கொரோனா வைரஸ் தாக்கம் எதிரொலி புதுகை மாணவர்கள் 15 பேர் சீனாவில் தவிப்பு: அறையை விட்டு வெளியே வரமுடியல... சோறு, தண்ணீ இல்லாமல் கஷ்டப்படுறோம்...

பொன்னமராவதி: கொரோனா வைரஸ் தாக்கம் எதிரொலியாக புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 15 மருத்துவ மாணவர்கள் பரிதவித்து வருகின்றனர். ரூமை விட்டு வெளியே வரமுடியாமலும், சோறு மற்றும் தண்ணீர் இல்லாமலும் கடும் அவதிக்குள்ளாகியுள்ள

னர். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே வலையபட்டியை சேர்ந்தவர் பன் (34). இவர், சீனா வூஹான் பகுதியில் நானோ டெக்னாலஜி ஆராய்ச்சி படிப்புக்காக கடந்த டிசம்பர் 6ம் தேதி சென்றுள்ளார். அந்த நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கம் உள்ளதால், தன்னை போன்று இங்கு தங்கி படித்து வரும் பல மாணவர்களை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக மீட்க வேண்டும் என உருக்கமாக வீடியோவில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் பன் பேசியதாவது:  பல்கலைக்கழகத்திலிருந்து இன்றுதான் உணவு கொடுத்தார்கள். அதில் காய்கறி இல்லை. அரிசி, பால் டப்பா மட்டும்தான் இருந்தது. மாஸ்க் கொடுத்தாங்க. இங்கு என்ன நடக்குது என்று தெரியவில்லை.

என்னை போன்று நிறைய மாணவர்கள் தங்கியுள்ளோம். தனித்தனியாக அறையில் உள்ளோம். ஒரு மாணவருடன், மற்றொரு மாணவருக்கு தொடர்பு இல்லை. அந்த அளவுக்கு அறையில் இருக்கிறோம். யாரும் அறையை விட்டு வெளியே வரமுடியவில்லை. இங்கு என்ன நடக்கிறது என தெரியவில்லை. நான் ரூமை விட்டு வெளியே சென்று 8 நாட்களுக்கு மேலாகிறது. என்ன நடக்கிறது என்று புரியவில்லை. வேலையாட்கள் வருவதில்லை. அனைத்து பஸ், பிளைட் நிறுத்திவிட்டனர். தயவு செய்து தமிழக அரசும், இந்திய அரசும் இங்கிருந்து எப்படியாவது எங்களை அழைத்து செல்லுங்கள். இங்குள்ள எங்களுக்கு ஒவ்வொரு நிமிடமும் மரண வேதனையாக உள்ளது. என்னை போன்ற அனைத்து மாணவர்களையும் எப்படியாவது மீட்டு ஒரு இடத்தில் வைத்து எங்களுக்கு வைரஸ் தாக்குதல் இருக்கிறதா என நன்கு பரிசோதனை செய்த பின்னர் எங்களை விட்டால் போதும் என உருக்கமாக கூறியுள்ளார்.

கந்தர்வகோட்டை மருத்துவ மாணவர்: கந்தர்வகோட்டை தாலுகா அண்டனூரை சேர்ந்த பன்னீர்செல்வம்-கண்மணி தம்பதியின் 2வது மகன் மணிசங்கர்(23). இவர் சீனாவில் வூஹான் நகரில் உள்ள வூஹான் பல்கலைக்கழகத்தில் மருத்துவ மாணவராக கடந்த 2014-ம் ஆண்டு சேர்ந்தார். 5 ஆண்டுகளாக மருத்துவம் பயின்று வரும் நிலையில், பல்கலைக்கழகத்தில் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டு  இருந்தது. இதனால் மணிசங்கருடன் படிக்கும் மற்ற மாணவர்கள் சொந்த ஊருக்கு திரும்பினார்கள். மணிசங்கர், கடந்த 22ம் தேதி இரவு நாடு திரும்புவதற்காக வூஹான் விமான நிலையத்திற்கு சென்றார்.

ஆனால் சீனாவில் இருந்து யாரும் வெளியேறவும், வெளிநாடுகளில் இருந்து சீனாவுக்கு வரவும் அந்த நாட்டு அரசு தடை விதித்து இருப்பதால் மீண்டும் பல்கலைக்கழக விடுதிக்கு திருப்பி அனுப்பப்பட்டார். இதனால் மணிசங்கர் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகிறார். மகன்களின் நிலையை கேள்விப்பட்ட பெற்றோர்கள், அவர்களை மீட்டுதரும்படி அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதேபோல் புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் 15 மாணவர்கள் சீனாவில் மருத்துவம் படித்து வருகின்றனர். அவர்கள் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். அவர்களை மீட்க வேண்டும் என புதுக்கோட்டை மாவட்ட மக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: