×

குமரி அருகே ஏர்போர்ட் அமைக்க அதிகாரிகள் குழு மீண்டும் ஆய்வு: 7 நாட்கள் நடைபெறுகிறது

தென்தாமரைக்குளம்: குமரி அருகே சாமித்தோப்பில் விமான நிலையம் அமைப்பது தொடர்பாக அதிகாரிகள் குழுவினர் மீண்டும் ஆய்வை தொடங்கியுள்ளனர். சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரி அருகே உள்ள சாமித்தோப்பில் உள்ள உப்பள பகுதியில் விமான நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கான ஆய்வுகளை மேற்கொள்ள தமிழக அரசால் ₹13.50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனைதொடர்ந்து கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் 800 ஏக்கர் நிலப்பகுதியில் ஆய்வு நடைபெற்றது. ஆய்வறிக்கையும் மத்திய அரசின் சிவில் விமான போக்குவரத்து துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால், இந்த இடம் உகந்ததாக இல்லை என்று மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் அறிவித்தார்.  இந்தநிலையில் வசந்தகுமார் எம்.பி., விஜயகுமார் எம்.பி. ஆகியோர் விமான நிலையம் அமைக்க நடவடிக்கைகளை தொடங்கினர். இதனை தொடர்ந்து அரசு அங்கீகாரம் பெற்ற சென்னையில் அமைந்துள்ள ஜியாஸ் கன்சல்டிங் பிரைவேட் லிமிடெட் என்ற கம்பெனிக்கு அளவீடு செய்யும் பணிகளை தமிழக அரசு வழங்கியுள்ளது.  இந்த கம்பெனி, அளவீடு செய்யும் பணிகளை நேற்று தொடங்கியது.

நவீன கருவியின் மூலம் உப்பளம் பகுதி மற்றும் சுற்றுப்பகுதியில் 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள உயரமான மலைகள், கட்டிடங்கள், மரங்கள் செல்போன் டவர்கள் ஆகியவை குறித்து அளவீடு செய்யும் பணி நடந்தது. அவற்றை கணக்கெடுக்கும் பணிகளும் நேற்று தொடங்கியது. முதலில் புத்தளம் பகுதியிலும் பின்னர் சாமிதோப்பு உப்பளம் பகுதிகளிலும் அளவீடு செய்தனர். இதில் தமிழக அரசின் அங்கீகாரம் பெற்ற 4 நில அளவையாளர்கள் கலந்து கொண்டு அளவிடும் பணிகளில் ஈடுபட்டனர். இந்த அளவீடு செய்யும் பணிகள் தொடர்ந்து ஏழு நாட்கள் நடைபெறும் என தெரிகிறது. இந்த பணிகள் நிறைவடைந்து அறிக்கையை  அரசிடம் சமர்ப்பிக்க இருப்பதாகவும் தொடர்ந்து உயர் அதிகாரிகளின் உத்தரவு வந்த பின் அடுத்தகட்ட அளவீட்டு பணிகள் தொடரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


Tags : team ,Kumari ,airport ,re-inspection , Kumari, Airport, Committee of Officers, Inspection
× RELATED குமரியில் டாரஸ் லாரியால் தொடரும் விபத்து