பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் 2,000 லஞ்சம் வாங்கிய அரசு பெண் ஊழியர் கைது

பெரம்பலூர்:  பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தரை தளத்தில் மாவட்ட சமூக நல அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு எறைய சமுத்திரம் கிராமத்தை சேர்ந்த சாரதா என்பவர் தனது மகள் ஷாலினி திருமணத்திற்காக தாலிக்கு தங்கம் கே்ட்டு, விண்ணப்பித்து இருந்தார். இந்த விண்ணப்பத்தை பெரம்பலூர் ஒன்றிய ஊர்நல அலுவலராக பணிபுரிந்து வரும் ஷெரின்ஜாய்(43) என்பவர் பயனாளியை உறுதிப்படுத்த நேரடி விசாரணைக்காக எறைய சமுத்திரம் கிராமத்திற்கு சென்றுள்ளார். அப்போது விண்ணப்பதாரர் இல்லாததால், சாரதாவிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசி, பயனாளி பட்டியலில் உங்களது மகள் பெயரை சேர்ப்பதற்காக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்திருந்த விண்ணப்ப நகலுடன், லஞ்சமாக ₹2000 பணத்தையும் கொண்டு வரவேண்டுமென கூறியிருந்தார்.

இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சாரதா, ஊர்நல அலுவலர் ₹2 ஆயிரம் லஞ்சம் கேட்கிறார் என ஷாலினியை திருமணம் செய்யவுள்ள அதே ஊரை சேர்ந்த சதீஷ் என்பவரிடம் தெரிவித்தார். இதுகுறித்து பெரம்பலூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் சதீஷ் புகார் கொடுத்தார். இதனை தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் அறிவுரையின்பேரில், சதீஷ் 4 ஐநூறு ரூபாய்களாக கொண்டு வந்த பணத்தில் ரசாயனப்பவுடர் தடவிக் கொடுத்துள்ளனர். அந்த பணத்துடன் சதீஷ் நேற்று ஊர்நல அலுவலர் ஷெரின்ஜாயிடம் கொடுத்தார். அப்போது வெளியே மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி (பொ) சந்திரசேகர் மற்றும் போலீசார் ஷெரின்ஜாயை கைது செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories: