×

சேலம் அருகே இரவில் பரபரப்பு: சரக்கு ரயிலில் இருந்து 38 பெட்டிகள் கழண்டு நடுவழியில் நின்றது

சேலம்: பாலக்காட்டில் இருந்து ஜோலார்பேட்டைக்கு நேற்று, டீசல் லோடு ஏற்றிய சரக்கு ரயில் புறப்பட்டது. 43 டேங்கர்களில் டீசல் நிரப்பப்பட்டு கொண்டு வரப்பட்டது. இரவு 9.30 மணியளவில் சேலம் அருகே சரக்கு ரயில் வந்து கொண்டிருந்தது. சேலம் ரயில்வே ஸ்டேஷனுக்கு முன் நெய்காரப்பட்டி அருகே வந்தபோது, திடீரென சரக்கு ரயிலின் 6 வது டேங்கர் பெட்டி இணைப்பு பகுதி துண்டிக்கப்பட்டு அதன்பின் உள்ள 38 பெட்டிகளும் கழண்டு நின்றது. சரக்கு ரயிலின் இன்ஜின், முதல் 5 பெட்டிகளுடன் சேலம் ரயில்வே ஸ்டேஷனின் 6வது பிளாட்பார்ம் பகுதிக்கு வந்தது. அப்போது, லோகோ பைலட்டிற்கு கார்டிடம் இருந்து அழைப்பு வந்தது. அதில் கார்டு, 38 டேங்கர் பெட்டிகளுடன் நடுவழியில் நிற்கிறோம். 6வது பெட்டி இணைப்பு கழண்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது. பின்னர், ரயில்வே கோட்ட கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர்.

அதிகாரிகள், 38 டேங்கர் பெட்டிகள் நடுவழியில் நிற்கும் இடத்திற்கு விரைந்துச் சென்றனர். ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசி தலைமையில் போலீசாரும் சென்று விசாரித்தனர். மேலும், அந்த நேரத்தில் சேலம் நோக்கி ஈரோட்டில் இருந்து வந்து கொண்டிருந்த ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலை மகுடஞ்சாவடி ஸ்டேஷனில் நிறுத்தினர். பிறகு, ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலின் இன்ஜின் மூலம் சரக்கு ரயிலை தள்ளிக்கொண்டு வந்து, அதன் ரயிலில் இணைக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். இதன்படி இரவு 10.30 மணிக்கு பின், ஏற்காடு எக்ஸ்பிரஸ் இன்ஜின் மூலம் நடுவழியில் நின்ற சரக்கு ரயிலை தள்ளிக்கொண்டு 2 கிலோ மீட்டர் தூரம் வந்தனர். 6வது பிளாட்பார்மிற்கு வந்து, அதன் ரயிலில் இணைத்ததும், ஏற்காடு எக்ஸ்பிரஸ் இன்ஜின் மீண்டும் மகுடஞ்சாவடி ஸ்டேஷனுக்கு சென்றது. அங்கு ரயில் பெட்டியுடன் இணைக்கப் பட்டு, இரவு 11.30 மணிக்கு சேலம் ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்து சேர்ந்தது.

பின்னர் 5 நிமிடத்தில் புறப்பட்டு, சென்னைக்கு சென்றது. இதனால், 1.30 மணி நேரம் தாமதமாக அந்த ரயில் சென்றது. சரக்கு ரயிலின் 38 பெட்டிகள் கழண்டு நடுவழியில் நின்றதால், நள்ளிரவு வரை அதிகாரிகளிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Salem , Salem, freight train, boxes
× RELATED சேலத்தில் வெயிலில் ஆஃப்பாயில் போட முயன்றவர்களிடம் போலீசார் விசாரணை..!!