×

டெல்லி பிரசாரத்தில் சர்ச்சையை கிளப்பும் வகையில் பேச்சு: தலைவர்களுக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை: நடத்தை விதிகளை பின்பற்ற அனைத்து கட்சிக்கும் அறிவுரை

புதுடெல்லி:  டெல்லி சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தில் சூடு பறந்து வருகிறது. பாஜ வேட்பாளரை ஆதரித்து பேசிய மத்திய நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்கூர், டெல்லி ஷாகீன்பாக்கில் போராட்டக்காரர்களை சுட்டுத் தள்ள வேண்டும்’’ என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதேபோன்று, பாஜ மேற்கு டெல்லி மக்களவை தொகுதி எம்.பி. பர்வேஷ் வர்மா, நேற்று முன்தினம் நடந்த பிரசாரத்தில் பேசுகையில், “காஷ்மீரில், பண்டிட்களுக்கு என்ன நடந்தததோ அதுபோன்று டெல்லியிலும் நடக்கக்கூடும். ஷாகீன் பாக்கில் லட்சக்கணக்கான சிஏஏ எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் கூடியுள்ளனர். அவர்கள் உங்கள் வீடுகளில் நுழைந்து உங்கள் மகள்கள் மற்றும் சகோதரிகளை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யக்கூடும்” என்று பேசினார். அவரது இந்த பேச்சு கடும் சர்ச்சைக்குள்ளானது.

இதையடுத்து இருவர் மீது நடவடிக்கை எடுக்கக்கூறி காங்கிரஸ் தலைவர்கள் சுபாஷ் சோப்ரா மற்றும் அஜய் மாகென் இருவரும் இந்திய தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து இருவருக்கும் விளக்கம் கேட்டு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.
இதற்கிடையே, அனுராக் தாக்கூர் மற்றும் பர்வேஷ் வர்மாவை, பாஜவின் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் இருந்து நீக்க அக்கட்சித் தலைமைக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அனுராக் தாக்கூர் மற்றும் பர்வேஷ் வர்மாவை விளக்கத்தை ஆராய்ந்து, தேர்தல் ஆணைம் அடுத்தக்கட்ட நடவடிக்கையை எடுக்கும். இந்நிலையில், அடுத்தடுத்து சர்ச்சை பேச்சுகள் தொடர்பான புகாரை தொடர்ந்து, தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், அனைத்துக் கட்சித் தலைவர்களும் பொறுப்புணர்ந்து பிரசாரம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது.



Tags : campaign ,leaders ,Delhi ,Election Commission ,parties , Delhi Promotion, Leaders, Election Commission
× RELATED திருவாரூர் அருகே கொரடாச்சேரியில்...