×

கன்னியாகுமரி எஸ்.எஸ்.ஐ. வில்சன் கொலையில் கைதான தீவிரவாதிகள் 2 பேர் மீதுபெங்களூர் போலீசும் வழக்குப்பதிவு: 50 ஆவணங்கள் சிக்கின

நாகர்கோவில்:  கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை போலீஸ் சோதனை சாவடியில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் (57), சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் கைதாகி உள்ள திருவிதாங்கோட்டை சேர்ந்த அப்துல் சமீம், நாகர்கோவில் மாலிக்தீனார் நகர் பகுதியை சேர்ந்த தவுபிக் ஆகியோரிடம் போலீஸ் காவலில் விசாரணை நடந்து வருகிறது.  இந்த கொலை வழக்கை சாதாரண கொலை வழக்காக விசாரித்து விட முடியாது. மிக பெரிய ஒரு சதி திட்டத்தின் ஆரம்பம்தான் வில்சன் கொலை சம்பவம் என கூறி உள்ளனர். இதுவரை விசாரணைக்கு நல்ல நிலையில் தான் தவுபிக், அப்துல் சமீம் ஒத்துழைப்பு கொடுத்துள்ளனர். தாக்குதல் தொடர்பான சில கேள்விகளுக்கு மட்டும் அவர்கள் பதில் அளிக்கவில்லை என போலீசார் கூறி உள்ளனர். இவர்களின் போலீஸ் காவல் நாளை மாலையுடன் முடிவடைகிறது. இதையடுத்து மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

இதற்கிடையே கொலைக்கு பயன்படுத்திய துப்பாக்கியை பெங்களூரில் கைதாகி உள்ள இஜாஸ் பாட்சாவிடம் இருந்து வாங்கியது தெரிய வந்தது. இஜாஸ் பாட்சாவிடம் நடந்த விசாரணையின் அடிப்படையில், துப்பாக்கி விற்றதாக அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ள பெங்களூர் போலீசார், அந்த வழக்கில் தவுபிக், அப்துல் சமீம் ஆகியோரையும் சேர்த்துள்ளனர். பெங்களூர், டெல்லியில் கைது செய்யப்பட்டவர்களின் வழக்குகள், என்.ஐ.ஏ.க்கு மாறி உள்ளன.  இந்த வழக்குகளுக்கு அடிப்படையான வில்சன் கொலை வழக்கு மட்டும் இன்னும் மாறவில்லை. போலீஸ் காவல் விசாரணை முடிந்ததும், இந்த வழக்கும் என்.ஐ.ஏக்கு மாறி விடும் என தெரிகிறது. இதற்காக கொச்சியில் இருந்து வந்த என்.ஐ.ஏ அதிகாரிகள் குமரியில் முகாமிட்டுள்ளனர்.


Tags : Kanyakumari SSI Bengaluru ,militants ,murder ,Wilson , Kanyakumari, S.S.I. Wilson, Murder, Terrorists, Bangalore, Case, 50 Documents
× RELATED சிரியாவில் தீவிரவாதிகள் தாக்குதலில் 22 பேர் பலி