ஏர் இந்தியாவில் வேலை தருவதாக சமூக வலைதளங்களில் மோசடி விளம்பரம்: ஏமாற வேண்டாம்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை

புதுடெல்லி: சமூக வலைதளங்களில் தனது ‘லோகோ’ மற்றும் ‘டிரேட்மார்க்’ ஆகியவற்றை மோசடிக் கும்பல் தவறாக பயன்படுத்தி வருவதை தெரியவந்துள்ளது. லோகோ,, டிரேட்மார்க்கை பயன்படுத்துவதை உடனே நிறுத்திவிட வேண்டும் இல்லை என்றால் சட்டப்பூர்வமாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஏர் இந்தியா நிறுவனம் எச்சரித்துள்ளது. சமூக வலைதளங்களில் மோசடி கும்பல் தனது லோகோ மற்றும் டிரேட்மார்க் ஆகியவற்றை பயன்படுத்தி போலி இணையதளம் மூலம் ஏர் இந்தியா நிறுவனம் மற்றும் அதன் துணை நிறுவனத்தில் வேலை இருப்பதாகவும் அதை பெறுவதற்கும் முகவராக நியமனம் செய்வதற்கும் விளம்பரம் செய்கின்றனர். ஏர் இந்தியா விமானத்தில் குறைந்த கட்டணத்தில் விமான பயண டிக்கெட் வழங்குவதாகவும் அவர்கள் விளம்பரம் செய்கின்றனர். இதைப் பார்த்து அந்த முகவரியில் தொடர்பு கொள்பவர்களிடம் நம்பிக்கை ஏற்படும் வகையில் பேசி, வேலைவாய்ப்புக்கான போலி கடிதம் கொடுக்கின்றனர்.

அதற்கு பெரும் தொகையை டிபாசிட் செய்ய வேண்டும் என்று கேட்டு பெற்றுக் கொள்கின்றனர். மேலும் விண்ணப்ப பரிசீலனை கட்டணம் என்ற பெயரிலும் வசூல் செய்கின்றனர். அதேபோல் போலி ஆவணங்கள் மூலம் போலியாக விமான டிக்கெட்களும் வழங்குகின்றனர். இதுபோன்று எந்த வேலைவாய்ப்பும் முகவர் நியமனமும் ஏர் இந்தியா மேற்கொள்ளவில்லை. மேலும் குறைந்த கட்டணத்தில் பயண டிக்கெட்டும் வழங்கவில்லை. எனவே பொதுமக்கள் இதுபோன்ற மோசடி விளம்பரங்களை பார்த்து ஏமாற வேண்டாம் என்று ஏர் இந்தியா நிறுவனம் எச்சரித்துள்ளது. ஏர் இந்தியா நிறுவனம் ஏற்கனவே நிதி நெருக்கடியில் சிக்கி மீள முடியாத நிலைக்கு சென்றுவிட்டதால், அதை விற்பதற்கு மத்திய அரசு கடந்த சில ஆண்டுகளவே முயற்சி மேற்கொண்டு வருகிறது. கடந்த 2018ம் ஆண்டில் ஏர் இந்தியாவின் அரசின் பங்குகளை மட்டும் விற்பதாக அறிவித்தது. ஆனால், யாரும் வாங்க முன்வரவில்லை.

இன்நிலையில், கடந்த  திங்களன்று வெளியிட்ட அறிவிப்பில், ஏர் இந்தியாவின் 100 சதவீத பங்குகளையும் விற்க அரசு தயாராக இருப்பதாக கூறியுள்ளது. ஏர் இந்தியா நிறுவனம் சுமார் ரூ.58,000 கோடி கடன் சுமையில் சிக்கியுள்ளது. இதுதவிர ஓவ்வொரு ஆண்டும் இந்த நிறுவனம் அடையும் நஷ்டம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நஷ்டத்தில் இயங்கும் ஏர் இந்தியா நிறுவனம் மற்றும் இதன் துணை நிறுவனமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகியவற்றில் அரசின் பங்கு முதலீடு 100 சதவீதம் உள்ளது. இவற்றை அப்படியே விற்றுவிடும் முயற்சியில் அரசு இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: