கட்டுமான நிறுவன அதிபரின் வீட்டை உடைத்து 131 சவரன் நகைகள் கொள்ளை: மர்ம ஆசாமிகளுக்கு வலை

பூந்தமல்லி:  சென்னை வளசரவாக்கத்தில் கட்டுமான நிறுவன அதிபர் வீட்டை உடைத்து 131 சவரன் நகை மற்றும் பணம் கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி  வருகின்றனர். வளசரவாக்கம், ராதா அவென்யூ 1வது தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (47). கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறார்.  இவர், நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் வீட்டை பூட்டிக்கொண்டு குடும்பத்தினருடன் ஓட்டலுக்கு சென்றார். அங்கு சாப்பிட்ட பிறகு 11.30 மணியளவில்  திரும்பினர். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது துணிமணிகள் மற்றும் பொருட்கள் நாலாபுறமும் சிதறி கிடந்தது. படுக்கை அறையில் இருந்த  பீரோவும் உடைக்கப்பட்டு இருந்தது. லாக்கரை சோதித்தபோது 131 சவரன் நகை மற்றும் பணம் கொள்ளை போனது தெரிய வந்தது.

இதுகுறித்து வளசரவாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு உதவி ஆணையர் மகிமை வீரன் தலைமையில் போலீசார் வந்து ஆய்வு செய்தனர். அப்போது, வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமிராவில் உள்ள டிவிஆர் டிஸ்க்கையும் மர்மநபர்கள் எடுத்து சென்றது தெரிய வந்தது. இதையடுத்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.     விசாரணையில் ஆறுமுகம் தனது குடும்பத்தினருடன் வெளியே செல்வதை மறைந்திருந்து மர்ம நபர்கள் கண்காணித்துள்ளனர். பின்னர் வீட்டின் கேட்டை ஏறி குதித்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள்,  கதவின் பூட்டை உடைத்து லாக்கரில் இருந்த 131 சவரன் நகைகளை கொள்ளையடித்து  சென்றிருக்கலாம்.  

கொள்ளையர்களை பார்த்து வீட்டில் வளர்த்து வரும் நாய் நீண்ட நேரம் குரைத்துள்ளது. ஆனால் அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் யாரும் கண்டுகொள்ளவில்லையாம். நாய் குரைத்த சத்தத்தை கேட்டு அப்பகுதியினர் வந்து பார்த்திருந்தால் கொள்ளை நடந்திருக்க வாய்ப்பில்லை என போலீசார் தெரிவித்தனர். இரவு வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் ஓட்டலுக்கு சென்றபோது வீட்டை உடைத்து 131 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: