தஞ்சை பெரிய கோயிலில் தமிழில் குடமுழுக்கு விழா: வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

மதுரை: தஞ்சை பெருவுடையார் கோயில் குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்தக் கோரிய மனுக்கள் ஐகோர்ட் மதுரை கிளையில் நீதிபதிகள் எம்.துரைச்சுவாமி, டி.ரவீந்திரன் ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தன.  தஞ்சை பெரிய கோயில் தேவஸ்தான வக்கீல் சந்திரசேகர், ‘‘யாகசாலை மற்றும் மகா அபிஷேகம் ஆகியவை தமிழில் மேற்கொள்ளப்படும். நடராஜர் மண்டபத்தில் 35 ஓதுவார்கள் திருமுறை பன்னிசை அகண்ட பாராயணம் வாசிப்பர்’’ என்றார். அரசுத் தரப்பில் வக்கீல் சண்முகநாதன் ஆஜராகி, ‘‘குடமுழுக்கு விழா தமிழ் மற்றும் சமஸ்கிருதத்தில் நடக்கும். தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்’’ என்றார். மனுதாரர்கள் தரப்பில், ‘‘குடமுழுக்கு விழா முழுமையாக தமிழில் இருக்க வேண்டும். யாகசாலை மட்டுமின்றி கருவறை மற்றும் குடமுழுக்கு உள்ளிட்ட அனைத்து நிலைகளிலும் தமிழ் இருக்க வேண்டும். கருவறைக்குள் தமிழை மறுப்பது சட்டவிரோதம்’’ என்றனர். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மனுக்கள் மீது தீர்ப்பளிப்பதாகக் கூறி தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

Related Stories: