகிலேயே விநோதமான இந்த ரயில் மூங்கில்களால் ஆனது. பார்ப்பதற்கு கட்டுமரம் போல காட்சியளிக்கும் இந்த மூங்கில் ரயில் மீட்டர் கேஜ் பாதைகளில் மணிக்கு 30 கிலோ மீட்டர் வேகத்தில் செல்கிறது. வரிசையாக கட்டப்பட்ட மூங்கில்களுக்கு அடியில் ஒரு இரும்புச் சக்கரம். வண்டியை இயக்க முன்னாடி ஒரு என்ஜின், அவ்வளவு தான் இந்த மூங்கில் ரயிலின் தயாரிப்புத் தொழில்நுட்பம். இதை கம்போடியாவில் வாழும் மக்கள் கூட ஓட்டுகின்றனர். பிரெஞ்ச் காலனி ஆதிக்கத்தின் கீழ் கம்போடியா இருந்தபோது அங்கே ரயில் பாதைகள் உருவாக்கப்பட்டன.

அந்த ரயில் பாதைகளில் சிலவற்றை பயன்படுத்தாமல் அப்படியே விட்டுவிட்டனர். அந்தப் பாதைகளில் தான் இந்த மூங்கில் ரயில் சென்று வந்தது. இருபது வருடஙகளுக்கு முன்பு பட்டம்பேங்க் முதல் போய்பெட் வரை தினமும் மூங்கில் ரயில் பயணித்தது. பெரும்பாலும் அருகில் உள்ள இடங்களுக்குச் செல்லவும், பொருட்களை எடுத்துச் செல்லவுமே இந்த ரயிலைப் பயன்படுத்தி வந்தனர். எதிரே ரயில் வந்தால் மட்டுமே கொஞ்சம் சிக்கல். எந்த ரயிலில் குறைவான ஆட் களும் பொருட்களும் இருக்கிறதோ அந்த ரயிலைத் தண்ட வாளத்தில் இருந்து தூக்கி தள்ளி நிறுத்துவார்கள். எதிரே வந்த ரயில் கடந்து சென்ற பின் மறுபடியும் ரயிலை தண்டவாளத்தில் இறக்கி ஓட்டுவார்கள். நாளடைவில் இந்த ரயில் மக்கள் யாரும் பயணம் செய்யாததால் நின்றுவிட்டது. ஆனால், 2018-லிருந்து சுற்றுலாப் பயணிகளுக்காக மட்டுமே வாட் பனான் என்ற இடத்துக்குப் பக்கத்தில்  இந்த மூங்கில் ரயில் இயங்கிவருகிறது.

Tags : Bamboo Train
× RELATED மாவோ சூட்