×

விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக உயர்த்த பட்ஜெட்டில் பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிப்பை வெளியிட வேண்டும்: மத்திய அரசுக்கு காங்கிரஸ் கோரிக்கை

புதுடெல்லி: விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிப்பை வரும் பட்ஜெட்டில் வெளியிட வேண்டும் என மத்திய அரசுக்கு காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.  காங்கிரஸ் தலைவர்களின் ஒருவரும் மகாராஷ்டிரா முன்னாள் முதல்வருமான பிரித்விராஜ் சவான் நேற்று டெல்லியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:  பெட்ரோல் மற்றும் டீசலை, ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர வேண்டும். பெட்ரோலியப் பொருட்கள் மீது விதிக்கப்பட்டுள்ள வரிகள் மூலம் மத்திய அரசுக்கு ரூ.13.5 லட்சம் கோடி வருமானமாக கிடைக்கிறது. வரும் 2022ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரு மடங்காக உயர்த்தப் போவதாக தெரிவித்துள்ள மத்திய அரசு, கடந்த 5 ஆண்டுகளில் எத்தனை விவசாயிகளின் வருமானம் உயர்ந்துள்ளது என தெரிவிக்க வேண்டும். வரும் பட்ஜெட்டில் விவசாயிகளின் வருமானத்தை இரு மடங்காக உயர்த்த மத்திய அரசிடம் உள்ள திட்டங்கள் குறித்து தெரிவிக்க வேண்டும்.

 முந்தைய காங்கிரஸ் அரசு அறிவித்ததுபோல் விவசாயிகள் பெற்ற கடனை நாடு முழுவதும் தள்ளுபடி செய்ய வேண்டும். கிராமப்புறங்களில் வசிக்கும் ஏழைகள் நலனுக்காக செயல்படுத்தப்படும் 100 நாள் வேலை திட்டம் போன்றவற்றுக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும். பொதுமக்களின் அடிப்படை வருமானத்தை அதிகரிக்கும் வகையில் நாடு தழுவிய திட்டத்தை உருவாக்கி, அந்த பணத்தை பொதுமக்களின் வங்கிக் கணக்கில் சேர்க்க வேண்டும்.  கடந்த 5 ஆண்டுகளில் வேளாண் துறையின் வளர்ச்சி வெறும் 2.9 சதவீதமாக உள்ளது. இந்த நிலையில், அவர்களின் வருமானத்தை இரு மடங்காக எப்படி உயர்த்துவார்கள். விவசாயிகளின் வருமானம் இரு மடங்காக உயர வேண்டுமானால் வேளாண் துறையின் வளர்ச்சி 12 சதவீமாக இருக்க வேண்டும். நாட்டின் பொருளாதாரத்தில் 15.5 சதவீத பங்களிப்பு விவசாயிகளின் பங்காக இருக்கும் நிலையில் குறைந்து வரும் வேளாண் வளர்ச்சியால் வரும் 2024ம் ஆண்டில் நாட்டின் பொருளாதாரம் 5 டிரில்லியன் டாலராக உயர்வது சந்தேகமே. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நடத்தை விதிகளை மோடி மீறி விட்டார்
பிரித்விராஜ் சவான் தனது பேட்டியில் மேலும் கூறுகையில், ‘`டெல்லிக்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேசிய மாணவர் படை கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, இளம் மாணவர்களின் மனதை ஈர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் அரசியல் சொற்பொழிவை நிகழ்த்தி உள்ளார். இது தேர்தல் நடத்ததை விதி மீறலாகும், பிரதமராக உள்ளவர் தேர்தல் நடத்தை விதிகளை மீறியது,  அவரது பதவிக்கு உகந்ததல்ல. அவரது பேச்சு முழுவதும் நடத்தை விதியை மீறியதாக உள்ளது. அவர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றார்.



Tags : Congress , Farmers, Income, Budget, Crop Debt Relief, Federal Government, Congress
× RELATED வங்கிக் கணக்கு முடக்கத்தால் நிதிச்...