விண்வெளி - 2020

நன்றி குங்குமம் முத்தாரம்

கடந்த வருடம் விண்வெளியில்  பல சாதனைகள் நிகழ்த்தப்பட்டன. 2020-ல் விண்வெளியில் என்னென்ன நடக்கப்போகிறது என்பதைப் பார்ப்போம்.

செவ்வாய் கிரகம் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை அருகருகே பூமியும் செவ்வாய்  கிரகமும் வரும். சாதாரண காலகட்டத்தை விட அப்போது  நெருக்கம் அதிகமாக இருக்கும். இந்த சமயத்தில் செவ்வாய் கிரகத்திற்கு ஓடங்களை அனுப்ப நாடுகள் முயற்சிக்கும். இந்த வருடம் செவ்வாய் கிரகத்திற்கு மூன்று பயணங்கள் இருக்கும் என கணிக்கப் பட்டுள்ளது. அமெரிக்கா மார்ஸ் - 2020 என்ற ரோவரை அனுப்ப உள்ளது. இதில் ஒரு சிறிய ஹெலி காப்டரும் இருக்கும். இது ஜெசி ரோ என்ற எரிமலை வாயிலில் இறங்கும். இங்கே ஒரு காலத்தில் ஏரி இருந்தது. அதனால் அந்த ஏரி இருந்தபோதுஅங்கே ஜீவ ராசிகள் வாழ்ந்திருக்குமா? என்ற கோணத்தில் ஆய்வை நடத்தப்போகின்றனர்.  

அடுத்து சீனா முதல் தடவையாக செவ்வாய் கிரகத்திற்கு ரோவரை அனுப்புகிறது. இதன் ஸ்பெஷல் என்ன வென்றால் இதனுடன் கூடுதலாக ஒரு ஆர்பிட்டரும் இருக்கும்.ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சி ரஷ்யாவுடன் இணைந்து ரோஸலிண்ட் ஃப்ராங்கிளின் என்ற ரோவரை அனுப்ப உள்ளது. ரோஸலிண்ட் ஃப்ராங்கிளின் என்பவர் ஒரு இங்கிலீஷ் கெமிஸ்ட். இவர் டி.என்.ஏ-வின் உடற்கூறு பற்றி ஆய்வு செய்தவர். இதுபோக ஐக்கிய அரபு நாடுகள் ஹோப் என்ற ஆர்பிட்டரை ஜப்பானிய ராக்கெட் மூலம் மேலே அனுப்புகிறது. இது வெற்றிகரமாகச் செயல்பட்டால் மேலும் பல நாடுகள் இதுபோல விண்வெளி பயணத்துக்கு உற்சாகமாக களமிறங்கும்

வால் நட்சத்திரம்

கடந்த செப்டம்பரில்  சூரிய மண்டலத்தில் ஒரு வால் நட்சத்திரம் தென்பட்டது. இதனை பூமியில் உள்ள சுழலும் டெலஸ்கோப் மூலம் கண்காணிக்கத்துவங்கியுள்ளனர். இந்த வால் நட்சத்திரம், திரும்பவும் விண் மீன்களுக்கு இடையே பயணித்து விடுமா அல்லது சூரிய வெப்பம் அதனைத் தாக்கி விண்ணிலேயே வெடித்துச் சிதறுமா என்பது வருங்காலத்தில்தான் தெரிய வரும்.

சந்திரன்

கடந்த வருடம் சந்திரனில் இதுவரை யாருமே இறங்காத, மறைந்துள்ள பகுதிக்குச் சென்று உலகையே மிரளவைத்தது சீன ரோவர். இஸ்ரேலும் ஒரு  ஓடத்தை சந்திரனுக்கு அனுப்பியது. ஆனால், அது சந்திரனில் மோதி நாசமாகி விட்டது. இந்தியாவின் விக்ரம் இறங்கும்போது, தரைக்கு மிக அருகில் விழுந்துவிட்டது. 2020-ம் ஆண்டின் முடிவிற் குள் சீனா ‘Chang-5’ என்ற ரோபோ சோதனைக் கருவியைச் சந்திரனுக்கு அனுப்பப் போகிறது. சந்திரனில் தென் பகுதியில் உள்ள பாறைகள் மற்றும் மண்ணை இது பூமிக்கு எடுத்துவந்து சோதனைக்கு உதவுமாம். கடைசியாக1976-ல் சோவியத் விண்கலம் ஒன்று சந்திரனிலிருந்து கல், மண்ணை எடுத்து வந்தது. இதுபோக உலகின் பெரு நிறுவன முதலாளிகளான ரிச்சர்ட் பிரான்ஸன், ஜெஃப் பெஸோஸ், எலன் மஸ்க் போன்றோர் எப்படியாவது இந்த வருடத்தின் இறுதிக்குள் மக்களை விண்வெளிக்குச் சுற்றுலா அழைத்துப் போவதில் மும்முரமாக உள்ளனர். இதற் கான சோதனை ஓட்டங்கள் துரிதகதியில் நடந்துவருகின்றன.

Related Stories: